இயற்கை மருத்துவம்

உடல் நல உணவு

நம்மில் பலருக்கு, உணவுகள் பற்றியும், உணவுகளின் சிறப்பு பற்றியும், உண்ணும் முறை பற்றியும் தெரியும். இதில் விழிப்புணர்வு வேண்டும். அத்தகைய விழிப்புணர்வும், சத்துணவும் மக்களுக்குக் கிடைத்தால், எங்கும் உடல் நலம் தங்கும். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையும் இருக்காது. நாம் உண்ண வேண்டிய உணவின் மொத்த கலோரி சக்தியில், 60 சதவிகிதம் கார்போஹைடிரேட் மூலமும், 30 சதவிகிதம் கொழுப்பு மூலமும் 10 சதவிகிதம் (அல்லது 12) புரதம் மூலமும் இருக்க வேண்டும்.

உணவில் பல்வேறு வகைகள் இருந்தாலும், அவற்றில் முன்னிலை பெறுபவை உடல் நல உணவுகளே (Health foods). உடல் நல உணவுகள் எவை என்பதை அறிவதும், அவற்றை அதற்காகப் பயன்படுத்த வேண்டியதும் அவசியம். நமது நாட்டில் இல்லாத அல்லது கிடைக்காத சில உடல் நல உணவுப் பொருட்கள், வெளிநாடுகளில் கிடைக்கலாம். தற்பொழுது நிலவி வரும் தாராள மயக்கமாக்கல் கொள்கையால் அனைத்து பொருள்களும் எங்கும் கிடைக்கின்றன.

உடல் நலமே அனைத்துக்கும் ஆணிவேர் என்பதாலும், அதற்கு சிறந்த உணவே அடிப்படை என்பதாலும், நல்லுணவுகளை நாள்தோறும் உட்கொள்ள, நாம் ஆர்வம் காட்ட வேண்டும். உணவுகளுள், “வேண்டியதை விடக்கூடாது; வேண்டாததைத் தொடக்கூடாது” என்பதைச் சட்டம் போலவும், திட்டமிட்டும் செயல்படுத்தினால், உடல் நலம் நம்மை விட்டகலாது. அதன் அடிப்படையில், வாழ்வை சுவையாக்கலாம்; வாழ்க்கையை பெருமையுடன் வாழ்ந்து காட்டலாம்.

உணவென்பது…

உணவென்பது தூய்மையாகவும், சுவையாகவும், சத்துள்ளதாகவும், நோய்கள் வருவதை தடுப்பதாகவும், வந்த நோயை விரட்டுவதாகவும் இருக்க வேண்டும். உணவு மருந்தாகவும் இருக்கலாம். ஆனால் மருந்தே உணவென்ற நிலை வாழ்வில் வந்திடக் கூடாது. அதற்கு, சரியான உணவுகளைச் தேர்வு செய்து உண்ண வேண்டும். அந்த உணவு, சத்தினை தர வேண்டும்; வளர்ச்சியையும், இனமுதிர்ச்சியையும், வலுவையும், இனப்பெருக்கத் திறனையும் தர வேண்டும். உண்பவற்றை அளவோடு உண்ண வேண்டும். தவறான உணவுகளைத் தவறாமல் தவிர்த்து விட வேண்டும். உடல் ஒரு போதும் குண்டாகக் கூடாது. அதே வேளை, ஒல்லியாக இருக்கக் கூடாது. உயரத்துக்கு ஏற்றபடி, உடல் எடை இருக்க வேண்டும். அவ்வறானால் நம் உடல் நலம் நிலைக்கும்.

உடல் வளத்திற்கான சில உணவுகள்

சால்மன் மீன் (Salmon)

மீனினங்களில் சால்மன் சிறப்பானது, முன்னிலை பெறுவது, ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலங்களை அதிகம் உள்ளடக்கியது. முதன்மையான ஒன்பது அமினோ அமிலங்கள் (Essential Amino Acids) இதிலுள்ளதால், இது ஒரு முழுமை உணவு (Complete food). இதனை அதிகம் உண்பதால் உடல் செயலற்று வீழ்வதில்லை; மாரடைப்பும் ஏற்படுவதில்லை. இதில் கொழுப்பு குறைவு, புரதம் கூடுதல், எனவே இதயத்திற்கு இதமானது. மீன்களில் சால்மன் மட்டுமல்ல, சாளை, மேக்கரல், துனா போன்ற மீன்களை அன்றாட உணவாக்கிவிட்டால், உடல் நலம் மிகச் சிறப்பாகும். மீன்களைக் கண்டால் விட்டுவிடாதீர்கள். ஆண்டொன்றுக்கு 11 கிலோவுக்குக் குறையாமல் மீன் உண்ணுங்கள். உண்ணவேண்டுமென, உலக நலத்துறை நிறுவனம் (World Health Organisation) அறிவுறுத்துகிறது. ஆனால் நாம் 8-9 கிலோவுக்கு மேல் உண்பதில்லை. காரணம் கிடைப்பதில்லை.

உணவு மீன்கள் உடல் நலத்துக்கு வலு,

அழகு மீன்கள் மனநலத்துக்கு வளம்.

ஆப்பிள்கள் (Apples)

மா, பலா, வாழையென, நம்மிடையே முக்கனிகள் இருந்தாலும், கனிகளில் ஆப்பிள்கள் வியப்பானவை. அவற்றில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. முதன்மையாக, பெக்டின் (Pectin) என்னும் கரையும் நார்ச்சத்து உள்ளது. அது, கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோசின் (சர்க்கரையின்) அளவுகளை ரத்தத்தில் கட்டுப்படுத்துகிறது. மேலும் அவற்றில் கூடுதலான வைட்டமின் ‘சி’, ஒரு ஆன்டியாகக்சிடன்டாகச் செயல்பட்டு, உடலின் செல்களைக் காக்கின்றது. மேலும், இரத்தக் குழாய்களை நலமாகவும் வைத்துக் கொள்வதோடு, இரும்புச் சத்தையும், ஃபோலேட்டையும் (folate) உறிஞ்சிப் பயன்படுத்த வைட்டமின் ‘சி’ பெரிதும் உதவுகிறது.

பாதாம் (Almonds)

இதன் விதைகள் / பருப்புகள் (Nuts), ஊட்டச்சத்து நிறைந்தவை. மேலும், இவற்றில் நார்ச்சத்து, ரிஃபோப்ளேவின், மக்னீசியம், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் ‘இ’ யும் இருக்கின்றன. வைட்டமின் ‘இ’, ஒரு ஆன்டியாக்சிடன்ட் என்பதை மறவாதீர்கள். பாதாம் இதயத்திற்கு நல்லவை. இவற்றிலுள்ள பெரும்பாலான கொழுப்பு, ஒற்றை செரிவற்ற கொழுப்பாகும் (Mono – unsaturated). இதனால், கொழுப்பு (Cholesteral) குறைய வாய்ப்புள்ளது. பல பாதாம்களில் (சோடியமும்) உப்பு குறைவு தான் என்பது நற்செய்தி. இரத்த அழுத்தம் அதிகரிக்காதல்லவா?

ப்ரோக்கோலி (Broccoli)

இக்காய்கறியில், கால்சியம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. புல்லின ஊட்டங்களும் நிறைந்துள்ளன. இது, சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பது, உடல் நலச் சிறப்பாகும். இதிலுள்ள, பீட்டா கரோட்டினும், வைட்டமின் ‘சி’ யும் ஆன்டியாக்சிடன்டுகளாக உடல்நலப் பணி செய்கின்றன. இவற்றோடு, வைட்டமின் ‘கே’ யும், ஃபோலிக் அமிலமும் இவற்றில் உள்ளன.

நீலபெர்ரிஸ் (Blue berries)

இவற்றின், குறைந்த அளவே கலோரி சக்தியுள்ளது. நார்ச்சத்து கூடுதலாய் உள்ளது. ஆன்டியாக்ஸிடன்ட்களும், புல்லின ஊட்டங்களும் கூடுதலாக உள்ளன. இவற்றை வழக்கமாகச் சாப்பிட்டு வந்தால், நினைவாற்றல் குறையாது; செல்கள் சிதையாது; எளிதில் முதுமையும் தோன்றாது. என்றும் இளமைக்கு நீலநிறபெரி.

சிவப்பு பீன்ஸ்கள் (Red Beans)

சிவப்பான, சிறுநீரக வடிவிலான பீன்ஸ்கள் மிகச் சிறப்பானவை. இவற்றில் கொழுப்பு குறைவு. புரதமும், நார்ச்சத்தும் பித்தளையும் உள்ளன. மேலும், இரும்புச்சத்து, துத்தநாகம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், தயாமின் இருப்பதால், இவை சிறப்பானவை. பொதுவாகவே அனைத்து பீன்ஸ் வகைகளும் நலம் தருபவை. இவற்றை அவித்தும், பழுப்பு (சிவப்பு) அரிசி சாதத்தோடு சேர்த்தும் சாப்பிடலாம். சிறந்த சிற்றுண்டியாகவும் கொள்ளலாம்.

Related posts

பெண்களுக்கான பாட்டி வைத்தியம் :-

admin

உங்களுக்கு தெரியுமா இரத்த சோகை நீக்கும் பசலை கீரை

admin

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்!

admin

Leave a Comment