ஆயுர்வேத மருத்துவம் ஆரோக்கியம் இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் இத்தனை வகைக் கஞ்சிகள்!…

கஞ்சி என்றதும், `அது காய்ச்சல் நேரத்தில் தரப்படும் பத்திய உணவாச்சே’ என்ற எண்ணம் வரும். உண்மையில் கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல. உடலுக்கு ஊட்டம் தரும் உணவும் கூட.

தாய்ப்பாலுக்குப் பிறகு, நாம் குழந்தைகளுக்குத் தரும் முதல் உணவு கஞ்சி. கைக்குழந்தைகளுக்கு மட்டுமன்றி வீட்டின் வயதான மூத்த குழந்தைகளுக்கும் இதுவே பிரதான உணவாகும். சித்த மருத்துவத்தில் ஏராளமான கஞ்சி வகைகள் உள்ளன. மருத்துவ நூல்களில் கஞ்சி என்பது நீர்ச்சோறு என்றும், புனற்பாகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

`புனற்பாக முத்தோடம் போக்கு மருந்தினற்
பாகந்தனை யடக்குந் – தனிக்குணங்க
நம்மட்டோ வாய்க்கிதமா மாரோக்கியங் கொடுக்குங்
கம்மிட்ட பூவனமே காண்’

என்கிறது ஒரு சித்த மருத்துவ செய்யுள்.

உடலை இயங்க வைக்கும் ஆற்றலாக இருக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று சக்திகளை நல்லமுறையில் செயல்படுத்தும் ஆற்றல் கஞ்சிக்கு உண்டு. இந்த வகைக் கஞ்சிகள் நாவுக்கு இதமாகவும் ஆரோக்கியம் தருவதாகவும் உள்ளன.

இந்தக் கஞ்சிகளை எளியமுறையில் நாமே வீடுகளில் தயாரித்துக்கொள்ள முடியும். அப்படியான சில கஞ்சி வகைகளைப் பார்க்கலாம்.

பஞ்சமுட்டிக் கஞ்சி

பஞ்ச முட்டிக்கஞ்சி செய்வதற்குத் துவரம் பருப்பு, உளுந்து, பச்சரிசி, சிறுபயறு, கடலைப் பருப்பு போன்றவை தேவைப்படும். இவை அனைத்தையும் சரிசமமாக எடுத்து, தனித்தனியே வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு சுத்தமான பருத்தித் துணியில் போட்டுக் கட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு நீர்விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். நீர், கால் பங்காக வற்றியதும் முடிச்சை அவிழ்த்தால் கிடைப்பதே பஞ்ச முட்டிக்கஞ்சி.

அருந்துவதற்குச் சுவையாக இருக்கும் இந்தக் கஞ்சியைப் புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மேலும், அதிகப்படியாகப் பட்டினி கிடப்போருக்குக் கொடுப்பதால் உடல் வலிமை கிடைக்கும்.

பால் கஞ்சி

அரிசியைப் பசும்பாலில் போட்டு நன்றாக வேகவைத்து கஞ்சியாக்கினால் கிடைப்பதே பால் கஞ்சி. இதைக் குடிப்பதால் உடலின் உள்சூடு குறைந்து, பித்தம் மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். தாம்பத்தியக் குறைபாடுகள் நீங்கும்.

இதை `சுரை தரு பாலில் வெந்த சோறு கஞ்சி கொள்ள
லெறிதரு பித்தந்தாழு மெழுமதி விந்து வுந்தான்’ என்ற சித்தர் பாடல்மூலம் அறியலாம்.

இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலும் உட்கார்ந்து பணிபுரிவது அதிகரித்து வருகிறது. அதுவும் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்பாடு அதிகம் இருப்பதால் பார்வைக் குறைபாடும், அதனால் மனச்சோர்வும் ஏற்பட்டு உடலில் பித்தம் அதிகரிக்கிறது. பால்கஞ்சி குடித்தால் பித்தம் தணிந்து உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

பொரிக் கஞ்சி

`பொரிதரு கஞ்சி பித்தம் போக்கி…’ என்று தொடங்கும் பாடல் ஒன்று உண்டு. பொரி என்றால் நம் அனைவருக்கும் ஆயுதபூஜைதான் நினைவுக்கு வரும். ஆண்டுக்கொரு முறை ஆயுதபூஜை தினத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் பொருளாகப் பொரி உள்ளது. இல்லையென்றால் வீட்டில் தின்பண்டங்கள் எதுவும் இல்லாதநேரத்தில் மட்டுமே பொரி நம் நினைவில் வரும். புறந்தள்ளப்பட்ட பொரியில் கஞ்சி செய்து குடித்தால் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

பொரியை நீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் சோர்வு, உடலில் நீர்த்தன்மை குறைதல் போன்றவை நீங்கும். இதைச் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செய்து குடித்துப் பயன்பெறலாம்.

உளுந்தங்கஞ்சி

உளுந்தங்கஞ்சி பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். சிலர் சாப்பிட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. உளுந்தைத் தோலுடன் இரண்டாக உடைத்து நீர்விட்டு நன்றாகக் குழைய வேகவைக்க வேண்டும். அதனுடன் சுக்கு, கருப்பட்டி சேர்த்துக் கஞ்சியாகச் செய்து குடிக்கலாம்.

உளுந்தங்கஞ்சி வலி நோய்களைப் போக்கக்கூடியது. அதுமட்டுமன்றி பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டிகள், அதனால் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக உளுந்து அமையும். இன்று, 99 சதவிகித பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கிறது. அதைச் சரிசெய்ய உடல் உழைப்பு மற்றும் வாழ்வியல் மாற்றங்களோடு உளுந்தங்கஞ்சி போன்ற உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் நல்ல மாற்றத்தைப் பெறமுடியும்.

கஞ்சி அன்னம்!

`கஞ்சி அன்னத்திற் காயம் பருத்திடு
மஞ்சி வெப்பகலுஞ் சிலேத்ம மோ
விஞ்சி யுற்றிடு மேனி மினுத்திடும்
பஞ்சு போல பறந்திடும் பித்தமே’

என்ற பாடல் வரிகளின்மூலம் இதை அறியலாம்.

வடித்த கஞ்சியில் சோற்றைச் சேர்த்து கஞ்சியும் அன்னமுமாகக் குடிப்பதே கஞ்சி அன்னம். இதைத் தொடர்ந்து குடித்து வந்தால் மெலிந்த தேகம் பருக்கும். உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை சமன்செய்து, உடல் இயக்கத்துக்கு உதவும்; உடல் வெப்பத்தைக் குறைக்கும். இந்தக் கஞ்சி அன்னத்தைச் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம். உடல் பருமனாக இருப்பவர்கள் இந்தக் கஞ்சியை தவிர்ப்பது நல்லது.

தினைக் கஞ்சி!

`சந்நி வாத சுர மையந் தனிவாத மும்போகுந்
துன்னு பித்தத்தை மிகத்தூண்டிவிடுந்-தின்னப்
பினையும் பசியாம் பெருவீக்க நீக்குந்
தினையரிசியின் குணத்தைத் தேர்.’

தினையரிசியைச் சுத்தம் செய்து ஊறவைத்து இடித்து நீர்விட்டுக் கஞ்சியாகச் செய்து குடித்துவந்தால் உடலுக்குத் தெம்பு கிடைக்கும்.

பொதுவாக எந்த ஒரு தானியத்தையும் மாவாக உண்ணும்போது ஒரு குணமும், களியாகக் கிண்டி சாப்பிடும்போது ஒரு பலனும் கிடைக்கும். சிற்றுண்டியாகச் செய்து சாப்பிடும்போது ஒருவித நன்மையும், கஞ்சி போல் செய்து குடிப்பதால் வேறு நன்மையும் கிடைக்கும்.

கருஞ்சீரகக் கஞ்சி

பழங்காலத்தில் இருந்தே உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் கருஞ்சீரகம். குறிப்பாக, இஸ்லாமியர்களின் உணவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கருஞ்சீரகத்தை பருத்தித் துணியில் போட்டுக்கட்டி, அரிசி சேர்த்து வேகவைக்க வேண்டும். அந்தக் கஞ்சியை வடிகட்டிக் குடித்தால், உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் ரத்தக்கசிவு மற்றும் வீக்கம், வலி, ரத்தக்கட்டு ஆகியவை சரியாகும். கருஞ்சீரக எண்ணெய் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும்.

உணவாகிய மருந்துகளை நம் முன்னோர் அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர். அதில் எண்ணற்ற நன்மைகள் கிடைத்ததால் அவர்கள் மற்றவர்களுக்கும் தெரிவித்துச் சென்றுள்ளனர்.

`நோய்க்கு இடங்கொடேல்’ என்ற முதுமொழிக்கிணங்க அவற்றைப் பின்பற்றி வாழ்வோம்.

Related posts

உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியாததற்கான காரணங்கள்

admin

சிசேரியன் செய்த பெண்கள் கவனத்திற்கு

admin

இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்

admin

Leave a Comment