சித்த மருத்துவம் – இயற்கையின் அற்புதம்

சித்த மருத்துவம் மிகவும் எளிமையான மருத்துவ முறை என்று எண்ணிவிடக் கூடாது. இது பல்வேறு யோக, ஞான, வைத்திய விஷயங்களைத் தன்னகத்தே கொண்டு, உலகை ஆளும் பெருங்கடல். இயற்கையின் அற்புதம்.

‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ மக்களால் கண்டறியப்பட்ட நமது சித்த மருத்துவத்துக்கு வேறு எந்த மருத்துவ முறையையும் இணையாகக் கருதக்கூடாது / முடியாது. சித்தர் பெருமக்களால் கண்டறியப்பட்ட சித்த மருத்துவமானது, சித்தர்களின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு, மேன்மேலும் மெருகூட்டப்பட்டு, வாழ்வியலின் ஓர் அங்கமாக உணரப்பட்டது.

சித்தர்கள் தங்களது யோக சித்தியால், தவ வலிமையால் பல்வேறு மூலிகைகளின் குணங்களை உணர்ந்து, மக்களைப் பாதிக்கும் நோய்களை விரட்டி, நூறாண்டு வாழ்வதற்கு ஏற்ப பல்வேறு மருந்துகளைக் கண்டறிந்தனர். அந்த வகையில், சித்த மருத்துவத்துக்குச் சேவை புரிந்தவர்கள், 1. திருமூலர், 2. இராமதேவர், 3. கும்பமுனி, 4. கொங்கணவர், 5. கமலமுனி, 6. சட்டமுனி, 7. கருவூரார், 8. சுந்தரானந்தர், 9. வான்மீகர், 10. நந்தீசர், 11. பாம்பாட்டி சித்தர், 12. போகர், 13. மச்சமுனி, 14. கோரக்கர், 15. பதஞ்சலி முனிவர், 16. தன்வந்திரி, 17. குதம்பைச் சித்தர், 18. இடைக்காடர் என பண்டைய பதினெண் சித்தர்கள்தான். இவர்கள், தங்கள் தவ வலிமையால் உணரப்பட்ட தாது, தாவர, ஜீவ வர்க்கங்களின் தத்துவங்களை அப்படியே ஏட்டுச் சுவடிகளில் பதிவு செய்து பிற்கால சந்ததியினருக்குப் பயன்படும்படி பாடம் செய்து வைத்தனர்.

சித்தர்கள், மருந்துகள் கண்டறியும் விதமே மிகவும் அலாதியானது. சித்தர்களின் ஒருமித்த கருத்து என்னவென்றால், ‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்’ – ‘பிண்டத்தில் உள்ளதே அண்டம்’. அதாவது, இந்த உலகத்தில் எதெல்லாம் இருக்கின்றனவோ அவை இந்த (மனித) உடலிலும் இருக்கின்றன என்பதே இதன் பொருள். ஒரு மூலிகையின் நோய் நீக்கும் தன்மையானது, சில குறிகளைக் கொண்டே சித்தர்களால் உணரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *