இடுப்பும் வயிறும் இன்னும் முக்கியம்!

Loading...

சரியான எடையில் இருக்கிறோமா என்பதை அறிய பாடி மாஸ் இன்டெக்ஸ் (BMI) என்கிற அளவீடு உதவுகிறது. உயரத்துக்கேற்ற எடை என்கிற இந்த அளவீடு மட்டுமே ஒருவரின் உண்மையான பருமனைக் காட்டாது என்கிறது லேட்டஸ்ட் ஆய்வுகள். `’பி.எம்.ஐ சரியாக இருந்தாலும் இடுப்புக்கும் வயிற்றுக்கும் இடையிலான விகிதம் சரியாக இல்லாவிட்டாலும் பிரச்னையே…” என்கிற மகப்பேறு மருத்துவர் ஜெயராணி, அதன் பின்னணி பற்றி விளக்குகிறார்.

சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த 2 ஆயிரம் பெண்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தினேன். அதில் 60 சதவிகிதம் பேருக்கு பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 60 சதவிகிதம் பேருக்கு வயிறு-இடுப்புச் சுற்றளவு சராசரியைவிட அதிகமாக இருந்தது. அவர்களை இரு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவினருக்கு இடுப்பு மற்றும் வயிற்றுச் சதைகளைக் குறைக்க பயிற்சிகள் கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்களைக் கண்காணித்ததில் அவர்களது எடை குறைந்து, இடுப்பு-வயிற்றுப் பகுதி சுற்றளவு குறைந்தது மட்டுமின்றி, சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டுக்கு வந்தது. குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு கருத்தரித்தது.
இப்போது இதைப் பற்றிப் பேச வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம்.உயரத்துக்கேற்ற எடை இருப்பதால்தான் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள் பலர்.

பி.எம்.ஐ அளவு நார்மல் எனக் காட்டினாலும், ஒருவருக்கு இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பருமன் இருந்தால் அது ஆரோக்கியக் கேட்டின் அறிகுறியே. ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்ற பல நோய்களுக்கும் இடுப்பு மற்றும் வயிற்றைச் சுற்றிய பருமனே காரணம். இதன் விளைவால் இன்சுலின் எதிர்ப்பு சக்தியானது வளர்சிதை மாற்ற நோய் அறிகுறியை ஏற்படுத்தும். தொப்புளுக்கு சற்று மேல் உள்ள கடைசி விலா எலும்பு முதல் இடுப்பின் மேலுள்ள எலும்புக்கு இடையிலுள்ள பகுதியை வயிறு என எடுத்துக் கொள்வோம்.

பிட்டப்பகுதியின் அதிகபட்ச சுற்றளவே இடுப்பின் அளவாகக் கணக்கிடப்பட வேண்டும். இரண்டையும் சென்டி மீட்டரில் அளந்து கொள்ளுங்கள். வயிற்றின் அளவை இடுப்பின் அளவால் வகுத்தால் வருவதே வயிறு-இடுப்பு அளவீடு. இப்படி வருகிற அளவானது பெண்களுக்கு 0.8க்கு குறைவாகவும், ஆண்களுக்கு 0.9க்கு குறைவாகவும் இருந்தால் நார்மல்.பெண்களுக்கு 0.85க்கு அதிகமாகவும், ஆண்களுக்கு 1க்கு அதிகமாகவும் இருந்தால் பருமனானவர்கள் என அர்த்தம்.

இந்த அடிப்படையில்தான் ஒருவரது உடல்வாகை ஆப்பிள் வடிவம் என்றும் பேரிக்காய் வடிவம் என்றும் பிரிக்கிறோம். ஆப்பிள் வடிவம் கொண்டவர்களுக்கு வயிற்றின் மேல் பகுதியில் அதிக பருமன் காணப்படும். பேரிக்காய் வடிவம் கொண்டவர்களுக்கு வயிற்றுக்குக் கீழும், இடுப்புப் பகுதியிலும் அதிக பருமன் காணப்படும். இரண்டுமே ஆரோக்கியமானதல்ல. எனவே இவர்கள் வயிறு மற்றும் இடுப்புச் சதைகளைக் குறைக்கும் பயிற்சிகளை உடனடியாக செய்தாக வேண்டும்.

நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்களுக்கு கார்டிசோல் என்கிற ஹார்மோன் அளவு அதிகமாகி, பிட்யூட்டரி சுரப்பியைக் குழம்பச் செய்து, அதன் விளைவாக முறையற்ற மாதவிடாய், குழந்தையின்மை பிரச்னைகளை உருவாக்குகிறது. ஹார்மோன் தொடர்பான பல பிரச்னைகள் வருகின்றன. இடுப்பு-வயிறு சுற்றளவானது 0.7க்கு வந்தால்தான் இந்தப் பிரச்னைகள் சரியாகி, கருத்தரிக்கும். மெனோபாஸ் வயதிலுள்ள பெண்களுக்கும் இந்தச் சுற்றளவு அதிகமானால், ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் தாக்கும் அபாயங்கள் அதிகமாகும். உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் இடுப்பு-வயிற்றுச் சுற்றளவை சரியான அளவுக்குக் கொண்டு வருவது மட்டுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.”

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close