சரியாக தூங்காவிட்டாலும் புற்றுநோய் தாக்கும்!

மனிதன் தினமும் சரியாக தூங்காவிட் டாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மனிதன் தோன்றிய காலம் முதல் தற்போது வரை  தூக்கம் என்பது வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் ஒரு நாள் தூக்கம் என்பது 12 மணி  நேரமாக இருந்தது. ஒரு நாளின் 24 மணி நேரத்தில் பகல் 12 மணி நேரம் உழைப்பதற்காவும், இரவு 12 மணி நேரம் உறங்கி ஓய்வெடுப்பதற்காகவும்  பிரிக்கப்பட்டது. ஆனால் கடந்த 100 ஆண்டில் இது முற்றிலுமாக மாறியுள்ளது.

இன்றைய மனிதன் குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், இதற்கு குறைவான நேரம்  தூங்கும் மனிதர்களுக்கு ரத்தஅழுத்தம், உடல்கொழுப்பு, உடல்பருமன், சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள்  உள்ளதாக ஏற்கவே பல்வேறு மருத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளொன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாக  தூங்குபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக சமீபகால ஆய்வுகள் தெரிவித்துள்ளது. குறைந்த நேரம் தூங்குபவர்களில் சுமார் 12 சதவீதம்  பேர் சராசரி வாழ்நாளுக்கு முன்னதாகவே உயிரிழக்கின்றனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் பிரபல மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களான ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹாவார்ட், மேன்செஸ்டர் உள்ளிட்ட  பல்கலைக்கழங்கள் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கூறுகையில், மனித வாழ்வின் சராசரி தூக்கம்  என்பது 8 மணிநேரமாகும். ஆனால், இன்றைய நவீன உலகில் கம்ப்யூட்டர், செல்போன் போன்வற்றிலேயே பெரும்பாலானவர்கள் நேரத்தை  செலவிடுகின்றனர். இதனால் அவர்களின் தூங்கும் நேரம் குறைகிறது. நாளடைவில் அதுவே அவர்களின் வாடிக்கையாகிவிடுகிறது.

இது அவர்களின் உடல்நலத்தை வெகுவாக பாதித்து, இதயநோய், மனஅழுத்தம், ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.  இது தவிர 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கும் நபரில், சுமார் 2 ஆயிரம் பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்றனர். அதிக  நேரம் தூங்கினாலும் உடல் எடை அதிகரித்து பல்வேறு வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதேவேளை மிகவும் குறைவான நேரம்  உறங்கினாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். குறிப்பாக இரவு வேலைக்கு செல்பவர்கள் பகலில் சரிவர தூங்கு வதில்லை. எனவே, சரியான நேரத்தில்  உறங்கி எழுந்து உடல்நலத்தை ஆரோக்கியத்துடன் வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *