சித்த மருத்துவம்

மூலம் – நிர்மூலமாக்கும் சித்த மருந்துகள்

ஆசனவாய்ப் பகுதியில் உள்ள திசுக்களில் ரத்த நாளங்கள் அதிகம். அவை நீண்டு, விரிவடைந்து, பெரிதாவதால் மூலம் ஏற்படுகிறது.

கழிவறைக்குச் சென்று சுத்தம் செய்யும்போது கைக்குச் சிறு கட்டி போலத் தென்படுவது, மலத்தில் ரத்தம் கலந்திருப்பது, மலம் கழித்த பின்னரும் அந்த உணர்வு தொடர்வது, ஆசனவாய்ப் பகுதியில் அரிப்பு ஏற்படுவது, சளி போன்ற பொருள் மலத்தில் கலந்து வெளியேறுவது, மலம் கழிக்கும்போது வலியை உணர்வது, ஆசனவாய் சிவந்தும் புண்ணாகியும் காணப்படுவது, மலம் கழிக்க அதிகம் முக்குவது போன்றவை மூல வியாதியின் அறிகுறிகள்.

தொடர்ந்த மலச்சிக்கல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, அதிகமான பளுவைத் தொடர்ந்து தூக்குவது, கூடுதல் உடல் பருமன், கருவுற்று இருப்பது, ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து பணிபுரிவது போன்ற பல காரணங்களால் மூல வியாதி ஏற்படலாம்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் வெளிப்பூச்சு ஆகிய இரு விதங்களிலும் மிக எளிதாக மூலத்தையும் ரத்தமூலத்தையும் குணமாக்கலாம்.

உட்கொள்ளும் மருந்துகள்;
கடுக்காய்ப் பிஞ்சைப் பொன் வறுவலாக வறுத்து, சிற்றாமணக்கு மற்றும் நெய் விட்டு அரைத்து, தினசரி 30 மி.கி. அளவு உட்கொள்ளலாம்.

பிரண்டையைக் கணு போக்கி, நெய்விட்டு, வறுத்து, அரைத்துப் கொட்டைப்பாக்கு அளவு காலை மாலை உண்ணலாம்.

நாயுருவி விதையைப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து அருந்தலாம்.
ரோஜாப் பூ ஒரு பங்கு, கற்கண்டு மூன்று பங்கு சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் காலை மாலை உட்கொள்ள லாம்.

அத்திப் பழங்களை நீரில் ஊறவைத்து, காலை, மாலை மூன்று பழங்கள் சாப்பிடலாம்.
மிளகு 50 கிராம், பெருஞ்சீரகம் 70 கிராம் எடுத்து நுணுக்கி, தேன் 340 கிராம் சேர்த்து லேகியமாக்கிக் காலை, மாலை நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொள்ளலாம்.

எள்ளை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து, வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
ஓமம், சுக்கு, கடுக்காய், இலவங்கப்பட்டை சம அளவு எடுத்து, பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்கலாம்.

துத்தி இலை, வெங்காயம், பச்சைப் பயறு, தக்காளி இவற்றை நெய்யில் வதக்கி, துவையல் செய்து சாப்பிடலாம்.

நெய்தல் கிழங்கைப் பொடித்து, பாலில் கலந்து பருகலாம்.

சீரகம் 200 கிராம், உலர்ந்த கற்றாழை 120 கிராம், பனை வெல்லம் 120 கிராம் இவற்றுடன் தேவையான பால், நெய் சேர்த்து லேகியமாகச் செய்து காலை, மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஒடு, வெந்தயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் காலை, மாலை மோரில் கலந்து பருகலாம்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, துவையல் செய்து சாப்பிடலாம்.
வெந்தயத்தை வேகவைத்து, கடைந்து, ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.
சேம்பு இலையைப் புளிசேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

இலந்தை இலையைப் பச்சையாக அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து சாப்பிடலாம்.

கருணைக்கிழங்கைப் பால், தேன், நெய் சேர்த்து லேகியமாகச் செய்து, காலை, மாலை நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொள்ளலாம்.

மாதுளம் பூவை உலர்த்திப் பொடி செய்து, சம அளவு வேலம் பிசின் சேர்த்து, கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வில்வக்காயுடன் இஞ்சி, சோம்பு சேர்த்து நான்கு பங்கு நீரும் கலந்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

அதிவிடயப் பொடியை மூன்று கிராம் எடுத்து வெண்ணெயில் கலந்து தினமும் மூன்று வேளை உண்ணலாம்.

வெளிப்பூச்சாகப் பயன்படும் மருந்துகள்:
கண்டங்கத்திரிப் பூவை வாதுமை மற்றும் நெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
ஆகாயத்தாமரை இலையை அரைத்துக்கட்டலாம்.
கற்கடகசிங்கியைப் பொடித்து, நெருப்பில் இட்டுப் புகைக் காட்டலாம்.
கம்பைச் சமைத்துத் தயிர்விட்டுப் பிசைந்து, முளை மூலத்தில் வைத்துப் பற்றுப் போடலாம்.
சித்திர மூல வேரை நல்லெண்ணெய் விட்டு அரைத்துக் கட்டலாம்.
சேர்க்கவேண்டிய உணவுகள்:
வாழைப்பழம், பால், மோர், கீரைகள், ரத்த மூலத்துக்கு வாழைப்பிஞ்சு, வாழைப்பூ.
தினசரி இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
காரம், பொரித்த உணவுகள், கோழி இறைச்சி, வாழைக்காய்.

Related posts

வயிற்றுப் பிரச்சனைகள் தீர அங்காயப் பொடி!

admin

படுக்கைப் புண்கள், நோய்களை போக்கும் கானா வாழை

admin

வாய் நீர் சுரப்பிற்க்கான-சித்த மருந்து

admin

Leave a Comment