ஆரோக்கியம்

ஆயுர்வேதம் குணமாக்குமா மனநலப் பிரச்னைகளை?

ஆயுர்வேதத்தை ஒரு பழைய அறிவியலாக இந்தியர்கள் அறிவார்கள். ஆனால், சமீபகாலமாகதான் அது ஒரு கூடுதல் மற்றும் மாற்றுச் சிகிச்சைமுறையாக(CAM)ப் பயன்படுத்தப்படுகிறது.

கூடுதல் சிகிச்சைமுறைகள் என்பவை, வழக்கமான சிகிச்சைகளுடன், அதாவது, அலோபதி சிகிச்சைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. சமீபகாலமாக, மனநலப் பிரச்னை கொண்டோர் ஆயுர்வேதத்தைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. காரணம், அதன்மூலம் தாங்கள் மருந்துகளை அதிகம் சார்ந்திருக்காமல் வாழலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். மனநல நிபுணர்கள் வழங்கும் மருந்துகளோடு கூடுதலாக ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆனால் உண்மையில், மனநலம் அல்லது மனம்பற்றிய அறிவியல் என்பது, ஆயுர்வேதத்தின் அடிப்படை வரையறையிலேயே இருக்கிறது.

சமஸ்கிருதத்தில் ‘ஸ்வஸ்த்யா’ என்றால், ஒருவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று அர்த்தம், ஆயுர்வேத நூல்களின்படி, ஒருவர் ஸ்வஸ்த்யா நிலையில் இருக்கவேண்டுமென்றால், அதற்கு இவையெல்லாம் முக்கியம்: உடல் மற்றும் உள்ளம் சார்ந்த அம்சங்கள் சமநிலையில் இருத்தல் (சமதோஷா), உடலில் உற்பத்தியாகும் சக்திகள் (சமாக்னிஷ்ச்ச), உறுப்புகளில் உள்ள திசுக்கள் (சமதத்து), வீணான பொருள்கள் முறையாக அகற்றப்படுதல் (மலக்ரியா), மகிழ்ச்சியான ஆன்மா (ப்ரசன்னாத்மா), ஒரு மகிழ்ச்சியான, செயல்படும் மனம் (ப்ரசன்ன-மனஹா) மற்றும் ஐந்து புலன்களும் முறைப்படி செயல்படுதல் (சம-இந்திரியா).

எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், அலோபதி மருத்துவம் குறிப்பிட்ட அறிகுறிகளுக்குச் சிகிச்சை தந்து உடனே குணப்படுத்துகிறது, ஆனால், ஆயுர்வேதம் வேறுவிதமாகச் சிந்திக்கிறது: அனைத்துக் குறைபாடுகளும் (உடல்சார்ந்தவையோ மனம்சார்ந்தவையோ) மேற்சொன்ன காரணிகளில் ஒன்றோ பலவோ சமநிலையற்றிருப்பதால்தான் உண்டாகின்றன. ஆகவே, நல்ல சிகிச்சை என்பது, ஒரு முழுமையான அணுகுமுறையில்தான் இருக்கிறது என ஆயுர்வேத நிபுணர்கள் நம்புகிறார்கள். இதனால், மனநலப் பிரச்னைகளுக்கு ஆயுர்வேதம் ஒரு கூடுதல் அல்லது மாற்று சிகிச்சையைத் தரக்கூடும் என உளவியலாளர்கள் நம்புகிறார்கள்.

ஆயுர்வேதா என்றால், ஆயு (வயது) + வேதா (அறிவியல்), அதாவது, வாழ்க்கைபற்றிய அறிவியல். இந்த அறிவியலானது, ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான ஆன்மாவை மையமாகக்கொண்டு அமைகிறது. இந்தியாவின் பல பகுதிகளில், இந்தப் பழைய மருத்துவமுறை பிரபலமாக உள்ளது. காரணம், இதில் பக்கவிளைவுகள் இல்லை. அதேசமயம், ஆயுர்வேதம் உடல்சார்ந்த பிரச்னைகளைமட்டும் குணப்படுத்தும் என்றுதான் பெரும்பாலானோர் நம்புகிறார்கள். மனநலப் பிரச்னைகளைக் குணப்படுத்துவதிலும் அது ஒரு மாற்று, கூடுதல் சிகிச்சைமுறையாகப் பயன்படுத்தப்படுவது பலருக்குத் தெரியாது.

ஆயுர்வேதம் மற்றும் மன நலம்

“மனச்சோர்வு, பதற்றம் மற்றும் OCD பிரச்னை கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அலோபதி சிகிச்சையோடு, ஆயுர்வேதத்தையும் கூடுதல் சிகிச்சைமுறையாகப் பயன்படுத்தலாம், இதற்கு நல்ல பலன் இருக்கிறது. பல ஆய்வுகளில், ஆயுர்வேத மருந்துகளின் அளவை அதிகரித்தால், பாதிக்கப்பட்டவர் அலோபதி மருந்துகளைச் சார்ந்திருக்கும் தன்மை குறைவது கண்டறியப்பட்டுள்ளது” என்கிறார் டாக்டர் டி சுதாகர், NIMHANSல் உள்ள மனநலத்துக்கான ஆயுர்வேதச் சிறப்புச் சிகிச்சை மையத்தின் துணை இயக்குநர் இவர். சில நேரங்களில், சிகிச்சைபெறுவோருக்கு அலோபதி மருந்துகளே தேவைப்படுவதில்லை என்று விளக்குகிறார் இவர்.

ஆயுர்வேத மருந்துகள், பாதிக்கப்பட்டவரிடம் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவருகின்றன. ஆனால், அலோபதி அந்தப் பிரச்னை சார்ந்த குறிப்பிட்ட அறிகுறிகளைதான் கையாள்கிறது. ஆயுர்வேதம் பாரம்பரியமான உணவு மற்றும் வாழ்க்கைமுறைப் பழக்கங்களைச் சிபாரிசு செய்கிறது, யோகாசனப் பயிற்சிகள், மூலிகைசார்ந்த சிகிச்சையை முன்வைக்கிறது. இது ஒரு நல்ல மாற்றுச் சிகிச்சைமுறையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதில் உடல் அல்லது மனப் பிரச்னைமட்டும் குணமாக்கப்படுவதில்லை, பாதிக்கப்பட்டவருக்கு வருங்காலத்தில் எந்த நோயும் வராமல் தடுப்பதற்காக, அவரது வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன.

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, ஒருவருடைய ஆரோக்கியத்தில் அவரது மன ஆரோக்கியம் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. இது ஒரு முழுமையான அறிவியலாக இருப்பதால், மனம், உடல், ஆன்மா, புலன்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளிடையே உள்ள ஒருங்கிணைந்த உறவுகளை ஆயுர்வேதம் ஆராய்கிறது. அது மனநலத்தை இவ்வாறு அணுகுகிறது:

  • மனிதன் என்பவன், மனம், உடல், ஆன்மா மற்றும் புலன்களின் தொகுப்பு, இவற்றை முறையே மனஸ், சரீரா, ஆத்மா மற்றும் இந்திரியா என அழைப்பார்கள். இதில் உளவியல் புலன்களும் உண்டு (ஞானேந்திரியா), உடல் புலன்களும் உண்டு (கர்மேந்திரியா). இந்த முதன்மை அங்கங்களின் இயக்கவியல்தான் ஒருவருடைய ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது.
  • மனஸ் என்பது, மூன்று செயல்பாட்டு அம்சங்களின் தொகுப்பு: சத்வ, ராஜஸ் மற்றும் தமஸ். இவற்றைக் குணங்கள் என்றும் அழைப்பார்கள், இவை ஒருவருடைய ஆளுமையை அல்லது தத்வாவை வரையறுக்கின்றன. சத்வ குணம் என்பது, நல்ல விஷயங்கள் அனைத்தின் தொகுப்பு: சுய கட்டுப்பாடு, அறிவு, வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று தீர்மானிக்கும் ஆற்றல். ரஜஸ் குணத்தின் தன்மைகள்: அசைவில் இருத்தல், வன்முறை, பொறாமை, அதிகாரம், ஆசை மற்றும் குழப்பம். தமஸ் குணத்தின் தன்மைகள்: சோர்வாக இருத்தல், எதையும் செய்யாமலிருத்தல், சோம்பேறித்தனம், தூக்கக்கலக்கம், அரைத்தூக்கநிலை. இந்த குணங்களில், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றை மனோதோஷாக்கள் என்பார்கள். சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் சமநிலையற்று அமைந்தால், மனநலப் பிரச்னைகள் வருகின்றன. இவற்றை மனோவிகாரா என்பார்கள்.

இன்னொருபக்கம், உடல் என்பது இயற்கையிலிருந்து உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில் மூன்று உளவியல்-உயிரியல் அம்சங்கள் உள்ளன: வாதம் (காற்று அம்சம்), பித்தம் (நெருப்பு அம்சம்) மற்றும் கபம் (நில அம்சம்). இந்த அம்சங்களை த்ரிதோஷாக்கள் என்றும் அழைப்பார்கள். டாக்டர் ரகுராம், MD (Ay), பெங்களூரைச்சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர், பத்தாண்டுகளுக்குமேலாக ஆயுர்வேதம் சார்ந்த சிகிச்சைகளை வழங்கிவருகிறார். இவர், “த்ரிதோஷாக்கள் அடிப்படையில் எதிர்மறையானவை” என்கிறார். “சமஸ்கிருதத்தில் தோஷா என்றால் குற்றம் என்று பொருள், ஆனால் உண்மையில், அவை உடலைப் பாதுகாக்கின்றன.” இந்த மூன்று தோஷாக்களும் கோணலாகிவிட்டால், அவை உடலைத் தாக்குகின்றன, உடலின் ஒரு பகுதிக்கோ, உடல்முழுமைக்குமோ நோயை உண்டாக்குகின்றன. இவை மனத்தையும் பாதிக்கின்றன, மனத் தொந்தரவுகளையோ நோய்களையோ உண்டாக்குகின்றன. ஆகவே, ஆயுர்வேதச் சிகிச்சையானது மனநலப் பிரச்னை, உடல்நலப் பிரச்னை என இரண்டையும் குணப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. காரணம், இவற்றிடையே தொடர்பு உள்ளது.

மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்னைகளுக்கு வழங்கப்படும் குறிப்பிட்ட மருந்துகள் அல்லது சிகிச்சைகளைப்பற்றி ஆயுர்வேத நிபுணர்கள் நிகழ்த்தியுள்ள ஆய்வுகளில் நல்ல பலன்கள் தெரியவந்துள்ளன.

“ஆயுர்வேதம் என்பது, உடல்சார்ந்த பிரச்னைகளுக்கான மாற்றுச் சிகிச்சையாகக் கருதப்பட்டுவந்தது” என்கிறார் டாக்டர் சுதாகர், “ஆனால் இப்போது, மனநலப் பிரச்னைகளுக்கும் இதை ஒரு மாற்று/ கூடுதல் சிகிச்சையாகக் கருதுகிறார்கள்.”

Related posts

நீங்கள் கட்டாயம் நம்பக்கூடாத சில உடல் எடை குறைப்பு டிப்ஸ்…

admin

உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரையில் ஒரே வாரத்தில் ஏராளமான மாற்றங்கள் பேரிட்சை பழத்தால்!…

sangika sangika

துக்கமின்மையால் இவ்வளவு பாதிப்புக்களா!…

sangika sangika

Leave a Comment