உடல்பருமன் குறைக்க உதவும் சுரைக்காய் ஜூஸ், சீரக டீ, திரிபலா பொடி!

உடல்பருமன்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் வரும் ஒரு பெரும் பிரச்னை. இதற்கான காரணத்தை வெறும் ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. பெரியவர்களைப் பொறுத்தமட்டில், உடல் உழைப்பு குறைந்துபோனது மிக முக்கியக் காரணம் என்றால், குழந்தைகளைப் பொறுத்த வரை நொறுக்குத்தீனிகள் மற்றும் மைதா நிறைந்த உணவுகள் உண்பது காரணமாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, எல்லா விளையாட்டுகளும் வீடியோ கேமாகச் சுருங்கிப்போனதால், வெளியே சென்று ஓடி, ஆடி விளையாடுவது குறைந்து போய் குழந்தைகள் வீட்டுக்குள் அடைந்துகிடப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது. ஹார்மோன் ஊசி செலுத்தப்பட்ட சிக்கன் உணவுகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை உண்பதாலும் `ஒபிசிட்டி’ எனப்படும் உடல் எடை அதிகரிப்பு நிகழ்கிறது. மேலும், கம்ப்யூட்டரே கதி என்று மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்வதும் ஒரு காரணம்.

உடல் பருமன்

வேறு காரணங்கள்!

இவை தவிர பரம்பரையாக வரும் நோய்கள், ஹார்மோன் பிரச்னைகள், தூக்கமின்மை, அதிகக் கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுவது, சத்தற்ற உணவுகளை அதிக அளவில் உண்பது, அதிகமாக மது அருந்துவது, மருந்தின் பக்க விளைவுகள் ஆகியவை உடல்பருமனுக்கான காரணங்களாக அமைகின்றன.

என்ன செய்யலாம்?

உடல்பருமனைக் குறைக்க ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்..

எலுமிச்சையும் தேனும்

எலுமிச்சையும் தேனும்

ஒரு கப் சுத்தமான நீரை எடுத்துச் சூடுபடுத்திக்கொள்ளவும். மிதமாகச் சூடானதும் அதனுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. சுமார் இரண்டு மாதங்கள் இதைத் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் தெரியும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் கருமிளகு சேர்த்தும் குடிக்கலாம்.

திரிபலா பொடி

ஒரு கப் நீரை எடுத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் திரிபலா பொடியை சேர்த்துக்கொள்ளவும்ம். இரவு முழுக்க இதை அப்படியே வைத்திருந்து, மறுநாள் காலை அது அளவில் பாதியாக ஆகும்வரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி, மிதமான சூட்டில் எடுத்துக்கொண்டு இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்துக் குடித்து வந்தாலும் எடை குறையும்.

திரிபலா பொடி

சுரைக்காய் ஜூஸ்

சுரைக்காயை தோல் மற்றும் நடுப்பகுதியை நீக்கிவிட்டு, மிக்ஸியில் அரைத்துச் சாறாக்கிக் கொள்ளவேண்டும். துளசி இலை மற்றும் புதினா இலையை அரைத்து சுரைக்காய் சாற்றுடன் கலந்து தினமும் குடிக்க வேண்டும். சுரைக்காய் உடல்பருமனுக்கு மிக நல்ல மருந்து. வயிற்றுப் பிரச்னைகள், இதயத் தமனி அடைப்பு போன்றவற்றுக்கும் இது பலன்தரும்.

சீரக டீ

நான்கு அல்லது ஐந்து கப் நீரைச் சூடாக்கிக்கொள்ளவும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் சீரக விதை, கொத்தமல்லி விதை, பெருஞ்சீரக விதை சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் சூடாக்கி ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இதைக் குடித்துவந்தால், நிச்சயம் பலன் உண்டு.

உணவு முறை மாற்றம்

உணவு முறை மாற்றம்

காலை உணவாக மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய பழங்கள், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிக கலோரி உள்ள உணவுகளை மதியம் சாப்பிட வேண்டும். இரவில் உணவு செரிமானமாகக் குறைந்த நேரமே இருப்பதால், மிக எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை இரவு ஏழு மணிக்கு முன்னதாகவே சாப்பிட்டுவிடுவது நல்லது.

குழம்புப் பொடி

நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், `ஆறு சுவைகளும் இருந்தால்தான் உணவை அதிகமாக நாம் சாப்பிட மாட்டோம்’ என்கிறது ஆயுர்வேதம். இதற்காக எல்லாக் குழம்புகளுடனும் சேர்க்கும் வகையில் ஒரு குழம்புப்பொடியைத் தயாரித்துக்கொள்வது நல்லது. ஐந்து டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் வெந்தய விதை, ஒரு பெரிய பிரிஞ்சி இலை, அரை டீஸ்பூன் சீரக விதை, அரை டீஸ்பூன் கடுகு, ஒரு சிறிய லவங்கப்பட்டை, ஐந்து கிராம்பு சேர்த்து ஒன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.

தண்ணீரே போதும்

தண்ணீரைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். கொஞ்சம் சூடான தண்ணீரை மதிய உணவு மற்றும் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக குடிக்க வேண்டும். இது எளிமையானது; மிகச் சிறந்த பலன் தரக்கூடியது. கண்ணின் கீழே வரக்கூடிய கருவளையம் மறைவதற்கும் இது நல்ல மருந்து.

பிராணாயாமம்

வேறு என்ன செய்யலாம்?

* காலையில் சீக்கிரமாக எழுவதும், இரவில் சீக்கிரமாகத் தூங்குவதும் முக்கியம்.

* விலா எலும்புக்குக் கீழ், எள் எண்ணெயால் மசாஜ் செய்யலாம். இது செரிமானத்துக்கு உதவும்.

* தினமும் பிராணயாமம் செய்வது வயிற்றுத் தசைகளைக் குறைக்கும்

* உணவை மூன்று வேளை சாப்பிடவேண்டும். ஆனால், பசிக்காமல் சாப்பிடக் கூடாது. அப்போதுதான் செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்படும்.

* இஞ்சி ஊறுகாயோடு காலை உணவைத் தொடங்கலாம். இஞ்சி செரிமானத்துக்கு உதவும்.

* கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் மூன்றையும் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

துரித உணவுகள்

என்னவெல்லாம் செய்யக் கூடாது?

* அதிகக் கொழுப்பு, அதிகச் சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* உப்பு, காரம் நிறைந்த, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* துரித உணவுகளைச் சாப்பிடக்கூடாது.

* புகை பிடித்தல் , மதுப்பழக்கம் கூடாது.

* பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

* மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். தியானம், யோகா போன்றவற்றைச் செய்யலாம்.

மேலும் பொதுவாக, வாழ்க்கை முறையை மாற்றுவது உடல்பருமனைக் குறைக்க நிச்சயம் உதவும். மூன்று வேளையும் சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். கலோரிகளை எரிக்க, சாப்பிட்ட பின்னர் கொஞ்ச தூரம் நடக்கலாம். தினமும் உடற்பயிற்சியை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை, வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வத்தை அவர்களிடம் ஏற்படுத்த பெற்றோர் முயற்சிக்க வேண்டும். பெற்றோரும் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடலாம். இதனால் உடல்பருமன் குறைவதோடு குழந்தைகளுக்காகவும் நேரம் ஒதுக்குவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். இந்த முறைகளைப் பின்பற்றினால், உடல்பருமன் குறைவதும், அழகான உடல்வாகைப் பெறுவதும் உறுதி.

Originally posted 2017-03-21 02:02:45. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *