ஒருவரது வயிற்றில் சேரும் அதிகக் கொழுப்பானது சுகாதார சீர்கேட்டின் வெளிப்பாடாக இருக்கக்கூடும்

ஒருவரது வயிற்றில் சேரும் அதிகக் கொழுப்பானது அவரது சுகாதார சீர்கேட்டின் வெளிப்பாடாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தங்களின் சமீபத்திய ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டில் நியூயார்க்கின் குரூவ் பொறியியல் கல்லூரியின் துணைப் பேராசிரியரான நிர் கிராக்கரும் அவரது தந்தையும் இணைந்து வயிற்றுப் பருமன் தொடர்புடைய சுகாதார ஆபத்துகளைத் தெரிந்துகொள்ளும் புதிய முறையைக் கண்டறிந்துள்ளனர்.

பெரும்பாலும் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்எஸ்) கொண்டு ஒருவரது சுகாதார நிலையை அளவிடப்படுவதைவிட இவர்களின் கண்டுபிடிப்பான உடல் பருமன் வரையறை (ஏபிஎஸ்ஐ) துல்லியமாக இறப்பு விகிதத்தைக் கணிப்பதாக கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்ட இணையதளப்பத்திரிகையான பிலோஸ் ஒன் தெரிவிக்கின்றது. இந்த முடிவுகள் கடந்த 1999-2004 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை ஆய்வின் குறிப்புகளை நெருக்கமாகக் கணித்ததன்மூலம் எடுக்கப்பட்டவை ஆகும்.

பல்வேறு மக்களிடையே ஏற்படும் அகால மரணம் குறித்து உடல் பருமன் வரையறை சோதனை தெளிவாகத் தெரிவிக்கக்கூடும் என்பதற்கு இந்த ஆய்வின் முடிவு வலுவான சான்றுகளை அளிக்கின்றது. அதுமட்டுமின்றி, இடுப்பு சுற்றளவு, இடுப்பு மற்றும் உயரம் விகிதம் போன்றவற்றை அளந்து வயிற்றுப் பருமனைக் கணக்கிடும் முறைகளைவிட ஏபிஎஸ்ஐ துல்லியமான அளவுகளைக் காட்டியது. மேலும், ஏழு வருடங்களுக்கு மேல் எடுக்கப்பட்ட இரண்டு ஆய்வு முடிவுகளை ஒப்பிட்டு இந்தப் புதிய முறை கணக்கிடப்பட்டிருப்பதால் இதன்மூலம் இறப்பு விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எளிதாகக் கண்டறிய முடிந்தது.

இதிலும் குறிப்பாக சமீபத்திய ஏபிஎஸ்ஐ கணிப்புகளின் இறப்பு விகிதங்கள் நம்பகமாக இருப்பதால் ஒருவரின் ஏபிஎஸ்ஐயைக் குறைத்து நீண்ட நாள் வாழ வழி செய்யக்கூடும் மக்களின் வாழ்க்கைமுறை மாற்றங்கள் அல்லது பிற தலையீடுகள் குறித்த புதிய ஆய்வுகள் அவசியம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *