சித்த மருத்துவம்

திருநீற்றுப்பச்சை மருத்துவ பயன்கள்

திருநீற்றுப்பச்சை அதிக மணமுடைய, வெளிறிய கருஞ்சிவப்பு நிறமான, பருத்த பூங்கொத்துகளையுடைய தாவரம். 1 மீ. வரை உயரமானவை. மலர்கள், இள மஞ்சள் நிறமானவை, அடர்த்தியான உரோமங்கள் காணப்படும். விதைகள் ஈரமான நிலையில் பசைப்பொருள் கொண்டவை. கற்பூரத் துளசி, பச்சிலை, உருத்திரச் சடை போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. இலை, விதை ஆகியவை மருத்துவப் பயன்கொண்டவை. விதைகளுக்குச் சப்ஜா விதை, ஷர்பத் விதை போன்ற பெயர்களும் உண்டு. இவை, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :

முழுத் தாவரமும் விறுவிறுப்பான சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இலை, வியர்வைப் பெருக்கியாகவும், தாதுவெப்பத்தை அகற்றி உடலைத் தேற்றவும் பயன்படும். பொதுவாக, சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.

இலை எண்ணெயிலிருந்து கற்பூரம் போன்றதொரு வாசனைப் பொருள் தயாரிக்கப்படுகின்றது. விதைகள் (சப்ஜா விதை) சீதபேதி, வெள்ளைபடுதல், இருமல், மூலநோய், மலச்சிக்கல் போன்றவற்றைக் குணமாக்கவும், சிறுநீரைப் பெருக்கவும் பயன்படுகின்றன. கால் ஆணி குணமாக பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து அரைத்த இலைகளை, அந்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.

கட்டிகள் உடைய : தேவையான அளவு இலைகளை அரைத்து கட்டியின் மீது பூச வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம் 3 நாட்கள் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

முகப்பருக்கள் மறைய : இலைச்சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோலச் செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

இருமல் கட்டுப்பட : இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.

வெள்ளைபடுதல் குணமாக : இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன், காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து, உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும், 10 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டுவர வேண்டும்.

தலைவலி குணமாக : இலையைக் கசக்கி மணத்தை நுகர வேண்டும்.

வாய்ப்புண் குணமாக : 4 இலைகளை வாயிலிட்டு மென்று சாற்றை விழுங்க வேண்டும்.

வாந்தி கட்டுப்பட : இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, 100 மி.லி. வெந்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.

வயிற்று கடுப்புக்கு, ரத்த கழிச்சல் குணமாக: ஒரு தேக்கரண்டி விதையை, ஒரு டம்ளர் நீரில் போட்டு 3 மணி நேரம் ஊற வைத்துச் சாப்பிட வேண்டும். தேள் கொட்டு வீக்கம், குடைச்சல் குணமாக இலை அரைத்து மிளகு 10 சேர்தரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தின் மீது பூச வேண்டும்.

Related posts

ஆஸ்துமா நோய் குணமாக ஓமியோபதி மருத்துவம்

admin

தலை வலிக்கான சித்த மருந்துகள்

admin

வெற்றிலை

admin

Leave a Comment