உங்களுக்கு தெரியுமா கர்ப்ப காலத்தில் எப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும்!

வயிற்றில் உள்ள கரு எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது, தாயின் உடல்நிலை எப்படி உள்ளது என்பவற்றை அறிய மருத்துவப் பரிசோதனைகள் உதவுகின்றன.

குழந்தை பிறப்பு ஒரு வரம் என்றால் கர்ப்பம் ஒரு தவம். அதிலும் முதல் மூன்று மாதங்கள் என்பது கர்ப்ப காலத்தில் மிக முக்கியமான பருவம். கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த முதல் ட்ரைமஸ்டரின்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடுவது, வைட்டமின்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உண்பது, பயணங்களை தவிர்ப்பது, போதுமான ஓய்வு ஆகியவற்றோடு மருத்துவப் பரிசோதனைகளும் மிகவும் அவசியம். வயிற்றில் உள்ள கரு எவ்வளவு ஆரோக்கியமாக உள்ளது, தாயின் உடல்நிலை எப்படி உள்ளது என்பவற்றை அறிய மருத்துவப் பரிசோதனைகள் உதவுகின்றன.

ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால் பொதுவாக கருவுற்ற 11-14 வாரங்களில் எடுக்கலாம். ஆனால், கருவுற்றிருப்பவர்களுக்கு வயிற்றுவலி இருந்தாலோ சிறிய அளவிலான உதிரக்கசிவு இருந்தாலோ உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். 5, 6 வாரங்களில் டேட்டிங் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருந்தாலோ அபார்ஷன் செய்திருந்தாலோ இதற்கு முன்பான கர்ப்பத்தில் குழந்தை சரியாக கருப்பையில் அமராமல் டியூபிலேயே தங்கியிருந்தாலோ கர்ப்பம் அடைந்தவுடன் ஒரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது நல்லது. கர்ப்பம் அடையும் முன் மாதவிடாய் சுழற்சி சரியாக மாதா மாதம் வராமல் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் கர்ப்பம் அடைந்தவுடன் ஸ்கேன் எடுப்பது நல்லது.

இதன் மூலம் பிரசவ தேதியை சரியாகக் குறிக்க முடியும். சிலருக்கு வயிறு வழியாக அல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாய் இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. சிலருக்கு அவர்கள் உடல்வாகு, கருவின் உடல் நிலைக்கு ஏற்ப முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம்.

சில சமயங்களில் முதல் முறை பார்க்கும்போது குழந்தையின் இதயத்துடிப்பை சரியாக கணிக்க முடியவில்லை என்றால் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டியது இருக்கும். தொடர்ந்து சிறிய அளவிலான உதிரக் கசிவு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

11 முதல் 14 வாரங்களில் எடுக்கப்படும் ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு ஆகியவற்றைப் பார்க்க முடியும். சென்ற பகுதியில் சொன்னது போல முதல் மும்மாதத்திலேயே இந்த உறுப்புகள் எல்லாம் உருவாகிவிடும்.

இதற்குப் பிறகான மாதங்களில் இவை வளர்ச்சி அடையத் தொடங்கும் என்பதால் முதல் மும்மாத ஸ்கேனிலேயே குழந்தைக்கு உடல் ஊனம் ஏதும் இருந்தாலும் கண்டறிய இயலும். முதல் மும்மாதத்தில் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (Nucheal thickness).

தோலின் தடிமன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருந்தால் குழந்தைக்கு சில குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணு குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *