பசியை தூண்டும் சீரகம்

வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டதும், செரிமானத்தை தூண்ட கூடியதும், வறட்டு இருமலை போக்கவல்லதும், கண் கோளாறுகளுக்கு மருந்தாக விளங்குவதும், கல்லீரலை பலப்படுத்தும் தன்மை உடையதும், வயிற்று கோளாறுகளை போக்க கூடியதுமான சீரகம் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.

சீரகத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அகத்தை சீர்படுத்துவதால் இது சீரகம் என்று அழைக்கப்படுகிறது. வாயுவை போக்க கூடிய சீரகம் உள் உறுப்புகளை தூண்டும் தன்மை கொண்டது.சீரகத்தை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் அளவுக்கு வறுத்து பொடித்த சீரகப் பொடியுடன் சம அளவு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடும்போது வறட்டு இருமல் குறையும். இது, பசியை தூண்டும். தடைபட்ட மாதவிலக்கை தூண்டும்.

ஒரு வேளைக்கு 3 கிராம் அளவுக்கு சீரகத்தை 2 வேளை எடுத்துக் கொள்ளலாம். சீரகத்தை பயன்படுத்தி கண் கோளாறு, உதட்டில் ஏற்படும் தடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் சீரகப் பொடியுடன், சம அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். உதடுகளில் ஏற்படும் வீக்கம் சரியாகும். சீரகத்தை கொண்டு புளி ஏப்பத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: சீரகப்பொடி, பெருங்காயப்பொடி, உப்பு. 30 மில்லி தண்ணீரில் அரை ஸ்பூன் சீரகப்பொடி, கால் ஸ்பூன் பெருங்காயப்பொடி, சிறிது உப்பு சேர்த்து கலந்து உணவுக்கு பின்னால் குடித்தால் புளித்த ஏப்பம் சரியாகும். வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும். பசியின்மையை போக்கும். பேதியை நிறுத்த கூடியது. சீரகத்தை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: புதினா இலை, எலுமிச்சை, உப்பு, சீரகப்பொடி. 2 ஸ்பூன் புதினா இலைகளை சாறு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது உப்பு, 10 சொட்டு எலுமிச்சை சாறு, கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு நீர்விட்டு கலந்து உணவுக்கு பின்னால் குடித்தால் நன்கு செரிமானம் ஆகும். கல்லீரல் பலப்படும். வயிற்று வலி குணமாகும். உப்புசம் விலகிப் போகும். ரத்த ஓட்டம் சீராகும். உடல் குளிர்ச்சியாகும். சீரகத்தை பயன்படுத்தி அக்கி புண்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். 50 மில்லி தேங்காய் எண்ணெயில், 20 கிராம் சீரகம் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

இதை பயன்படுத்துவதன் மூலம் நரம்புகளில் ஏற்படும் வலி சரியாகும். அக்கி கொப்புளங்கள் குணமாகும்.ரசத்துக்கு மிகவும் முக்கியமாக பயன்படும் பொருளான சீரகம் உடலை சீராக வைக்க உதவுகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. மந்த பேதியை நிறுத்துகிறது. தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்குகிறது. மாதவிலக்கை தூண்டக் கூடியது. வாயுவை வெளித்தள்ள கூடியது. சீரகத்தை பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *