பெண்ணின் குற்றமில்லை!

ஒல்லி பெல்லியாக ஆசைப்பட்டு, வெஜிடபிள் டயட், ஃப்ரூட் டயட், வாட்டர் டயட் என எல்லா டயட்டுகளையும் பின்பற்றியும், ஜிம், யோகா கிளாஸில் பழியாகக் கிடந்தும், எடை குறைக்க முடியாமல் சோர்ந்து போன பெண்ணா நீங்கள்? அது உங்கள் தவறில்லை. பெண்களின் மூளையில் உள்ள சிக்னல் ஒயர்கள் ஆண்களோடு ஒப்பிடும் போது வித்தியாசமானது. அதனாலேயே எடை குறைப்பது பெண்களுக்கு கடினமாக இருப்பதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

பெண்களுக்கு எடைக்குறைப்பு ஏன் மிகவும் கடினமாக இருக்கிறது என்ற ரீதியில் அமெரிக்காவின் அபர்டீன் பல்கலைக்கழகம் ஆய்வை மேற்கொண்டது. எடை அதிகரிப்பு, உடல் செயல்பாடுகள், ஆற்றல் செலவு போன்றவை ஆண்-பெண்ணிடையே எப்படி வேறுபடுகிறது என்பதை அறிய எலிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.அதிக பசியும், குறைந்த உடல் செயல்பாடும் உள்ள பருமனான ஆண் எலிகளை ஆரோக்கியமாக, ஒல்லியாக மாற்ற முடிந்தது. அந்த மாற்றமோ பெண் எலிகளிடத்தில் ஏற்படவில்லை.

‘உலகின் சில பகுதிகளில் உள்ள பெண்கள் ஆண்களைவிட இருமடங்கு அதிகம் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. நாங்கள் இந்த ஆய்வில் ஒரே அளவு கலோரி உணவுகளை எலிகளுக்கு கொடுத்தபோதிலும், ஆண், பெண் இருபாலரிடத்தில் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மூளை நரம்பு மண்டலத்தில் உள்ள ப்ரோ-ஆப்பியோ மெலனோகார்ட்டின் (Pro-opiomelanocortin (PMOC) என்னும் ஹார்மோன் செல்களே பசி, உடல் செயல்பாடு, ஆற்றல் செலவு மற்றும் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

”பெண் எலிகளில் உள்ள இந்த PMOC ஹார்மோன் செல்கள் உடல் செயல்பாடு மற்றும் ஆற்றல் செலவை ஒழுங்குபடுத்தும் வேலையை திறம்பட செய்வதில்லை. இந்த PMOC செல்கள் பசியைக் கட்டுப்படுத்தும் சிக்னல்களை மூளைக்கு சரிவர தெரிவிப்பதில்லை. இதுவே பெண்களின் பருமனுக்கு காரணம். இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் இருவரின் மூளையில் உள்ள PMOC செல்கள் இருவேறுவிதமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. எனவே பெண்கள் மூளையில் உள்ள PMOC செல்களை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளை கண்டுபிடிக்கும் வகையில் ஆய்வினை மேற்கொள்ள இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார் இந்த ஆய்வின் தலைவரான லாரா ஹெய்லர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *