உஷ்ணத்தைத் தணிக்கும் ஊசிப்பாலை!

பருவ கால மாறுபாட்டிற்கு இயற்கை மட்டும் தப்பித்து விடுமா என்ன? கடும் கோடையில் மழை வெளுத்து கட்டுவதும், கடும் மழைக்காலத்தில் வெயில் சுட்டெரிப்பதும் நாம் கண் கூடாகப் பார்க்கும் நிகழ்வுகள்தான். வெயிலின் போது நிழலின் அருமையும், குளிரின் போது அனலின் அருமையும் நமக்கு தெரிய ஆரம்பிக்கும். அதிலும் இந்த மழைக்காலத்தின் முன்பாக தோன்றும் வெயிலில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுவதால் வெட்கையும், புழுக்கமும் நம்மைச் சுற்றி காணப்படும். இதனால் கடும் வியர்வையும், தோல் வறட்சியும், உடல் வெப்பமும் அதிகரிக்கும். இந்த அதிக உடல் உஷ்ணத்தினால் தொண்டை வறட்சி, வேனற்கட்டிகள், வாய்ப்புண்கள், அதிக வியர்வை போன்ற தொந்தரவுகளும், உடலில் நீர்ச்சத்து குறைவால் சிறுநீர் எரிச்சல், நீர்ச்சுருக்கு, கண்ணெரிச்சல் ஆகியன உண்டாகின்றன.

கோடையின் தணலை தணிக்க உட்கொள்ளும் பானங்களால் தற்காலிமாக நாக்கிற்கும், தொண்டைக்கும் குளுமை உண்டாகுமே தவிர, உடலின் உஷ்ணம் முழுவதுமாக குறைவதில்லை. அதுமட்டுமின்றி உடலில் தோன்றும் அதிக வியர்வையால் ஏற்பட்ட நீரிழப்பு, வைட்டமின் குறைபாடு போன்றவற்றை ஈடுசெய்யக்கூடிய நீர்ச்சத்து நிறைந்த, ஊட்டச்சத்து மிகுந்த கீரைகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும். உடலில் இழந்த சக்தியை ஈடு செய்து போதுமான ஊட்டச்சத்தை நரம்பு திசுக்களுக்கு தந்து, உடல் உஷ்ணத்தை தணித்து மருந்தாக மட்டுமின்றி, உணவாகவும் பயன்படும் அற்புத கீரை வகையைச் சார்ந்த மூலிகைதான் ஊசிப்பாலை.
ஆக்சிஸ்டெல்மா செக்காமோன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்கலபிடேசியே குடும்பத்தைச் சார்ந்த ஊசிப்பாலை கொடிகள் நெற்பயிர்களின் ஊடே களைச் செடிகளாக வளர்ந்து காணப்படுகின்றன. இந்த கொடியில் பால்சத்து உள்ளதால் பாலை வர்க்கத்தைச் சார்ந்தவையாக கருதப்படுகின்றன. ஊசிப்பாலை கொடியில் ஆக்ஸிசின், எஸ்குலன்டின், கார்டினோலைட், ஆக்ஸிடெல்மோசைடு, ஆக்ஸிஸ்டெல்பின் போன்ற சத்துக்கள் செல்களில் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைத்து உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

உடல் உஷ்ணத்தால் தோன்றும் வாய்ப்புண்கள் நீங்க ஊசிப்பாலை இலைகளை வாயிலிட்டு மென்று வரவேண்டும். அதே போல் ஊசிப்பாலை இலைகளை கசாயம் செய்து குடித்து வர வாய்ப்புண், உதடு வெடிப்பு, நாசித் துவாரங்களில் ஏற்படும் வறட்சி நீங்கும். சாதாரண கீரையை சமைத்து சாப்பிடுவது போல் ஊசிப்பாலை இலைகளை நன்கு கழுவி, ஆய்ந்து, வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து, அத்துடன் வதக்கிய ஊசிப்பாலை இலைகள், சீரகம், மஞ்சள்தூள், மிளகாய், உப்பு சேர்த்து கூட்டுபோல் செய்து வாரம் ஒருநாள் சமைத்து சாப்பிட கண் குளிர்ச்சியடைந்து தேகம் பூரிக்கும்.

Originally posted 2016-04-12 15:18:11. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *