கருப்பை வாய் புற்றுநோயை அறியும் ரகசியம்!

ஒருவருக்கு நோய் வந்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் பலதரப்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுவது அலோபதி மருத்துவத்தில் நடைமுறையில் உள்ளது. இதில் இருவகை உண்டு. ஒன்று, நோய் வந்த பின்பு பரிசோதிப்பது. உதாரணத்துக்கு, டெங்கு காய்ச்சல் பரிசோதனை. இதை வைத்து டெங்குவுக்கான சிகிச்சையைத் தீர்மானிக்க முடியும்.

பாதிக்கப்பட்ட நபரின் நோயைக் குணப்படுத்த முடியும்; ஆனால் தடுக்க முடியாது.மற்றொன்று, நோய் வரும்முன்னர் அல்லது நோய் இருப்பது வெளியில் தெரியாமல் இருக்கும்போது அதைத் தெரிந்து கொள்ளும் பரிசோதனை. இதற்கு ‘ஸ்கிரீனிங்’ என்று பெயர். இதன் மூலம் நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சை செய்து, உயிருக்கு ஆபத்து வராமல் தடுத்துவிட முடியும்.

ஆனால், இந்த ஸ்கிரீனிங் பரிசோதனையை குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் இதற்கான பலன் கிடைக்கும். இதற்கு ஓர் உதாரணம், ‘பாப் ஸ்மியர்’ (Pap smear) பரிசோதனை. பெண்களுக்கு ஏற்படுகிற கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனை இது. இதைப் பற்றி அறிவதற்கு முன்பு கருப்பை வாய் புற்றுநோய் (Uterine Cervical Cancer) குறித்து தெரிந்துகொள்வோமா?

‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus – HPV) என்கிற கிருமி கருப்பை வாயைத் தாக்கும்போது புற்றுநோய் வருகிறது. இந்தக் கிருமி தாம்பத்ய உறவு மூலமே பரவுகிறது. சிறிது சிறிதாக அங்குள்ள செல்களைத் தாக்கி புற்றுநோயை உண்டாக்குகிறது.

திருமணத்துக்கு முன்பே (15 வயது முதல் அல்லது அதற்குக் கீழே) பாலுறவில் ஈடுபடும் பெண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலுறவு வைத்துக்கொள்ளும் பெண்கள், பால்வினை நோய் உள்ள பெண்கள் ஆகியோரையே இது அதிகம் பாதிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த பெண்களுக்கு இது வருகிற அபாயம் அதிகம்.

இந்த நோய் பாதித்த பெண்களுக்கு அடிவயிறு கனமாக இருக்கும். வலியுடன் கூடிய மாதவிலக்கு ஏற்படுவதும், கட்டி கட்டியாக ரத்தப்போக்கு உண்டாவதும் இந்த நோய்க்கே உரித்தான அறிகுறிகள். சிலருக்கு அசாதாரணமான வயிற்றுவலி அடிக்கடி வரும். பாலுறவின்போது அதிக வலி ஏற்படுவதும், ரத்தக்கசிவு உண்டாவதும் இந்த நோயை அடையாளம் காட்டும் மற்ற அறிகுறிகள். ஆனால், இந்த அறிகுறிகள் ஏற்படும்வரை பெண்கள் காத்திருக்கக் கூடாது.

21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு இடைவெளியில் ‘பாப் ஸ்மியர்’ பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. 65 வயது வரை இதை மேற்கொள்ள முடியும். மாதவிலக்கு முடிந்து 7 முதல் 14 நாட்களுக்குள் இந்தச் சோதனையைச் செய்துகொள்ளலாம். கருப்பை வாயில் சுரக்கிற சுரப்பு நீரைப் பரிசோதித்து நோயை அறியும் மிக எளிய பரிசோதனை இது. இதில் வலி இல்லை. அறுவை சிகிச்சை இல்லை. செலவும் அதிகமில்லை. கருப்பை வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

1928ல் இதைக் கண்டுபிடித்தவர் டாக்டர் ஜார்ஜ் நிகோலஸ் பப்பானிக்கோலா எனும் அமெரிக்க வாழ் கிரேக்க ஆராய்ச்சி யாளர். இவரது காலத்தில் கருப்பை தொடர்பான நோய்களைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள கால்ப்போஸ்கோப்பி எனும் கருவி மட்டுமே இருந்தது. கருப்பைச் சுவரிலிருந்து சிறிதளவு திசுவை வெட்டி எடுத்து, ஆய்வகத்துக்கு அனுப்பி வைப்பார்கள்.

முடிவு தெரிய பத்து நாட்கள் வரை ஆகும். இந்தப் பரிசோதனையைச் செய்யும்போது பலருக்கும் நோய் முற்றிய நிலையில் இருக்கும். அப்போது அவர்களுக்கு சிகிச்சை கொடுத்தாலும் நோய் குணமாகுமா என்று சந்தேகப்படும்படியாகத்தான் இருக்கும். இந்த நிலைமையை மாற்ற பல்வேறு ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டனர்.

இந்த நேரத்தில் இவர், கினி பன்றிகளை வைத்து விலங்குகளின் உடலில் ஏற்படுகிற செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள் குறித்து பல ஆராய்ச்சிகளை செய்து வந்தார். குறிப்பாக, மாதவிலக்கு நாட்களில் பன்றிகளின் பெண்ணு றுப்பு செல்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று விரிவாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இந்த அடிப்படை மாற்றங்களை வைத்து பெண் பன்றி கர்ப்பமாகி உள்ளதா, இல்லையா என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியும் என்று தெரிந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து இதே ஆராய்ச்சியை மனிதர்களின் உடலிலும் செய்து பார்க்க விரும்பினார். தன் மனைவி மேரியின் கருப்பையையே தன் ஆராய்ச்சிக்களமாக அமைத்துக்கொண்டார். இதில் ஓரளவு வெற்றி கிடைத்ததும், நியூயார்க்கில் இருக்கும் பெண்கள் மருத்துவமனையுடன் தன் ஆராய்ச்சியை இணைத்துக்கொண்டார்.

அங்கு பணிபுரிந்த பன்னிரண்டு பெண்களின் பிறப்புறுப்புகளின் செல்களை ஆராய்ச்சி செய்து, ‘பெண்கள் கர்ப்பம் அடைந்துள்ளார்களா என்பதை மிக ஆரம்ப நிலையிலேயே கருப்பை செல்களைப் பார்த்து சொல்லிவிடலாம்’ என்பதை 1925ல் நிரூபித்தார்.

இதற்குப் பிறகு வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதீத மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்ற கருப்பை நோய்களால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அப்போது பலரது கருப்பை செல்களில் இயற்கைக்கு மாறாக புதிய மாற்றங்கள் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இவை புற்றுநோய் செல்கள் என்பதைப் புரிந்துகொண்டார். எனவே, இந்தப் பரிசோதனை மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோயை அதன் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட முடியும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். தான் கண்டுபிடித்த அந்தப் பரிசோதனைக்கு ‘பாப் ஸ்மியர்’ எனப் பெயரிட்டார். இதுதான் இன்றைக்கு பல கோடிப் பெண்களைக் கருப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *