தாய்ப்பாலின் மகத்துவம்

உலகம் முழுவதும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில் தாய்மார்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த தயக்கம் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் மிக அதிகமாக இருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் குறைவாக இருக்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணமாக இருப்பது தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்துவிடும் என்ற நம்பிக்கைதான்.

இந்த நம்பிக்கை இப்போது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் தாய்மார்களை அதிக அளவு தொற்றிக்கொண்டுள்ளது. 37 சதவீத குழந்தைகளுக்குத் தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பால் புகட்டப்படாத குழந்தைகளுக்கு இயற்கையாக தாய்ப்பால் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. இது போக தாய்ப்பால் உடல் பருமன், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், அலர்ஜி, பல் சொத்தை போன்ற நோய்கள் வராமல் குழந்தைகளை பாதுகாப்பதில் மிக முக்கிய பணியாற்றுகிறது.

குழந்தைகளைப் போலவே, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கரு உருவாகாமல் தடுக்கலாம்.

குறிப்பிட்ட காலம் வரை தாய்ப்பால் கொடுக்காததால் உலகம் முழுவதும் 5 வயதிற்கு உள்பட்ட 8 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் வருடந்தோறும் இறக்கின்றன. இந்தியாவில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் தாய்ப்பால் கிடைக்காமல் இறக்கின்றன என்கிறது உலகப் புகழ் பெற்ற ‘லேன்செட்’ மருத்துவ இதழ். இந்த இதழ், தாய்ப்பால் தொடர்பாக இந்தியாவில் சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது.

அந்த ஆய்வு முடிவில், “இந்தியாவில் தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், வருடந்தோறும் நிகழும் 5 வயதுக்குட்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரம் குழந்தைகளின் மரணத்தை தடுக்கலாம். 36 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதை தடுக்கலாம். 34 லட்சம் குழந்தைகளுக்கு நிமோனியா வராமல் பாதுகாக்கலாம். மார்பக புற்றுநோய் காரணமாக ஆண்டுதோறும் இறக்கும் 7 ஆயிரம் பெண்களை காப்பாற்றலாம். இந்த நோய்களுக்காக செலவிடப்படும் ரூ.4 ஆயிரத்து 300 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தாய்ப்பால் கொடுப்பதன்மூலம் குழந்தைகளின் மரணத்தை தடுப்பது ஒவ்வொரு தாயின் கையிலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *