ஆடாதோடைக்கு பாடாத நாவும் பாடும்

ஆடாதோடைக்கு பாடாத நாவும் பாடும் என்ற பழமொழிக்கேற்ப குரல் வளத்திற்கு உகந்த மருந்து. கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கபத்தால் உண்டாகும் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்பட்டு வரும் மூலிகை ஆடாதோடை ஆகும். பழங்கால நூல்களில், இந்த தாவரம் ஒரு முக்கியமான மூலிகையென குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் ஆடாதோடை என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன. ஆடாதோடை ஒரு அடர்த்தியான, ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் செடி.

இலைகள் 10 முதல் 16 செ.மீ. நீளமுடையவை. இலைகளில் மெல்லிய நூல் போன்ற முடிகள் இலை அமைப்பு சூலம் போல் அகன்று, நுனியில் குறுகி இருக்கும். இலைகள் இளம் பச்சை நிறங்களில் இருக்கும். உலர்ந்த இலைகள் பழுப்பு நிறமாகும். உலர்ந்த இலைகள் தேநீர் போல் மணமிருந்தாலும், கசப்பு சுவை உடையவை. இதயம், தொண்டை பாதிப்புகளுக்கு ஆடாதோடை மருந்தாகிறது. கபத்தை கட்டுப்படுத்தும். கிருமிகளை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி. கோனேரியா போன்ற பாலியல் நோய்களுக்கு ஆடாதொடை வேர்கள் மருந்தாக பயன்படுகின்றன.

பூக்கள் மஞ்சள் காமாலை நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தொண்டை கரகரப்பு, தொண்டை கமரல் போன்றவற்றிற்கும் தொடர் இருமலுக்கும் ஆடாதோடை உகந்தது. ஆடாதோடையை தொடர்ந்து உபயோகித்து வர குரல் இனிமையைப் பெறலாம். சமீபகால ஆராய்ச்சிகளில் ஆடாதொடையிலிருந்து கிடைக்கும் வாசிசைன் பற்றிய பல பயன்கள் தெரிய வந்துள்ளன. இந்த காரத்தன்மையுடைய வாசிசைன் மூச்சுக்குழாய் அடைப்புகளை போக்குகிறது. கர்ப்பப்பையை ஊக்குவிக்கிறது. இதனால், பழங்காலத்தில் பிரசவம் பார்க்கும் செவிலியர்களால், சுலபமாக பிரசவம் ஏற்பட இந்த மூலிகையை பயன்படுத்தி வந்தன. மெதர்ஜின் (விமீtலீமீக்ஷீரீவீஸீ)போன்ற மருந்துகளுக்கு இணையானது.

மூச்சுக்குழல் சம்பந்தமான வியாதிகளுக்கு ஆடாதோடை இலைகள் பயன்படுகின்றன. சிகரெட்டைப் போல், இலைகளை சுருட்டி, பற்றவைத்து புகைபிடித்தால் ஆஸ்துமாவுக்கு நல்லது. அசல் சிகரெட் பிடிப்பதையும் கைவிடலாம். ஆடாதோடை இருமல், அலர்ஜி, சளி, கோழை இவற்றை குறைக்கும் மருந்து. திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய் இந்த மூன்றையும் கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் கலந்து குடித்தால் சுவாச மண்டல உறுப்புகள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.

இந்திய மருத்துவ பெயர்களும், மருந்து செய்யும் விதமும் அடங்கிய பட்டியலில் ஆடாதொடையின் பச்சை மற்றும் காய்ந்த இலைகள் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றன. உலர்ந்த இலைகளிலிருந்து கிடைக்கும் சாறு, வலியை குறைக்கும் மருந்தாக பயன்படுகிறது. மேலும், வீக்கங்களுக்காக ஆடாதொடை இலைகளிலிருந்து எடுக்கப்பட்ட கலவை சீக்கிரமாக காயங்களை ஆற்றும். ஆடுகள் இந்த இலைகளை சாப்பிடுவது இல்லை. ஆடு + தொடா + இலை என்பதால் ஆடாதோடை என அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *