மருத்துவ கட்டுரைகள்

மனநலப் பிரச்னைகளை அறிவது எப்படி?

மனசே மனசே: டாக்டர் சித்ரா அரவிந்த் மனநல நிபுணர்

அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் இருக்கின்ற மனநலக் கோளாறுகளினால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லில் அடங்காதவை. மனநலப்  பிரச்னையின் அடையாளம் மற்றும் அறிகுறிகளை தெரிந்து கொள்வதுதான், அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல் படி.

வீட்டில் ஒருவருக்கு மனநலப் பிரச்னை ஏற்பட்டால் நன்கு படித்த, விவரமறிந்தோர் கூட பல தருணங்களில் ‘சைக்கலாஜிஸ்டிடம் போவதா,  சைக்கியாட்டிரிஸ்டிடம் போவதா’ என குழப்பமடைகின்றனர். சைக்கலாஜிஸ்ட் (Psychologist), சைக்கியாட்டிரிஸ்ட் (Psychiatrist)  இந்த  இருவருக்கும் வித்தியாசம் என்ன?

இரண்டுமே வெவ்வேறு துறைகள்… மனநோய் மருத்துவர் (Psychiatrist) என்பவர் உளவியல் துறையில் ‘மருத்துவ டாக்டர்’ (M.D. Psychiatry)  பட்டம் பெற்றவராக இருப்பார். இவர், மனநலம் சம்பந்தப்பட்ட   பிரச்னைகளை சரியாகக் கணித்து, பெரும்பாலும் மருந்துகள் மற்றும் மின் அதிர்வு  மூலம் சிகிச்சை   அளிப்பார்.

மனநல ஆலோசகர் என்பவர் உளவியல் படிப்பில் டாக்டர் பட்டம் (உளவியலாளர் / Psychologist) அல்லது மனநல ஆலோசனை படிப்பில்  முதுகலைப் பட்டம் பெற்றவராக இருப்பார் (Psychology / Psychiatric social work / Guidance  counseling). இவர் மருந்துகள் இன்றி கவுன்சலிங்  மற்றும் சைக்கோதெரபி மூலம் சிகிச்சை அளிப்பார்.

உளவியல் ஆலோசனை வழங்குவதற்கான உரிமமோ, சிறப்புப் பயிற்சி பெற்ற தகுதி பெற்றவரிடமோ மட்டுமே ஆலோசனைக்கு செல்ல வேண்டும்.  மனது சார்ந்த விஷயமானதால், இதற்கென தகுதி பெற்றவர்கள் மட்டுமே மனநல ஆலோசனை (counseling) மற்றும் சிகிச்சை (psychotherapy)  வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மனநல ஆலோசகர், ஒருவரிடம் அறிவியல் அணுகுமுறையில் பேசி, பிரச்னைகளை அவர்களின் கண்ணோட்டத்திலிருந்து பொறுமையாக கேட்டுத்  தெரிந்து கொள்வார். பின்னர் அதனை, உளவியல் ரீதியாக ஆராய்ந்து அதற்கான சரியான வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அளிப்பார்.

அவர்களின் பிரச்னைக்கான தீர்வை அட்வைஸாக கொடுக்காமல், பாதிக்கப்பட்டவரே தேர்ந்தெடுக்க வழிவகுப்பார். ஒருவரின் சிந்தனை (thinking),  உணர்வுகள் (feeling) மற்றும் செயல்பாடுகளில் (behavior) சரியான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம்  ஏற்பட வழி வகுப்பார். வாழ்வியல் திறன்கள், ஆரோக்கிய வாழ்க்கை பாணி (Healthy Life Style) குறித்த பயிற்சி மற்றும் மனதின் செயல்பாடுகளைக்  குறித்த புரிதல் ஏற்படுத்தும் உள கல்வி (psychoeducation) போன்ற உத்திகளும் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக உளவியல் காரணங்களால் ஏற்படும் மனநலப் பிரச்னைகளான மனப்பதற்ற உள நோய் (Anxiety Disorders), அளவுக்கு மீறிய அச்சம்  (Phobia), மனச்சோர்வு (Depression) மற்றும் மன அழுத்தம் (Stress), கணவன், மனைவி உறவுகளில் ஏற்படும் பிரச்னைகள், டீன் ஏஜ்  மனக்குழப்பங்கள், விவாகரத்து,

நெருக்கமானவரின் மரணம்/பிரிவு, படிப்பில் கவனம் குறைதல் போன்ற பல பிரச்னைகளுக்கு மனநல ஆலோசகர் (psychologist/professionally  trained counselors) அளிக்கும் ஆலோசனை மற்றும் சைக்கோதெரபியே போதுமானதாகும். உயிரியல் மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படும்  மனநோய்களுக்கு (உதாரணம்: மனச்சிதைவு நோய்), மனநோய் மருத்துவர் அளிக்கும் மருந்துகளும் தேவை.

பெரியவர்களுக்கான பொது அறிகுறிகள்

1.தெளிவற்ற சிந்தனை
2.நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல்
3.மாறிவரும் அதிக சந்தோஷம் / அதிக கவலை
4.மிகுந்த / தேவையில்லாத பயம், சோகம் அல்லது பதற்றம்
5.தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது
6.உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது
7.அளவுக்கு அதிகமான கோபம்/ குற்றவுணர்வு
8.இல்லாத விஷயத்தைப் பார்ப்பது / யாரோ தம் காதில் பேசுவது போல உணர்தல்
9.தினசரி செயல்பாடுகளைக் கூட சமாளிக்க முடியாமல் திணறுதல்
10.தற்கொலை எண்ணங்கள்
11.பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியாத உடற்கோளாறுகள் (உதாரணம்: எரிச்சல் கொண்ட குடல் நோய் / Irritable  Bowel Syndrome)
12.அளவுக்கு அதிகமான, கட்டுப்படுத்த முடியாத மது / போதைப் பழக்கம்
13.எதிலும் நாட்டமின்மை
14.திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யும், விரும்பத்தகாத எண்ணங்கள் / திரும்பத் திரும்ப ஒரே செயலை கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது  (உதாரணம்: அடுப்பை அணைத்து விட்டோமா என பலமுறை சரிபார்ப்பது/ கையை கழுவிக்கொண்டே இருப்பது)
15.காரணமில்லாமல் மற்றவர் மீது சந்தேகப்படுவது
16.எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்திருப்பது
17.தன்னைத் தானே காயப்படுத்தி கொள்ளுதல்
18.அதீதமாக சுத்தம் பார்ப்பது
19.தொடர்ந்து பாலியல் எண்ணங்களோ/ ஆசையோ இல்லாமல் இருத்தல்
20.பாலுறவில் வெறுப்பு / துணையை இதுசம்பந்தமாக தவிர்ப்பது
21.விரைவாக விந்து வெளியேறுதல் / உச்சகட்டம் அடையாதிருத்தல் / அடைவதில் தாமதம்
22.வழக்கத்துக்கு மாறான பாலியல் விருப்பங்கள் (உயிரில்லாத பொருட்கள், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக உடை மாற்றுதல், பிறரையோ,  தன்னைத் தானோ துன்புறுத்துதல், அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப் பார்த்தல், பிறப்புறுப்பை அந்நியரிடம் காட்டுதல், குழந்தையுடன் உறவு  கொள்ளுதல் என ஆரோக்கியமற்ற முறையில் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுபவர்கள்.)

டீன் ஏஜ் பருவத்தினருக்கான பொது அறிகுறிகள்

1.பள்ளி செயல்திறனில் மாறுதல், திடீரென மதிப்பெண் குறைதல்
2.தினசரி செயல்பாடுகள் மற்றும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போவது
3.உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம்
4.உடல் ரீதியான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுதல்
5.பள்ளிக்குச் செல்லாமலிருத்தல், திருடுதல், பொருட்களை சேதம் செய்தல், கட்டுப்படாமல் இருத்தல்
6.உடல் எடை குறித்த மிகுந்த பயம் / பதற்றம்
7.பசியின்மை மற்றும் தற்கொலை எண்ணங்களுடன் கூடிய நீடித்திருக்கும் எதிர்மறை மனநிலை
8.அடிக்கடி கோபப்படுதல்
9.கட்டுப்படுத்த முடியாத போதை / குடிப்பழக்கம்
10.பிடித்த விஷயத்தில் நாட்டமில்லாமல் போவது
11.குறிப்பிட்ட வயதுக்கு பின்னரும் கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கழித்தல்
12.திரும்பத் திரும்ப வரும் துன்புறுத்தும் எண்ணங்கள், திரும்பத் திரும்ப கை கழுவுவது மற்றும் சரி பார்ப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும்  செயல்பாடுகள்.

சிறு குழந்தைகளுக்கான பொது அறிகுறிகள்

1.பள்ளி செயல்திறனில் மாற்றம் ஏற்படுதல்
2.முயற்சியெடுத்தும் குறைந்த மதிப்பெண் பெறுதல்
3.அதிகமான கவலை / பதற்றம் / பயம்
4.ஒரிடத்தில் உட்கார முடியாமல் நிலைகொள்ளாமல் இருத்தல் (Hyperactive)
5.தொடர்ந்து வரும் கெட்ட கனவுகள்
6.தொடர்ந்து நிர்வாகத்துக்கு பணிந்து போகாமல் இருத்தல் மற்றும் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபடுதல்
7.அடிக்கடி எரிந்து விழுதல் / கோபப்படுதல் (Temper tantrums)
8.கவனம் செலுத்த முடியாத நிலை ( கவனச் சிதறல் / Poor concentration)
9.வார்த்தைகளையும் ஒலியையும் தொடர்புபடுத்த முடியாமல் போவது
10.ஒருவர் சொல்வதை பின்பற்ற இயலாமை (not able to follow directions)
11.அம்மாவின் கண்ணை பார்க்காமலிருத்தல், சிரித்தால் பதிலுக்கு சிரிக்காமல் இருத்தல்
12.கற்றல் குறைபாடுகளான எழுதுவது, படிப்பது கணக்கு போடுவது போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிட்ட பிரச்னைகள் (Learning Disabilities)
13.பேசத் தொடங்குவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருத்தல்.

இந்த அறிகுறிகள் எல்லோருக்கும் இயல்பாக இருப்பது போலவே தோன்றக் கூடியவையே. எப்போது அவை அளவுக்கு அதிகமாகவும் நீடித்தும்  காணப்பட்டு, ஒருவரின் தனிப்பட்ட திறனைப் பாதித்து, தினசரி வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதோ, அப்போது உளவியல் நிபுணரிடம் ஆலோசனை  பெற வேண்டியது அவசியமாகிறது. மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தன்னைத் தானே மாற்றி கொள்பவன்தான் மனநலம்வாய்ந்தவனாகக்  கருதப்படுகிறான்.

அப்படி மாற இயலாமல் வாழ்க்கை பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போகும் பலவீன மனநிலை கொண்டிருப்பவர்களே பெரும்பாலும் மனநல  பாதிப்புக்கு உள்ளாகின்றனர். முற்றிய மனநலக் கோளாறால் பாதிக்கபட்டவர்கள்தான் மனநல சிகிச்சை பெற வேண்டும் என்பதில்லை. வாழ்க்கையில்  ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் உடைந்து போகும் தருணங்களிலும் ஆலோசனை பெறுவது அவசியம்.

உடலுக்கு வரும் ஜுரம் போன்ற சிறிய உபாதைக்கு மருத்துவரை அணுகி நலம் பெறுவது போலத்தான் மனதுக்கு பிரச்னையெனில் மனநல  ஆலோசகரை அணுகுவதும்… இதை எல்லோரும் உணர்ந்து விட்டால் அதுவே ஆரோக்கியமான மாற்றம்தான். இம்மாற்றத்தினால் ஏற்படும் நல்ல மன  ஆரோக்கியத்தால் நம் மக்களின் திறனும் பல மடங்கு அதிகரிக்கும். மனம் தெளிவாக,

சந்தோஷமாக இருந்தால் மட்டுமே, ஒருவர் தன் முழுத்திறனுடன் செயல்பட முடியும். இதனால் வீட்டில் உறவுகளும் மேம்பட்டு  குடும்பமேமகிழ்ச்சியாக இருக்கும். பச்சிளம் குழந்தை முதல் முதியோர் வரை எல்லோரையும் பாதிக்கும் மன அழுத்தத்தைப் (Stress) பற்றி விரிவாக  அடுத்து வரும் இதழ்களில் பார்ப்போம்.

பள்ளிக்கூடம் போகாத பாலா!

5ம் வகுப்பு படிக்கும் பாலா ஒரு மாதமாகவே பள்ளி செல்ல மறுப்பதாகக் கூறினர். கட்டாயப்படுத்தி அழைத்து சென்றால் மிகவும் முரண்டு  பிடிப்பதாகவும் பள்ளியின் கேட்டைப் பிடித்து பயந்து சத்தம் போட்டு அழுவதாகவும் கூறினார்கள். ரொம்பவும் வற்புறுத்தினால், அங்கேயே வாந்தி  எடுத்து, வலியில் துடிப்பதால் அவனை மேலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் சொன்னார்கள்.

பாலா பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்து செல்லப்பட்டு, பல்வேறு மருத்துவ சோதனை செய்து கொண்டதன் ஆவணங்களும் பெற்றோரிடம்  இருந்தன. ஒரு மருத்துவ பரிசோதனையில் கூட வாந்தி, தலைவலி, வயிற்றுவலி என அவனது உடல் உபாதைகளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காதது  அடுத்த அதிர்ச்சி. ‘என் மகனுக்கு பைத்தியமா மேடம்?’ என பலவீனமாக கேட்டார் பாலாவின் அம்மா. அவனது அப்பாவோ, ‘நம் பரம்பரையில் யாருக்கும் அப்படி  இல்லை. அவன் ஸ்கூலுக்குப் போக சோம்பேறித்தனம் பட்டுட்டு பொய் சொல்றான்… நாலு வைச்சா சரியாயிரும்… எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்’  என மனைவியைக் கடிந்து கொண்டார்.

பாலாவிடம் தனியாக பேசினேன். சகஜ நிலைக்கு கொண்டு வரவே சில நாட்கள் ஆனது. பின்னர், விளையாட்டு முறையில் (Play Therapy) அணுகி   சில உளவியல் சோதனைகளுக்கு பின்னர், பிரச்னையின் காரணத்தை புரிந்து கொண்டேன்.  சமீபத்தில் அவன் பெற்றோர் சண்டை போடுவதை  அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறான். பள்ளியில், பாலாவின் நெருங்கிய நண்பன் தன் பெற்றோர் பிரிந்து வாழ்வதாகவும் அவன் அத்தை வீட்டில் இருப்பதாகவும் கூறியதைக் கேட்டது  முதல், பாலாவுக்கு தன் பெற்றோரும் தன்னை விட்டு பிரிந்து விடுவார்களோ என பயம்.

பள்ளியில் இருந்து வீட்டுக்குப் போவதற்குள், ‘அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ’, ‘அப்பாவையும் அம்மாவையும் இனி பார்க்க முடியாமல் போய்  விடுமோ’ என பதற்றம் கொண்டுள்ளான். இதனால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், ஆசிரியரிடம் திட்டு வாங்கியிருக்கிறான். எல்லாம் சேர்ந்தே  அவன் பள்ளி செல்ல மறுத்துள்ளான். இதுபோன்ற மனநோய்க்கு பெயர் ‘பிரிவு குறித்த மனப்பதற்றம்’ (Seperation Anxiety Disorder). பாலாவின் பெற்றோரிடம் அவனுடைய மனப்போராட்டம் பற்றி கூறி, ‘அவன் வேண்டுமென்றே நடிக்கவில்லை… இந்த மனநிலையினால்தான்  அவனுக்கு வலி மற்றும் பயம் ஏற்பட்டுள்ளது’ என விளக்கினேன். அவர்கள் அவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெளிவுபடுத்தினேன்.

பதற்றத்தைச் சமாளிக்கும் வழிமுறையையும் பாலாவுக்குக் கற்று கொடுத்தேன். அவனது ஆசிரியரிடம் இந்தப் பிரச்னையை புரியவைக்க சொன்னேன்.  இதனால், அவனை வித்தியாசமாக பாவிக்காமல், மற்ற மாணவர் போலவே அணுகி, நல்ல வழிகாட்டியாக உதவ முடிந்தது. இப்போது பாலா எவ்வித  பயமோ, பதற்றமோ, உடல் நலிவு புகாரோ இல்லாமல் மகிழ்ச்சியாக பள்ளி சென்று படித்து வருகிறான்.

கூட்டுக் குடும்பங்கள் உடைந்துபோன இந்தக் காலகட்டத்தில்தான் பெற்றோரின் பொறுப்பு இரு மடங்காகிறது. பிள்ளைகளின் மனநிலையில் ஏதேனும்  மாற்றம் ஏற்பட்டால், பிரச்னை சிறியதாக இருக்கும்போதே, பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசி தெளிவுபடுத்தினால், எந்தப் பிரச்னையிலிருந்தும்  மீட்கலாம். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் பிள்ளைகள் கவனிப்பாரின்றி பாதுகாப்புணர்வு இழந்து, பலவித பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.  இதற்காக, எல்லா நேரமும் பிள்ளைகளுடனே செலவிட வேண்டும் என்பதில்லை. தரமான நேரம் எனப்படும் Quality Time செலவு செய்தால் போதும்.  20 நிமிடமே என்றாலும் அதை மகிழ்ச்சியாக பிள்ளைகளிடம் செலவழித்தாலே போதும்.

பிள்ளைகளுக்கு உணவும், இடமும், ஐபேட், டி.வி.யும் தந்தால் மட்டும் போதாது. அவன் சந்தோஷமாக உள்ளானா என கண்காணிக்க வேண்டியதும்  பெற்றோரின் கடமையே. பெற்றோரிடம் எதையும் பகிர்ந்தது கொள்ளலாம் என்ற நம்பிக்கையை பிள்ளைகளுக்கு விதைக்க வேண்டியதும் அவசியம்.

Related posts

பொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்!!!

admin

மாதவிடாய் நிறுத்தத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!

admin

வளர்ச்சிக்குத் தடையா?

admin

Leave a Comment