ஆரோக்கியத்துக்கு ரூட்… பீட்ரூட்!

”’பீட்ரூட் சாப்பிடு செல்லம்… ரத்தம் உடம்பில் ஊறும்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிச் சொல்லி ஊட்டுவோம். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, உடலில் புதிய ரத்த அணுக்கள் உருவாகத் துணைபுரிகிறது. அந்தக் காலத்தில் ரோமானியர்கள் காய்ச்சல், மலச்சிக்கல், புண், தோல் பிரச்னைகள் ஆகியவற்றைச் சரிப்படுத்த, பீட்ரூட்டைப் பயன்படுத்தினர். ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, வீக்கங்களைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பலன்கள் கொண்டது பீட்ரூட்..

பீட்ரூட்டின் மருத்துவப் பலன்கள் பற்றி புதுச்சேரியைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் ஸ்ரீதர் சொல்கிறார்… ‘பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்றவற்றை அதிக அளவு சாப்பிட்டும், ரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில், பீட்ரூட்டை வாரத்துக்கு நான்கு நாட்கள் சாப்பிட்டாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு, சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்ல பலனைத் தரும். பீட்ரூட் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், குழந்தைகள் அதன் நிறத்துக்காகவே விரும்பிச் சாப்பிடுவார்கள்’ என்றவர், பீட்ரூட்டின் பலன்களைப் பட்டியலிட்டார்…
பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சம்பழச் சாற்றில் தோய்த்து சாப்பிட்டு வர, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும்.
 பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
 கல்லீரல் கோளாறுகளுக்கும், பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கும் பீட்ரூட் மிகச் சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட்டால், அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குணமாகும்.
 பீட்ரூட்டை அரைத்துச் சாறு எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும்.
 பல மாதங்களாக மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரவு படுக்கப் போவதற்கு முன், பீட்ரூட் சாறை நீருடன் கலந்து அரை டம்ளர் அருந்தலாம்.
 பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
 தோலில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுக்கு இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால், பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
 பீட்ரூட் சாறுடன், படிகாரத்தைப் பொடியாக்கிச் சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களில்  தடவ, உடனடியாகச் சரியாகும்.
 தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால், கொப்புளங்கள் விரைவில் ஆறும்.
  பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொரி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர, அனைத்தும் குணமாகும்.
 புற்றுநோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகிவந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமையும் பீட்ரூட்டுக்கு உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *