ஆயுர்வேத மருத்துவம் ஆலோசனைகள்

மூக்கில் இரத்தம் வடிவதை நிறுத்தும் சிறந்த மூலிகைகள்!..

அதிக குளிர், அதிக வெயில் இரண்டுமே நமக்கு பிரச்னைதான். அந்த இரண்டு பருவநிலை மாற்றமும் ஒருசில உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும். அதில் மிக முக்கியமான ஒன்று மூக்கில் இரத்தம் வடிதல்.

அப்படி சிலருக்கு ரத்தம் வந்தால், உடனே பதட்டமடைவார்கள். அது பருவநிலை மாற்றத்தால் வருகிறது என்பதை புரிந்துகொள்வதற்கு முன்பாக, எதாவது மிகப்பெரிய நோய்க்கான அறிகுறியாக இருக்குமோ என்று நினைப்பார்கள்.

ரத்த நாளங்களில் மிகவும் மென்மையானது மூக்குப்பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் தான். மூக்கின் மேல்பகுதி தண்டுவடத்தில் லேசாக அடிபட்டாலே ரத்தம் வரும். சிறுவயதில் நாம் சில்லுமூக்கு உடைவது பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஏன்! நமக்கே அந்த அனுபவம் இருக்கும். சில்லுமூக்கு எப்படி உடைகிறது?… அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

மூக்கில் இரத்தம் வருதல்:

பனிக்காலங்களில் மூக்கின் மெல்லிய சவ்வுகளில் குளிரின் கடுமையால் வெடிப்பு ஏற்பட்டு, அதனால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது. பனிக்காலங்களில், ஈரக்காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் சுவாசத்தைப்பாதித்து, சளி இருமல் போன்ற சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தி, அதன் காரணமாகவும் மூக்கில் உள்ள சளியை வேகமாக சிந்துவதாலும், மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

காரணம்:

சிலருக்கு கடுமையான பனிக்காலங்களில், மூக்கிலிருந்து இரத்தம் வருவதே தெரியாது, அதேபோல, கடும் வெயிலிலும் மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறுவது நமக்குத் தெரியாமல் இருக்கும்.

கடுமையான சளி பாதிப்பால், எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும், மூக்கில் உள்ள சவ்வுகளில் ஏற்படும் பாதிப்பால், இரத்தம் மூக்கிலிருந்து வெளியேறும்.
வெயில் காலங்களில் உள்ள கடுமையான வெப்பத்தினால், மூக்கின் சவ்வுகளில் ஏற்படும் வெடிப்புகளால், மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது.

உடல் வலி மற்றும் இதர காரணங்களுக்காக உபயோகிக்கும் ஆஸ்பிரின் உள்ளிட்ட மாற்று மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்தாலும், மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறக்கூடும்.

ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் அதிக வெப்பத்தை வெளியிடக்கூடியவ.அதன்கீழ் அதிக நேரம் இருப்பவர்களுக்கும் மூக்கில் இரத்தம் வடிதல் உண்டாகலாம்.

உடலில் நோயெதிதிர்ப்பு சக்தி குறைந்து போய், இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்த பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், மூக்கிலிருந்து இரத்தம் வடியக்கூடும்.

தொழிற்சாலை, பாய்லர், அதிக சூடு நிரம்பிய வெப்ப உலைகள் இவற்றில் பணியாற்றுவோருக்கும், அதிக வெப்பம் மிகுந்த காற்றை சுவாசிப்பவர்களுக்கும் மூக்கில் இரத்தம் வடியலாம். சிறு குழந்தைகள் மூக்கில் பென்சில் அல்லது பேனாவை விட்டுக்கொள்ளும்போது, சவ்வுகளில் பாதிப்பு ஏற்பட்டு, இரத்தம் வரும்.

கடுமையான வெயில் மற்றும் பனிக்காலங்களிலும், மூக்கில் அடிபடுவதாலும், சளியாலும் மூக்கில் ஏற்படக்கூடிய இரத்தப் போக்கை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம்.

மூக்கில் ஏற்படும் இரத்தப் போக்கை நிறுத்த:

வீட்டைத் தவிர வெளியிடங்களில், வண்டியில் போகும்போது, சாப்பிடும்போது போன்ற சமயங்களி் ரத்தப்போக்கு ஏற்பட்டால் முதலில் பதட்டமடையாமல்,இது ஒரு சாதாரண நிகழ்வுதான் என்பதை உணர்ந்து நிதானமாக இருந்தாலே பாதி பிரச்னை குறைந்துவிடும். அதைத்தவிர வேறு என்ன வெல்லாம் செய்தால் மூக்கில் ரத்தம் வடிதலை உடனடியாக நிறுத்தலாம்.

மூக்கில் வரும் இரத்தத்தை நிறுத்த, மூக்குப் பயிற்சி:

மூச்சுப்பயிற்சி தெரியும் இது என்ன மூக்குப் பயிற்சி, என்று யோசனையா?

ஒன்றுமில்லை, மூக்கைப் பொத்திக்கொண்டு, வாயினால் சுவாசிக்கமுயற்சி செய்யும் ஒரு சிறிய பயிற்சியே, மூக்குப் பயிற்சியாகும்.

உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டோ சற்று முன்னால் சாய்ந்து கொண்டு, மூக்கின் அடிப்புறம் உள்ள மென்மையான தசைப்பகுதியை, கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டிவிரகளால் அழுத்திப்பிடித்து, அவ்விடத்தின் பின்புறத்தில் உள்ள முக எலும்புகளைத் தொடுமாறு அழுத்தி, வாய் வழியே சுவாசித்து வரவும்.

இதேபோல் மூன்று நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்துவரலாம், கைகளை எடுத்தபின்னர், இரத்தம் வருவது நின்றுவிட்டால், பயிற்சியை நிறுத்திவிடலாம், இரத்தம் வந்துகொண்டிருந்தால், மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய வேண்டும்.

கன்னங்களில், ஐஸ்கட்டியையும், மூக்கின் மேல் ஈரத்துணியையும் சிறிது நேரம் வைத்திருந்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஒரு மெல்லிய துணியில் ஹைட்ரஜன் பெராக்சைடை தேய்த்து, மூக்கில் வைத்துவர, இரத்தம் வெளியேறுவது உடனே, நின்றுவிடும்.

மூக்கில் இரத்தம் வடிவதை நிறுத்தும் சிறந்த மூலிகைகள்:

சித்த மருத்துவத்தில், மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை, பித்த பாதிப்பு என்பார்கள், உடலில் சூடு அதிகமாகி, அதனால் இரத்தம் வெளியேறுகிறது, இந்த இரத்தம் சூட்டின் வெளிப்பாடுதான், அதனால் பாதிப்பொன்றும் இல்லை. இருந்தாலும் இரத்தம் நிற்காமல், நெடுநேரம் வெளியேறினால், அதிலிருந்து குணமடைய நம்முடைய சித்த மருத்துவ முறை சில மூலிகைகளைப் பற்றி குறிப்பிடுகிறது.

மூக்கில் இரத்தம் வரும்போது, தர்ப்பை புல் சாறை, சில துளிகள் மூக்கில் விட, இரத்தம் வெளியேறுவது நிற்கும்.

மாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், அல்லது மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறுவது நிற்கும்.

மஞ்சளைத் தேனில் குழைத்து, மூக்கின் மேல்புறம் தடவி வர, இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும்.

சோற்றுக் கற்றாளை ஜெல்லை மெல்லிய துணியில் கட்டி, மூக்கினுள் சற்றுநேரம் வைத்துவர, இரத்தக் கசிவு நின்றுவிடும்.

எப்போதாவது மூக்கிலிருந்து இரத்தம் கசிந்தால், உடல்நலத்துக்கு பாதிப்பில்லை என்றாலும், மீண்டும் வந்தால், மனதில் அச்சம் தோன்றலாம் அல்லவா?

மீண்டும் இரத்தம் மூக்கிலிருந்து வெளியேறாமல் தடுக்க சில வழிமுறைகள்:

சளி பிடித்திருக்கும்போது சிலருக்குஅடிக்கடி தும்மல் உண்டாகும். அப்போது சில சமயங்களில் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் ஏற்படும். இந்த பிரச்னை இருப்பவர்கள் தும்மல் வந்தால், மூக்கைப் பொத்திக் கொண்டு வாயின்வழியே காற்றை வெளியேற்றினால் போதும். தும்மல் பிரச்னையும் நிற்கும். ரத்தம் வடிதல் பிரச்னையும் சரியாகும்.

மூக்கில் உள்ள சளியை வெளியேற்ற, மூக்கை வேகமாக சிந்துவதன் மூலம், மூக்கின் இரத்தப்போக்கு மீண்டும் வர ஆரம்பிக்கும். எனவே, வேகமாக மூக்கை சிந்தாமல் இருப்பது நல்லது.

மூக்குக்குள் கைவிரல்களை விட்டு ஆராய்ச்சி செய்வது, பேனா,பெண்சில் போன்ற பொருள்களை மூக்கினுள் விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தம் பிடித்து, அதிக எடைகொண்ட பொருளைத் தூக்குவதோ, கழிப்பறையில் முக்குவதோகூட, மூக்கில் இரத்தக் கசிவை, மீண்டும் ஏற்படுத்தும்.

அதிக சூடு மற்றும் அதிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதும், அதே நிலையில் உள்ள பானங்களைப் பருகுவதையும் தவிர்ப்பது, நலம்தரும்.

Related posts

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

admin

இவற்றை தொட்டால் கூட ஆபத்து என்பதை மறக்காதீர்கள்..!

sangika sangika

அரிப்பு ஏற்பட்டால் சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்!

sangika sangika

Leave a Comment