ஆண்கள் சாதாரணமாக நினைக்கக்கூடாத சில ஆரோக்கிய பிரச்சனைகள்!!!

பெண்களைப் போலவே ஆண்களுக்கும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிறைய ஏற்படும். ஆனால் அப்படி அடிக்கடி ஏற்படும் அந்த பிரச்சனைகளை பல ஆண்கள் சரியாக கண்டுகொள்வதில்லை. சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகின்றனர்.

அப்படி சாதாரணமாக நினைத்தால், பின் அதுவே உயிருக்கு உலை வைத்துவிடும். எனவே ஆண்கள் தங்களுக்கு ஏற்படும் ஒருசில பிரச்சனைகளை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகி போதிய சிகிச்சையை எடுக்க வேண்டும்.

இங்கு ஆண்கள் சாதாரணமாக நினைக்கக்கூடாத சில ஆரோக்கிய பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து அவற்றை புறக்கணிக்காமல் உடனே போதிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்து வாருங்கள்.

நெஞ்சு வலி

பல ஆண்கள் நெஞ்சு வலி மாரடைப்பின் போது தான் வரும் என்று நினைக்கின்றனர். ஆனால் இந்த நெஞ்சு வலி பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கும் ஒரு அறிகுறியாக உள்ளன. அதிலும் நிமோனியா, ஆஸ்துமா போன்றவற்றின் போதும் நெஞ்சு வலி வரும். அளவுக்கு அதிகமான மன அழுத்தமும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களாலும், அல்சர் அல்லது அளிவுக்கு அதிகமான அமில வெளிப்பாட்டு ஆண்களிடையே அதிகம் ஏற்படுகிறது. இவை முற்றிய நிலையில் கடுமையான நெஞ்சு வலி வரக்கூடும். எனவே நெஞ்சு வலி வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

மூச்சுத்திணறல்

ஆண்களிடையே ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மூச்சுத்திணறல். இது கார்டியோவாஸ்குலர் அமைப்பில் ஏதேனும் மோசமான நிலை ஏற்படும் போது சந்திக்கக்கூடும். மேலும் மூச்சுத்திணறலானது நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சிஓபிடி), நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, எம்பிசீமா, ஆஸ்துமா அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கும் அறிகுறியாகும். அதுமட்டுமின்றி, மூச்சுத்திணறலானது இரத்த சோகைக்கும் ஒரு முக்கிய அறிகுறியாகும்.

சோர்வு

ஆண்கள் அளவுக்கு அதிகமான வேலைப்பளுவினால் மிகுந்த சோர்வை உணர்வார்கள். இதனால் பலர் நன்கு தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோர்வானது பல்வேறு நோய்களுக்கும் முக்கிய அறிகுறியாக விளங்குகிறது. உதாரணமாக, புற்றுநோய், நீரிழிவு, ஆர்த்ரிடிஸ், நோய்த்தொற்று, சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய்கள் போன்றவற்றுடன் சோர்வானது தொடர்பு கொண்டுள்ளது. மேலும் தைராய்டு சுரப்பியில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும், மிகுந்த சோர்வை உணரக்கூடும். எனவே சோர்வை சாதாரணமாக நினைப்பதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.

மன இறுக்கம்

புள்ளி விபரங்கள் ஆண்கள் அதிக அளவில் மன இறுக்கத்திற்கு உள்ளவதாக சொல்கின்றன. அதிலும் ஆண்கள் அதிக அளவில் மன இறுக்கத்திற்கு உள்ளாவதற்கு காரணம், குடும்பமும், அலுவல வேலைப்பளுவும் தான். குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர, அயராமல் உழைக்கின்றனர். இதனால் ஆண்கள் அளவுக்கு அதிகமான சோர்வு, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்திற்கு உள்ளாகின்றனர். இப்படி மன இறுக்கம் அதிகரித்தால், மூளை அதிக அழுத்தத்திற்கு உட்பட்டு செயல்பாடு குறைந்து, அதிக கோபத்தை ஏற்படுத்துவதோடு, நாளடைவில் தற்கொலை முயற்சியையும் தூண்டிவிடும். எனவே மன இறுக்கம் அல்லது அழுத்தம் இருப்பது போல் இருந்தால், உடனே அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

ஞாபக மறதி

பெண்களை விட ஆண்களுக்கு ஞாபக மறதி அதிகம். அதிலும் நேற்று இரவு ஒரு இடத்தில் வைத்த பொருளை மறுநாள் காலையில் எங்கு வைத்தோம் என்று தெரியாமல் தேடுவார்கள் ஆண்கள். பொதுவாக இது வயதான பின் தான் ஏற்படும். ஆனால் தற்போது ஆண்களுக்கு இளமையிலேயே இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதனை சாதாரணமாக நினைத்து ஆண்கள் விட்டுவிட்டார், பின் மூளைக் கட்டிகள், அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய், மூளை பாதிப்பு போன்ற தீவிர பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வைட்டமின் குறைபாடுகள் கூட ஞாபக மறதியை ஏற்படுத்தும். எனவே அடிக்கடி எதையேனும் மறக்க நேரிட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

சிறுநீர் நெருக்கடி

பெண்களைப் போலவே ஆண்களுக்கு பிறப்புறுப்பில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதிலும் ஆண்களுக்கு சிறுநீரில் இரத்தம் வருவது அல்லது சிறுநீர் கழிக்க முடியாமல் தவிப்பது போன்றவை மிகவும் ஆபத்தானவை. ஏனெனில், இவை சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கான அறிகுறியாகும். அதிலும் சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, புரோஸ்டேட் புற்றுநோய், சிறுநீரக கல், சிறுநீர்ப்பையில் புண் போன்றவை இருப்பதற்கான அறிகுறியாகும். எனவே ஆண்கள் சிறுநீரில் வித்தியாசம் தெரிந்தால், அதனை சாதாரணமாக விட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *