தோல் அரிப்பை போக்கும் அரச இலை

Loading...

கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை காரணமாக, உடலில் வியர்வை தங்கும் இடங்களில் அலர்ஜி, வேர்க்குரு, பரு, தடிமன், அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. எனவே இவற்றை தகுந்த முறைகளை கொண்டு கையாளாவிட்டால் நாளைடைவில் தோல் நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது. வெயில் காலங்களில் பூஞ்சை காளான்களால் தோலின் மேற்புறத்தில் ஏற்படும் தொற்றுகளை தடுப்பதற்கான மேற்பூச்சு மருந்து ஒன்றை அரச இலையை பயன்படுத்தி தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள் அரச மரத்தின் துளிர் இலைகளை எடுத்து லேசாக கசக்கி அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். பின்னர் இதை எடுத்து அரிப்பு, வேர்க்குரு போன்ற இடங்களில் தடவி வைத்திருந்து சிறிது நேரத்திற்கு பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் அரிப்பு, வேர்க்குரு, அலர்ஜி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.

இதனால் தோல் நல்ல மென்மையும், வலிமையும் ஏற்படும். அரச இலை பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. நுண் கிருமிகளை அழிக்கக் கூடியது. அதே போல் இந்த அரச இலை வெந்நீரை அகலமான பாத்திரத்தில் எடுத்து கால்களை அதை அமிழ்த்து வைத்திருப்பதன் மூலம் கால் விரல் இடுக்குகளில் ஏற்படும் அரிப்பு, சேற்று புண் போன்ற பூஞ்சை தொற்று போன்றவையும் நீங்கும். அதே போல் மருதாணியை பயன்படுத்தி விரல் இடுக்குகளில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளை போக்குவதற்கான மருந்தை தயார் செய்யலாம்.

இதற்கு தேவையான பொருட்கள். மருதாணி இலையை பசை போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய். தேவையான அளவு தேங்காய் எண்ணெய்யை வாணலியில் எடுத்து சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் சூடானதும் மருதாணி அரைத்த விழுதை அதில் சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்து மருதாணி கலந்த இந்த கலவையை வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டு, அரிப்பு உள்ள இடங்களில் தடவி வருவதால் அரிப்பு நீங்கி குணம் அடைவதை பார்க்கலாம்.

பொடுகு தொல்லை நீங்குவதற்கு இந்த கலவையை தலையில் தடவி வைத்திருந்து விட்டு பின்னர் குளிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். மருதாணி குளிர்ச்சி தரக் கூடியது. இதை உள்ளுக்குள் சாப்பிடுவதால் கூட உடலுக்கு இதத்தை தரக் கூடியது. அதே போல் பூஞ்சை தொற்றை தடுக்க மாவிலையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் மாவிலை, தேங்காய் எண்ணெய். மாவிலையை நீர்விடாமல் பசை போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் எண்ணெய்யை எடுத்து சூடாக்கி அதனுடன் மாவிலை விழுதை சேர்த்து தைலமாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்தி வருவதன் மூலம் கோடை கால தோல் நோய்களில் இருந்து விடுபடலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close