சிகரெட்டால் வரும் நோய்கள்

அமெரிக்க புற்றுநோய்த் தடுப்பு அமைப்பின் உதவியுடன் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. அமெரிக்க துணை கண்டத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பழக்கத்தாலும், அதனால் ஏற்படும் நோய்களாலும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது.

இங்கிலாந்தில் இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். இதுதவிர உலக ஐக்கிய சுகாதார அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் புகையிலையால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் அறுபது லட்சம் பேர் பலியாவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகை பிடிப்பவர்கள் மட்டும் அல்லாமல், அந்த புகையை சுவாசிப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.

ஆனால் வாஷிங்டன் பல்கலைக்கழக அறிக்கையின்படி, இது மிகவும் குறைந்த அளவிலான மதிப்பீடு ஆகும். இப்போது புகையிலையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள மேலும் ஐந்து நோய்களை கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். இந்த ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான மருத்துவர் எரிக் ஜேக்கப்ஸ் கூறுகையில், ‘இந்தக் கணக்கின்படி ஒவ்வொரு ஆண்டும் புகையிலையால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் அறுபது ஆயிரம் அதிகமாகும்’ என்கிறார்.

இதே ஆய்வின் அடிப்படையில் உலக அளவிலான எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், சுமார் 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் கூடுதலாக புகைபிடிக்கும் பழக்கத்தால் மரணம் அடைகின்றனர். இது மிகவும் ஆபத்தான முன்னேற்றம். இங்கிலாந்து மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட, இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் சுமார் 55 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் ஆவார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில், ஆய்வு நடக்கும் போதே 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்தார்கள்.

புகைபிடிக்கும் பழக்கம் இருந்தவர்களின் இறப்பு விகிதம் மற்றவர்களை விட சுமார் 3 மடங்கு அதிகம். இதுதவிர 17 சதவீதம் பேர் இதுவரை புகையிலையுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத மேலும் ஐந்து நோய்களால் இறந்தது கண்டறியப்பட்டது. இந்த நோய்கள், கணக்கெடுப்பின் போது சேர்க்கப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் தனி கவனம் எடுத்து ஆராய்ச்சி நடத்தியதில், புகைப்பழக்கத்தால் ரத்த நாள சிதைவு, குடல் புண், இருதய நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் சுவாசம் சம்பந்தமான பல நோய்கள் வரும் வாய்ப்புகளை இருமடங்கு பெருக்குவதாக கூறி உள்ளனர்.

இந்த பழக்கம் இருப்பவர்கள், குடலுக்கு சரியாக ரத்தம் செல்லாததால் ஏற்படும் ஒரு விதமான அறிய நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய வாய்ப்புகள் 6 மடங்கு அதிகம் என்பதையும் கண்டறிந்தனர். இதுவரை புகையிலையால் ஏற்படும் நோய்கள் என்று நிரூபிக்கப்படாத கர்ப்பப் பை மற்றும் மார்பக புற்று நோய் ஆகியவையும் புகையால் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Originally posted 2016-01-11 03:07:18. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *