மருத்துவ கட்டுரைகள்

மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

என்ன காரணம்?

உடல் உழைப்பு குறைந்து வருவதும் உடற்பயிற்சி இல்லாததும் முக்கியக் காரணங்கள். நாட்டில் கணினித்துறை பெருவளர்ச்சி பெற்ற பிறகு 35 சதவிகித இளைஞர்கள் அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு மூட்டுத்தசை இறுகி மூட்டுவலி வந்துவிடுகிறது. மாறிவரும் உணவுமுறை அடுத்த காரணம். இன்றைய இளைய தலைமுறையினர் இந்தியப் பாரம்பரிய உணவு முறையை ஓரங்கட்டி விட்டு, மேற்கத்திய உணவுக் கலாசாரத்துக்கு மாறிவிட்டதால், சிறு வயதிலேயே உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகிறார்கள். இந்த அவதி நாளடைவில் மூட்டுவலிக்கும் வழி அமைத்து விடுகிறது.

முழங்கால் மூட்டு

மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலியைத்தான் ‘மூட்டுவலி’ (Arthritis) என்று பொதுவாகச் சொல்கிறோம். தொடை எலும்பின் கீழ்ப்பகுதியும் முழங்கால் எலும்பின் மேல் பகுதியும் இணைகின்ற இடமே முழங்கால் மூட்டு (Knee Joint). இது உடல் எடையைத் தாங்குகின்ற முக்கியமான மூட்டு. முழங்கால் மூட்டைத் தொட்டுப் பார்த்தால்,   நம் கைக்குத்  தட்டுப்படுவது முழங்கால் மூட்டுச் சில்லு  (Knee cap). முழங்கால் மூட்டுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிற பாதுகாப்பு   மூடி இது. இதற்குப் பின்னால் உள்ளதுதான் உண்மையான முழங்கால் மூட்டு.

உடலில் உள்ள மூட்டுகளிலேயே முழங்கால் மூட்டின் உள்ளமைப்பு சற்று வித்தியாசமானது. மூட்டைப் பிணைக்கின்ற நாண்களும் ( Cruciate   ligaments), மெனிஸ்கஸ் (Meniscus) எனும் குஷன்களும் இந்த மூட்டில்தான் உள்ளன. அடுத்து, அசையும் மூட்டுகளில் மிகப் பெரியதும் இதுதான். இங்குள்ள எலும்புகளின் தலைப்பகுதியை சைனோவியல் படலம் (Synovial membrane) சூழ்ந்து உள்ளது. இது ‘சைனோவியல் திரவம்’ என்ற பசை போன்ற ஒரு திரவத்தைச் சுரக்கிறது. மூட்டில் இது ஒரு மசகுபோல் பணி செய்கிறது. மூட்டு எலும்புகள் உரசிக் கொள்ளாமல் அசைவதற்கு உரிய   இயக்கத் தன்மையை அளிக்கிறது. அடுத்து, மூட்டுகளைச் சுற்றி ‘கார்ட்டிலேஜ்’ (Cartilage) எனும் மிருதுவான குருத்தெலும்புகள் உள்ளன. இவைதான் மூட்டுகள் எளிதாக அசைய உதவுகின்றன.

பொதுவான காரணங்கள்   

உடல் பருமன், வயது அதிகரிப்பது, அடிபடுதல், காயம், மூட்டுச் சவ்வு கிழிதல், யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியாகி மூட்டுகளில் படிவது, பாக்டீரியா கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காசநோய் போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள்.

மூட்டு எலும்பு வளைவு

சிலருக்குப் பிறவியில் கால் நேராக இருந்தாலும் 30 வயதுக்கு மேல் இது வளையத் தொடங்கும். இவ்வாறு கால் வளைவு உள்ளவர்களில் 100ல் 90 பேருக்கு முழங்கால் மூட்டு வெளிப்பக்கமாகவும் கால் உள்பக்கமாகவும் வளைய ஆரம்பிக்கும்.  இதற்கு ‘ஜெனு வேரம்’ (Genu varum)  என்று பெயர். 100ல் 10 பேருக்கு முழங்கால் மூட்டு உள்நோக்கியும் கால் வெளிப்பக்கமாகவும் வளைய ஆரம்பிக்கும். இதை ‘முட்டிக்கால்’ என்று சொல்வார்கள். ‘ஜெனு வல்கம்’ (Genu valgum) என்று இதற்குப் பெயர். இவற்றின் விளைவால், முழங்கால் மூட்டின் உள்பக்கமும், முழங்கால் மூட்டுச்சில்லும் அதிகத் தேய்மானம் அடைகின்றன. காரணம், நாம் நிற்கும்போது, நடக்கும்போது உடல் எடையைத் தாங்குகின்ற விசை நேர்கோட்டில் செல்ல வேண்டும். இது முழங்கால் எலும்புகள் நேராக இருந்தால் மட்டுமே சாத்தியம்; வளைவாக இருந் தால், உடல் எடையைத் தாங்கமுடியாமல் முழங்கால்
எலும்புகள் சீக்கிரத்தில் தேய்ந்து விடுகின்றன.

அடிபடுதல் ஒரு காரணம்

மூட்டில் வலி ஏற்படுவதற்கு முழங்காலில் அடிபடுவதும் ஒரு முக்கியக் காரணம்தான்.  அடிபடும்போது முழங்கால் மூட்டுச் சமன் இல்லாமல் போவதால், மூட்டின் ஒரு பகுதி   தாழ்ந்து  மூட்டின் தேய்மானத்துக்கு வழி அமைக்கும். மூட்டில் அடிபடுவதைக் காலத்தோடு கவனித்துச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், இந்த நிலைமையைத் தவிர்க்கலாம். இல்லை என்றால் மூட்டுவலி தொல்லை கொடுக்கும்.

ஆஸ்டியோபொரோசிஸ்

பொதுவாக, ஒவ்வோர் எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். பழைய செல்கள் நீக்கப்பட்டு, புதிய செல்கள் உருவாகும். இளமையில் இது வேகமாக நடக்கும். முதுமை நெருங்கும்போது இது தாமதமாகும். பழைய செல்லுக்கு பதில் புதிய செல்கள் உருவாகாமல் போகும். இதனால் அங்கு சிறு சிறு துவாரங்கள் ஏற்பட்டு எலும்பு வலு இழக்கும். இதற்கு ‘ஆஸ்டியோபொரோசிஸ்’ (Osteoporosis) என்று பெயர். இந்த நோய் முழங்காலைப் பாதிக்குமானால், குருத்தெலும்புகள் நொடிந்து மூட்டுவலியை ஏற்படுத்தும். பொதுவாக, பெண்களுக்கு மாதவிலக்கு நின்று போனதும், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைவதால், உடலில் கால்சியம் உற்பத்தி குறையும். இதனால், எலும்பில் படியும் கால்சியத்தின் அளவு குறைந்து அதன் அடர்த்தியும் குறையும். இது மூட்டுவலிக்கு வரவேற்பு கொடுக்கும். அதிலும் உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு இளம் வயதிலேயே முழங்கால் மூட்டுவலி வந்துவிடுகிறது.

மூட்டுத் தேய்மானம்

முழங்கால் மூட்டுவலிக்கு அடிப்படைக் காரணம் அங்கு ஏற்படுகிற தேய்மானம்தான். வயதாக ஆக, குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாகிறது. இதை ‘முதுமை மூட்டழற்சி’ (Osteoarthritis ) என்கிறார்கள். முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு வழுவழுப்பாக   இருக்கும். இதற்குக் காரணம், ‘கொலாஜன்’ எனும் புரதப்பொருள் அதில் இருப்பதுதான். இதுதான் இந்த வழுவழுப்புத் தன்மையைப் பாதுகாக்கிறது. குருத்தெலும்பை வலுவாக வைத்துக்கொள்கிறது. முதுமை நெருங்கும்போது, இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்து மெலிதாகிவிடும். இதன் விளைவால், மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல, நமக்கு வயதாகும்போது முழங்கால் மூட்டுகள் உரசிக்கொள்ள, மூட்டுவலி ஏற்படுகிறது.

எலும்பில் ஏற்படும் முடிச்சுகள்

நாட்கள் ஆக ஆக அழற்சி ஏற்பட்டுள்ள குருத்தெலும்புத் திசுக்களில் சிறிதாக எலும்பு முடிச்சுகள் (Osteophytes) முளைக்கின்றன. இதனால் குருத்தெலும்பு கடினமாகிவிடுகிறது. இதன் விளைவால், மூட்டின் முனைகளில் காணப்படுகின்ற வழுவழுப்புத் தன்மை  முழுவதுமாக மறைந்து சொரசொரப்பாகி விடுகின்றன. முழங்காலை அசைத்தால், இந்தக் கடினப்பகுதிகள் உரசுவதால் மூட்டுவலி கடுமையாகிறது.

மூட்டு வீக்கம்

மூட்டுவலி வந்துள்ள முழங்காலுக்கு அதிக வேலை கொடுத்தால், குருத்தெலும்பில் திடீரென்று அழற்சி அதிகமாகிறது; சைனோவியல் படலம் அதிக திரவத்தைச் சுரக்கத் தொடங்குகிறது. இதனால், மூட்டில் நீர் கோத்து, வீங்கிக்கொள்கிறது. இதுபோல், முழங்காலில் அடிபட்டால், கால் சறுக்கிவிட்டால், முழங்காலைத் தவறாகப் புரட்டிவிட்டால் இப்படி நீர் கோத்து வீங்கிக்கொள்வது உண்டு. அப்போது முழங்காலை அசைக்கவே முடியாத அளவுக்கு மூட்டு இறுக்கத் தன்மையை அடைகிறது. இந்த நிலைமை ஏற்பட்டவுடன், மூட்டை அசைக்க முடியாத அளவுக்குக் கடுமையான வலி ஏற்படுகிறது.

மூட்டுத் தேய்மானத்தை எப்படி அறிவது?

சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு எழுந்து நில்லுங்கள். மூட்டு பிடிப்பதுபோல் இருக்கிறதா? கொஞ்ச தூரம் நடந்து செல்லுங்கள். அந்தப் பிடிப்பு விட்டதுபோல் இருக்கிறதா?  அப்படியானால் உங்களுக்கு மூட்டுத் தேய்மானம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.

பரிசோதனைகள்?

மூட்டுகளில் வலி, வீக்கம் ஏற்பட்டால், உடனே குடும்ப மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலம் எந்த வகையான மூட்டுவலி என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சையைப் பெற வேண்டும். குடும்ப மருத்துவர் பரிந்துரை செய்தால், எலும்புநோய் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சையைத் தொடர வேண்டும்.

சிகிச்சை

ஆரம்பநிலையில் உள்ள இவ்வகை மூட்டுவலிக்கு வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும். இவற்றில் SWD, IFT சிகிச்சைகள் பிரதானம். இவற்றுடன் தொடை தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும். பொதுவாக, மூட்டுவலிக்கு அதிக நாட்கள் தொடர்ந்து வலி மாத்திரைகளையும் ஸ்டீராய்டு மாத்திரைகளையும் சாப்பிடக்கூடாது. இதனால், சிறுநீரகங்கள் பாதிப்படையும். எலும்புகள் பலவீனம் அடையும். இரைப்பையில் புண் வந்துவிடும். சர்க்கரை நோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. சிலருக்கு முழங்கால் மூட்டுக்குள்  ஸ்டீராய்டு ஊசியைப் போட்டால், சில மாதங்களுக்கு வலி இருக்காது. இன்னும் சிலருக்கு ‘ஆர்த்ராஸ்கோப்’ மூலம் மூட்டின் உள்பகுதி சுத்தம் (Arthroscopic lavage) செய்யப்படும். இதனால் மூட்டில் வலி ஏற்படுத்தும் பொருட்கள் வெளியேறிவிடும். இதன் பலனால்  6 மாதமோ, ஒரு வருடத்துக்கோ மூட்டுவலி இல்லாமல் இருக்க முடியும்.

கால் வளைவுக்கு சிகிச்சை

கால் வளைவு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு. மூட்டுவலி ஆரம்பிக்கும் முன்பே இந்த அறுவை  சிகிச்சையை செய்துகொள்வது வருங்கால சிக்கல்கள் பலவற்றைத் தடுக்கும். இதற்கு corrective osteotomy என்று பெயர். இதில் வளைந்திருக்கிற மூட்டுப் பகுதியை சரி செய்கிறார்கள்; சுழன்று இருக்கிற முழங்கால் மூட்டை நேர்ப்படுத்துகிறார்கள்; அதே நேரத்தில் மூட்டுத் தேய்மானத்தையும் சரி செய்கிறார்கள். மூட்டில் தேய்மானம் இருப்பவர்கள், நடுத்தர வயதுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்வது நல்லது. இல்லையென்றால், இந்த சிகிச்சையின் முழுப்பலனையும் பெறமுடியாது.

செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை

மூட்டில் தேய்மானம் மிக அதிகமாக இருந்தால், மூட்டுவலிக்கு முழுமையான தீர்வு   தருவது, ‘செயற்கை மூட்டு மாற்று சிகிச்சை’ (Total Knee Replacement) மட்டுமே. உலோகமும் பாலிஎதிலீனும் (Polyethylene) கலந்து தயாரிக்கப்படுகிற செயற்கை மூட்டைப் பொருத் தும் அறுவை சிகிச்சை இது.  இந்த இடத்தில் ஒரு முக்கிய விஷயம் ‘மூட்டு மாற்றம்’ என்றதும் முழங்கால் மூட்டு மொத்தத்தையும் அப்படியே கொத்தி எடுத்துவிட்டு, உலோக மூட்டை அங்கு பொருத்தி விடுவதாக அர்த்தம் செய்துகொள்ளக்கூடாது.  மூட்டில் குருத்தெலும்பு உள்ள மேல்தளத்தை மட்டுமே இதில் மாற்றுகிறார்கள். மூட்டின் தசைகள், நரம்புகள் போன்றவற்றுக்கு பாதிப்பு இருந்தால், இந்த சிகிச்சையால் அவற்றை சரி செய்ய முடியாது.  இப்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிற செயற்கை மூட்டுகள் 20 ஆண்டுகள்வரை உழைக்கின்றன. இதைப் பொருத்திக்கொண்டால் நடக்கலாம். மாடிப் படிக்கட்டுகளில் ஏறலாம். கார் ஓட்டலாம். கால்பந்து மட்டும் விளையாட முடியாது.

மூட்டுவலியைத் தடுப்பது எப்படி?

மூட்டுத் தேய்மானத்தை முற்றிலும் தடுக்க முடியாது. ஆனால், வேகமாகத் தேய்மானம் ஆவதை தடுக்கலாம்; தள்ளிப் போடலாம். இளம் வயதிலிருந்தே புரதச் சத்து நிறைந்த பால், பால் பொருட்கள், பருப்பு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடர் பச்சைநிறக் காய்கறிகள், கீரைகளைச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிது நேரம் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்க வேண்டும். சூரிய ஒளி படுவதன் மூலம் தோலின் அடிப்பாகத்தில் வைட்டமின் டி  தயாராகிறது. இது எலும்புக்கு பலம் தரக்கூடியது. சிறு வயதிலிருந்தே நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் மூட்டுத் திசுக்கள் பலம் பெறும். மூட்டுத் தேய்மானம் ஆவது தள்ளிப்போகும்.

நடக்கும்போது நம் உடல் எடையைப்போல இரண்டு மடங்கு எடையை கால் மூட்டு தாங்குகிறது. உடல் எடை அதிகரித்தால், மூட்டுக்கு அதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால் மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. எனவே, எடை சரியாக இருந்தால் மட்டுமே மூட்டுவலியைத் தவிர்க்க முடியும். தவிர, முழங்கால் மூட்டுக்கு வலிமை  தருகின்ற யோகாசனங்களும் இருக்கின்றன. அவற்றை முறைப்படி செய்து வந்தால் மூட்டுவலியை நிச்சயம் தள்ளிப்போட முடியும்.

Related posts

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

admin

முலைக்காம்பு சார்ந்து பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்!!!

admin

ஐஸ் வாட்டரா குடிக்கறிங்க? இதை படிச்சுட்டு குடிங்க!

admin

Leave a Comment