ஞாபக மறதி நோயா?

ஒரு செயலை செய்யும் போது மனதை ஒருமுகப்படுத்துவது, ஈடுபாட்டுடன் ஒரு செயலைச் செய்வது, இவ்விரண்டும் மறதியைத் தடுப்பவை. மனதைப் பல துறைகளில் ஈடுபடச் செய்து ஒன்றிலும் நிதானிக்காமல் செய்வதும், செய்யும் பணியில் ஈடுபாடின்மையும் தான் மறதிக்குக் காரணம்.

புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவது, பேசிக்கொண்டே சமையல், கடவுளை வேண்டுவது போன்றவை எல்லாம் மூளையின் கூர்மையைக் குறைப்பவை. எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அந்த ஒரு செயலிலேயே கருத்துடன் ஈடுபடுவது என்றொரு பழக்கம் மறதியில்லாதிருக்க முதற்படியாகும்.

ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள இரவு படுக்கு முன் அன்று காலை விழித்தெழுந்தது முதல் உங்கள் அனுபவத்திற்கு வந்த சிறு சிறு நிகழ்ச்சிகளைக் கூட வரிசைப்படுத்தி நினைத்துப் பார்க்க முயற்சிக்கவும். இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மறதி சிறுகச் சிறுக விலகி ஞாபக சக்தி நன்கு வளரும். நாம் இவ்விதம் நாளின் முடிவில் சிந்தித்துப் பார்த்து வரிசைப்படுத்திக் கொண்டால் இரவில் மன அமைதி பெற்று நிம்மதியாகத் தூங்க முடியும். மறுநாள் மனம் களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சியுடனிருக்கும். மறதியே ஏற்படாது.

ஞாபக சக்தியை வளர்ப்பவைகளின் வரிசையில் பசுவின் நெய், பசுவின் பால், நெல்லிக்காய், வல்லாரை இலை, பிரம்மி, வசம்பு, வாசனை கோஷ்டம், சங்கக் குப்பி, சொக்கத் தங்கம் முதலியவைகளுக்கு முக்கிய இடமுண்டு. விஷயத்தை உடன் கிரஹிக்கும் சக்தி, கிரஹித்ததை மனத்திற்குள் அழியாது என்றும் புதுமையுடன் வைத்துக் கொள்ளும் சக்தி, அப்படியே ஏற்றி வைத்துக் கொண்டுள்ளதைச் சமயம் வரும்போது ஞாபகப்படுத்திக் கொள்ளும் சக்தி, ஞாபகப்படுத்தியதைப் பிறர் நன்கு அறியும்படி விளக்கும் சக்தி, இந்த நான்கையும் நாம் பெற்று மேதாவியாக விளங்க இந்தச் சரக்குகள் உதவும்.

பசுவின் நெய், பசுவின் பால், நெல்லிக்காய் இவற்றை உணவுப் பொருளாகத் தனித்து நிறையச் சாப்பிடலாம். வல்லாரையைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். வல்லாரை, பிரம்மி, சங்கக் குப்பி, கோஷ்டம் இந்த நான்கையும் நிழலில் உலர்த்தி நன்கு தூளாக்கி 2-4 டெஸிகிராம் அளவு தேனில், நெய்யில் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். வசம்பை ஆட்டுப் பாலிலோ பசுவின் பாலிலோ ஊறவைத்து நிழலில் உலர்த்தி 1/2 – குந்துமணி அளவு தண்ணீர் விட்டரைத்துச் சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *