30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

இன்றைய நவீன காலத்தில் வேலைப்பளு மட்டுமின்றி, உடல் பருமனும் ஒருவரை அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி, ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, அதிகப்படியான உடல் பருமனால் பலரும் பல இடங்களில் கேலி, கிண்டல் என பல தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியிருப்பார்கள்.

இப்படி நீங்கள் அதிகப்படியான உடல் எடையால் மிகுந்த கஷ்டங்களை சந்திப்பவராயின், தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில அற்புதமான உடல் எடையைக் குறைக்கும் சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றினால், 30 நாட்களில் உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாறலாம்.

முக்கியமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது மற்றும் உடலும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதை உணர்வீர்கள். சரி, இப்போது அந்த வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

கலோரிகளை குறைத்துக் கொள்ளுங்கள்
ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு நாளைக்கு 1700 கலோரிக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்
பால் பொருட்கள், மாவுப் பொருட்கள், எண்ணெய் உணவுகள், ஜங்க் உணவுகள், மட்டன் மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் சாப்பிடலாம் மற்றும் தினமும் முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடுவது நல்லது. ஆனால் முட்டையை மஞ்சள் கருவைத் தவிர்க்கவும். ஏனெனில் இதில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால், எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

கொத்தமல்லி
கொத்தமல்லி ஜூஸ் அல்லது சூப்பை தினமும் சிறிது குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

தண்ணீர்
தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படும். முக்கியமாக உணவு உண்பதற்கு முன் 2 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் உண்ணும் உணவின் அளவு குறையும். அதேப் போல் உணவை உண்டு 15 நிமிடங்களுக்கு பின் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

கொள்ளு
கொள்ளுவை எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து, குளிர வைத்து பொடி செய்து கொள்ள, காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 டீஸ்பூன் கொள்ளு பொடியை வாயில் போட்டு சாப்பிட்டு, அதனைத் தொடர்ந்து 1 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.

இரவு உணவு
எப்போதும் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே இரவு உணவை உட்கொள்ள வேண்டும். ஒருவேளை உணவு உண்டவுடன் தூங்கினால், உடலால் கொழுப்புக்களை எரிக்க முடியாமல், ஆங்காங்கு தேங்க வைத்துவிடும்.

உடற்பயிற்சி
தினமும் தவறாமல் 30 நிமிடம் ஜாக்கிங் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது வியர்வை வடிவில் வெளியேறிவிடும். மேலும் வியர்வை வெளியேற்றிவிட்டால், சருமம் பொலிவோடு காணப்படும். ஒருவேளை உங்களால் ஜாக்கிங் செய்ய முடியாவிட்டால், வீட்டிலேயே 30 நிமிடம் யோகா செய்யுங்கள்.

படிக்கட்டுக்களை பயன்படுத்துங்கள்
எப்போதும் லிப்ட் பயன்படுத்துவதை தவிர்த்து, படிக்கட்டுக்களைப் பயன்படுத்துங்கள். இதனால் கொழுப்புக்களை எரிக்க முடியும்.

உண்ண வேண்டிய உணவுகள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் இரவில் ஓட்ஸ் சாப்பிடுங்கள். இதனால் உடலில் நார்ச்சத்து அதிகரித்து, உடலை பிட்டாகவும், ஸ்லிம்மாகவும் பராமரிக்கலாம். தினமும் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். முக்கியமாக மதிய உணவிற்கு முன் 1-2 கப் சாலட் சாப்பிடுங்கள். இதனால் அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம்.

சர்க்கரை வேண்டாம்
உணவில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள். மாறாக நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் பயன்படுத்துங்கள். ஏனெனில் சர்க்கரையில் வெற்று கலோரிகள் இருப்பதால், அவை உடல் எடையை அதிகரிக்கும். மேலும் நாட்டுச்சர்க்கரை அல்லது தேனில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

காலை உணவை தவிர்க்கக்கூடாது
டயட்டில் இருக்கிறேன் என்று காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். காலை உணவைத் தவிர்த்தாலே உடல் எடை அதிகரிக்கும். எப்படியெனில் காலை உணவைத் தவிர்ப்பதால், மெட்டபாலிசம் குறைந்து, கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறையின் வேகம் குறைந்துவிடும். எனவே எடையைக் குறைக்க நினைப்போர் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, காலை வேளையில் சாலட், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பழச்சாறுகளை அருந்துவது நல்ல பலனைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *