தாடி மீசை இருந்தால் ஏன் தலை குனிய வேண்டும்!

சில பெண்களுக்கு முகத்தில் வளரும் ரோமம் மிகுந்த தொல்லையையும் மன வருத்தத்தையும் கொடுக்கும். ஏற்கனவே வருத்தத்தில் இருக்கும் இவர்களை, சுற்றி இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளால் இன்னும் சங்கடப்படுத்துவர். ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா’ என்ற பழமொழியை சிலர் தவறாக உபயோகிப்பார்கள் இவர்களைப் பார்த்து. அழகு நிலையத்தில் முகத் திருத்தம் செய்ய வழி இருந்தாலும், சிலருக்கு அதுவும் உதவுவது இல்லை. ஹார்மோன் சமநிலையில் இல்லாததால் இப்படிப்பட்ட அவதிக்கு உள்ளாவார்கள். அப்படி அவஸ்தைப்பட்டவர்களில் ஒருவர்தான் லண்டனில் வசிக்கும் சீக்கிய மதத்தை சேர்ந்த ஹர்ணாம் கவுர்!

இவருக்கு Polycystic Ovary Syndrome (PCOS) என்கிற ஒருவகை மாதவிடாய் பிரச்னை உண்டு. இதனால் முகத்தில் ரோமங்கள் அடர்ந்து வளர்ந்தது. தினமும் அதை அகற்ற பெரும் பாடு படுவார். பள்ளியில் பலரும் இவரைப் பரிகசிப்பது வாடிக்கையான விஷயம் ஆயிற்று. இதனால் பெரும் மன உளைச்சலும் உண்டாயிற்று. மிகுந்த வலியால் ரோமங்களை அகற்றுவதும் சாத்தியமற்றுப் போனது.

குடும்பத்தினர் எவ்வளவோ ஆதரவு அளித்தும், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் இழிசொல் பொறுக்க முடியாமல், ஒரு தருணத்தில் உயிரையே மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அது கைகூட வில்லை என்ற நிலையில், தன்னை தனிமைப்
படுத்திக் கொண்டு இருக்க பழகிக் கொண்டார். தனக்குத்தானே பேசிக் கொள்ளும்போது, ‘வாழ வேண்டும்’ என்கிற ஆசை இவருக்குத் தைரியம் அளித்தது. அந்தத் தைரியம் சிந்திக்கவும் தூண்டியது. இதனால் தனது உடலை பிறருக்காக ஏன் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன் பின்னர் ரோமம் வளர்வதைத் தடுக்கவே இல்லை!

பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமுதாயத்தின் பார்வையை மாற்றி அமைத்தார் ஹர்ணாம். தாடியுடனே வெளியில் செல்ல ஆரம்பித்தார். அதோடு, தாடியுடன் மணப்பெண் கோலத்தில் பூச்சூடி ஒரு புகைப்படம் எடுக்கவும் காட்சி அளித்தார். இது வலைத்தளத்தில் பெரிதும் வலம் வந்தது. மக்களின் எண்ணத்தில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியது. வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை வரை சென்றவர், இன்று தன்னம்பிக்கையால் உலகில் உள்ள எல்லோர் கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளார்!

கவலைப்படுகிறவர்களுக்கு மட்டும்… முகத்தில் உள்ள மெல்லிய ரோமங்களை வீட்டிலேயே அகற்றும் வழிகள்

வாரம் இருமுறை தேனும் எலுமிச்சைச் சாறும் (4:1) கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடத்துக்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். எலுமிச்சை சருமத்தை மிருதுவாக்க உதவும்.வாரம் ஒருமுறை சர்க்கரையும் எலுமிச்சைச்சாறும் (3:1) தடவி, 15 நிமிடம் ஊற விட்டு, முகத்தை ஈரம் செய்து கைகளால் வருடுவதால் ரோமங்கள் நாளடைவில் உதிர்ந்து விடும்.
2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறில் 30 கிராம் கடலை மாவை நன்றாகக் கலந்து, 15 நிமிடத்துக்குப் பின் கைகளால் முகத்தை தேய்த்தால் நல்ல பலன் இருக்கும்.

தினமும் கடலை மாவு, தயிர், மஞ்சள் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கைகளால் தேய்த்தால் ரோமங்கள் அகன்று பொலிவுடன் திகழும். முட்டை வெள்ளைக்கருவில், அரை டேபிள்ஸ்பூன் சோளமாவும், ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையும் கலந்து, முகத்தில் எங்கு ரோமங்கள் நீக்க வேண்டுமா அங்கே தடவி, உலர விடவும். உலர்ந்ததும் தோல் உரிப்பதைப் போல உரித்தால் ரோமங்கள் அகன்று விடும். ஆனால், சற்று வலி இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *