கர்ப்பகாலத்தில் வாந்தியை போக்கும் கறிவேப்பிலை

மகளிர் வாரத்தை முன்னிட்டு, கர்ப்ப காலம், மகப்பேறு சமயத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் மருந்துகள் என்னென்ன. கர்ப்பிணிகளுக்கு ஆரம்ப கட்டத்தில் காலையில் மயக்கம், பசியின்மை, சோர்வு, வாந்தி போன்றவை இருக்கும். இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்கும் தேனீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை, சீரகம், மிளகு, தனியா, பனங்கற்கண்டு. அரை ஸ்பூன் சீரகம், 10 மிளகு, அரை ஸ்பூன் தனியா ஆகியவற்றை லேசாக தட்டி எடுக்கவும். இதனுடன் சிறிது கறிவேப்பிலை, பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்தால் தலை சுற்றல் வாந்தி பிரச்னை சரியாகும். ஜீரண உறுப்புகள் தூண்டப்படும். பசியின்மை சரியாகும். ஈரலை பலமாக்கும். குமட்டலை போக்கி ருசியை தரக்கூடியது. கால் வீக்கம் சரியாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் மயக்கம், வாந்தி போன்றவை முதல் 3 மாதங்கள் இருக்கும். வாந்தி ஏற்படும்போது தாய், சேய்க்கு சத்து கிடைக்காமல் போகிறது. தாய்க்கு ரத்தசோகை ஏற்படுவதுடன், குழந்தையின் எடை கூடாமல் போகிறது. வாந்தி மயக்க பிரச்னையை இந்த தேனீர் சரிசெய்கிறது. கர்ப்பகாலத்தில் குமட்டலை கட்டுப்படுத்தி பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

சிறிது சீரகப் பொடியுடன் ஒரு சிட்டிகை சமையல் உப்பு, 10 சொட்டு நெய் சேர்த்து உருண்டையாக உருட்டி சாப்பிட்டால் குமட்டல் சரியாகும். நன்றாக பசி எடுக்கும்.5 மாதங்களுக்கு பின் குழந்தைகள் உதைக்க ஆரம்பிக்கும். அப்போது வயிற்றுவலி ஏற்படும். இந்த வலியை போக்குவதற்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், 20 வெந்தயத்தை போட்டு சிறுதீயில் சூடுபடுத்த வேண்டும். வெந்தயம் பொறிந்ததும் எண்ணெயை மட்டும் எடுத்து தொப்புளை சுற்றி போடும்போது வயிற்றுவலி சரியாகும். விளக்கெண்ணெய், வெந்தயம் குளிர்ச்சி என்பதால் அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும்.

தாய்பாலை அதிகரிப்பதற்கான மருந்து தயாரிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடியை ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பின் காய்ச்சிய பால் சேர்க்கவும்.

இதை குடித்துவர தாய்பால் சுரப்பு அதிகரிக்கும். தண்ணீர் விட்டான் கிழங்கு பால் பெருக்கியாக விளங்குகிறது. உடலில் இருக்கும் அழுக்கை வெளியேற்றுகிறது. குழந்தை வளர்ச்சிக்கு சத்தான உணவு அவசியம். கீரை, காய்கறி, பழங்கள் மற்றும் பேரிச்சம் பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். கர்ப்பகாலத்தில் உடல்நலத்தில் அக்கறை செலுத்தினால் ஆரோக்கியமான குழந்தை கிடைக்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *