பன்றிக்காய்ச்சல் ஏன்றால் என்ன?

பன்றிக்காய்ச்ல் என்பது (H1N1) எனப்படும் ஓர் இன்புளுவென்சா வைரசால் ஏற்படும் காய்ச்சல் ஆகும். இன்புளுவென்சா (Influenza) என்பது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு வைரஸ் ஆகும். இது மனிதரை மட்டுமன்றி பறவைகளையும் பன்றி போன்ற விலங்குகளையும் தாக்குகின்றது. இது இன்று நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதரைத் தாக்கி வருகின்றது. இன்புளுவென்சாவைரசில் A, B, C என மூன்று வகையுள்ளன. இவற்றுள் இன்புளுவென்சா A தான் வீரியம் கூடியது. இன்புளுவென்சா A ஐ அதன் மேற்பரப்பிலுள்ள Hemagglutinin மற்றும் Neuraminidase என்னும் புரதங்களின் அடிப்படையில் வகைப்படுத்துவார்கள். H என அழைக்கப்படும் Hemagglutinin புரதத்தில் 18 வரககளும் N என அழைக்கப்படும் N இல் 11 வகைகளும் உள்ளன (H1N1) எனப்படுவது 2009 ஆண்டு முதல் 2010 வரை உலகம் முழுவதும் பரவி வரும் swine flu எனப்படும் பன்றிக்காய்ச்சல் ஆகும்.

இன்புளுவென்சா வைரஸ் எவ்வாறு காலத்துக்குகாலம் வேறுபடுகின்றது?

உமது உடலிலுள்ள நீர்பீடனத் தொகுதியின் புளுவென்சா வைரஸ் கிருமிக்கெதிராக எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும். ஆனால் வைரஸின் மேற்பரப்லுள்ள புரதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்பி காலத்துக்கு காலம் மக்களிடையே நோயை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான இன்புளுவென்சா காய்ச்சல் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்றது. குளிர்வலய நாடுகளில் குளிர் காலத்தில் (Wintor) காய்ச்சல் பொதுவாகப் பரவுகின்றது. ஆனால் இலங்கை, இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளில் வருடம் முழுவதும் நோயத்தொற்றல் ஏற்படலாம். இலங்கையில் நவம்பர், டிசெம்பர், ஜனவரி, மாதங்களிலும் மே, ஜீன், ஜீலை மாதங்களிலுமே அதிகளவு தொற்று ஏற்படுகின்றது.

சில வேளைகளில் பறவைகள், விலங்குகளில் நோயை ஏற்படுத்தும் வைரஸ்களும் மனிதரில் நோயை ஏற்படுத்தும் வைரஸ்களும் இணைந்து அதிக வீரியமுள்ள நோய் எதிர்ப்புச் சக்திக்குக் கட்டுப்படாத புதிய வகை வைரஸை உருவாக்கிவிடும் ( Novel Virus) இத்தகைய வைரஸ் உலகம் முழுவதும் பரவி ( Pandemics) தாக்கத்தை ஏற்படுத்தும்

இன்புளுவென்சா எவ்வாறு பரவுகின்றது?

நோயாளி ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும் சிறுதுளிகள் காற்றில் பரவி அருகில் உள்றோரின் சுவாசப்பாதை வழியாகத் தொற்று ஏற்படுகின்றது. நோயாளியையோ அவர் பயன்படுத்திய பொருள்களையோ தொட்டு விட்டு கண், வாய், மூக்கு போன்ற பகுதிகளைத் தொடும் போது பரவலாம். நோயாளி தொட்ட ஆளிகள்( switch) கதவுக் குமிழ்கள் மற்றும் காசு போன்றவை மூலமும் பரவலாம்.

இன்புளுவென்சா நோயின் அறிகுறிகள் என்ன?

நோய்த் தொற்று ஏற்பட்டவர் 2 நாள்களில் அறிகுறிகளை வெளிக்காட்டுவார். காய்ச்சல் இருமல், தொண்டைநோ, மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர் சிந்துதல், தலையிடி, தசைநோ, மூட்டுநோ, களைப்பு, போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். சிலருக்கு பசியின்மை, வாந்தி போன்றவையும் ஏற்படலாம்,சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படலாம்.

மூச்சுவிடச்சிரமப்படல், அறிவு மயங்குதல் வலிப்பு ஏற்படுதல் போன்றவை அபாயகரமான நிலைமைகளாகும்.

இன்புளுவென்சாவினால் அதிகம் பாதிப்படைபவர்கள் யார்?

இன்புளுவென்சா ஆரோக்கியமான இளைஞர், யுவதிகளழல சாதாரண காய்ச்சலையே ஏற்படுத்தும், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், இருதய நுரையீரல் சம்பந்தமான நோயாளிகள், சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் நீண்டகாலம் Prodnisalone போன்ற மருந்துகளை எடுப்பவர்கள் இந்த நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட இடமுண்டு. எனவே இத்தகைய நோயாளர்கள் நோய் பரவும் காலங்களில் சனக் கூட்டமுள்ள இடங்களுக்குச் செல்வதை்த தவிர்த்தல் நல்லது.

இன்புளுவென்சா நோய் வராமல் தடுக்கும் வழிகள் எவை?

நோய் வாய்ப்பட்டவர்கள் சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குத் தொற்றாமல் பாதுகாக்கலாம். தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையையோ ரிசுப் பேப்பரையோ உபயோகித்து முகத்தை மூட வேண்டும். அதே போல பயன்படுத்திய கைக்குட்டைகளைச் சவர்க்காரமிட்ட நீரில் துவைக்க வேண்டும். அத்துடன் நோய் வாய்ப்பட்டவர்கள் சனக்கூடங்களுள் செல்வதையும் பொது போக்குவரத்துக் சாதனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். நோய்வாய்ப்ட்டவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களும் முகக் கவசம் ( Face Mask) அணிவதன் மூலமும் ஓரளவு நோய்தொற்றலைத் தடுக்க முடியும். கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவுவதன் மூலமும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தலாம்.

நோயாளி பயன்படுத்திய பொருள்களைச் சவர்க்காரம் மூலமோ அல்லது ஸ்பிரிட் (Spirit) மூலமோ சுத்தப்படுத்தலாம். புகைப்பிடிப்பவர்களை இந்த நோய் அதிகம் தாக்கும் என்பதால் புகைத்தலை தவிர்ப்பது நல்லது.

நோய்வாப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள் எவை?

நோய்வாய்ப்பட்டவர்கள் நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். சூப், கஞ்சி, இளநீர் போன்ற நீராகாரங்களை அதிகளவு பருக வேண்டும். வலி, காய்ச்சல் இருப்பின் பரசிடமோல்மாத்திரைகளை வைத்தியரின் ஆலோசனையின் படி பயன்படுத்த வேண்டும். முன்பு குறிப்பிட்ட அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் தவிர்ந்த முன்பு ஆரோக்கியமாகவிருந்த இளைஞர், யுவதிகள் வீட்டிலிருந்தே அருகிலிருக்கும் வைத்தியரை ஆணுகிச்சிகிச்சை பெறலாம். அனைவரும் அரச வைத்தியசாலைக்கு வரவேண்டியதில்லை. ஆனால் கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்டகால சிறுசீரக, ஈரல், இருதய , நுரையீரல் நேய்கள் உள்ளவர்கள் வைத்திய நிபுணர் ஒருவரின் ஆலோசனை பெறல் அவசியமாகும். அவர்களில் அபாயகரமான அறிகுறிகள் இருப்பவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும்.

மேலும் மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும் நியூமோனியா இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளவர்களும் தொடர்ச்சியான வாந்தியால் போதிய நீராகாரங்களை எடுக்க முடியாதவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும்.

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் முன் குறிப்பிட்ட இன்புளுவென்சாவால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் அபாயகரமான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் tamilflu எனப்படும் Oseltamivir எனப்படும் மருந்து வழங்கப்படுகின்றது. இந்த மருந்து எல்லோருக்கும் கொடுக்கத் தேவையில்லை எமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியே ஆரோக்கியமானவர்களின் வருத்தத்தை மாற்றப் போதுமானதாகும்.

3 நாள்களுக்கு மேல் தொடர்ச்சியாக காய்ச்சல் இருக்குமாயின் வைத்தியர் ஒருவரை அணுகி FBC (Full blood count) எனும் குருதிப் பரிசோதனையைச் செய்வது நல்லது. ஏனென்றால் ஆரம்ப நிலைகளில் டெங்கு நோயையும், இன்புளுவென்சா நோயையும் பிரித்தறிவது கடினம் ஆகும்.

முடிவாக (H1N1) எனப்படும் பன்றிக்காய்ச்சல் ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலாகும். இதையிட்டு அனைவருமு் பீதியடையத் தேவையில்லை. அதேவேளை இதனால் அதிகம் பாதிப்படைக் கூடியவர்கள் அவதானமாக இருக்க வேண்டும். அடிப்படைச் சுகாதார பழக்கவழக்கங்களக் கடைப்பிடித்தாலே நோய் பரம்பலைக் கட்டுப்படுத்தலாம்.

மருத்துவர்.S.கேதீஸ்வரன்
பொதுவைத்திய நிபுணர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *