குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கான சிறந்த உணவுகள்!அவசியம் படிக்க..

ஒவ்வொருவருக்கும் மூளை வளர்ச்சி அவசியம் இருக்க வேண்டும். அதற்கு சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம்.

 

குழந்தையின் மூளை வளர்ச்சியானது தாய் கருவுற்ற 3 மாதத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. எனவே மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் சரியான உணவுகளைக் கர்ப்பக்காலத்திலே எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்பக் காலத்தில் சாப்பிடவேண்டியவை

ஃபோலிக் ஆசிட், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்துகள். எனவே கருத்தரித்த ஆரம்ப காலத்திலே மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த சத்துகளை எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியவை

கீரை வகைகள்:

கீரைகள் , புதினா, கொத்துமல்லி போன்ற பச்சை நிறமுள்ள கீரைகளில் மூளை வளர்ச்சிக்குத் தேவையான ஃபோலேட் , செலீனியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

கீரையில் உள்ள தாதுக்கள் செரடோனின் என்னும் வேதிப்பொருளின் உற்பத்தியைத் தூண்டி , குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும்.

தக்காளி:

தக்காளியில் லைக்கோபீன் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இது மூளையிலுள்ள செல்களைப் புத்துணர்ச்சியாக்கி ஞாபக சக்தியை அதிகமாக்க உதவும்.

காலிஃப்ளவர் மற்றும் புரோக்கோலி:

நரம்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான கோலின், வைட்டமின் பி மற்றும் பி 6 சத்துகள் இந்த காய்களில் அதிகம். இவை குழந்தைகளின் மூளை வளர்ச்சியை சீராக்கி நினைவாற்றலை அதிகரிக்கும்.

மீன்கள்:

ஒமேகா 3 கொழுப்புச் சத்து நிறைந்துள்ள மீன்களைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர ஆரோக்கியமான மூளை வளர்ச்சியுடன் அவர்களின் நினைவாற்றலும் மேம்படும்.

பீன்ஸ்:

கார்போஹைட்ரேட் , புரதச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் என பீன்ஸில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன.

மதிய உணவுகளில் பீன்ஸ் சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகளைப் புத்துணர்ச்சியாக உணர செய்வதோடு சிந்திக்கும் திறனையும் அதிகரிக்கும்.

முழு தானியங்கள்:

கோதுமை , சோளம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது மூளையின் செயல்பாட்டுக்கு தேவையான குளுக்கோஸ் சத்து (ஆற்றல்) சீரான அளவில் தொடர்ந்து கிடைக்கும். நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான வைட்டமின் -பி யும் இதில் அதிகம் உள்ளது.

முட்டை:

10 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முட்டையின் வெள்ளைப் பகுதியைத் தரலாம். இதில் அதிக அளவு புரோட்டீனும், மஞ்சள் கருவில் நரம்பு வளர்ச்சிக்கு தேவையான கோலின் சத்தும் அதிகமிருப்பதால் குழந்தைகளுக்கு தினம் ஒரு முட்டைக் கொடுக்கலாம்.

மஞ்சள்:

இரவில் மஞ்சள் கலந்த பாலைத் தினமும் குடிக்க தரலாம். மூளையின் செயல்பாட்டை மஞ்சளில் உள்ள சத்துகள் மேம்படுத்தும். நினைவாற்றல் அதிகரிக்கும். பெரியவர்களாகி மறதி நோய் வராமல் தடுக்க முடியும். மூளைத் திசுக்களுக்கு நன்மையைச் செய்யும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *