சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த எளிய கால் பயிற்சிகள்

சர்க்கரை நோயாளிகள் கால், கை மூட்டுகளில் வலியை உணர்வார்கள். இவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த எளிய கால் பயிற்சிகள்
கெண்டைக்கால் சதையை நீட்டுதல்: முழங்கை மடங்காமல் கைகளை நீட்டி, உள்ளங்கைகளை சுவரில் பதிக்க வேண்டும். கால்கள் சுவரிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில் உள்ளங்கால்களால் தரையைக் கெட்டியாக அழுத்தியபடி நிற்கவேண்டும். பின்னர் கைகளை மடித்து, நீட்ட வேண்டும். அதேசமயம் உடல், கால்கள், பாதங்கள் நேராக இருக்கும்படியும் வைத்து முன்னும் பின்னும் அசையவேண்டும். இப்பயிற்சியை 10 முறை செய்யவும். இப்பயிற்சியால் கெண்டைக்கால் பிடிப்பு நீங்கும். கால் மரத்துப் போகாது.

குதிகாலை உயர்த்துதல்: பாதத்தின் முன்பகுதியை அழுத்தி குதிகாலை உயர்த்தி, தாழ்த்த வேண்டும். இதுபோல் 20 முறை செய்யவேண்டும். உங்கள் உடலின் முழு எடையையும் ஒரு காலில் தாங்கிக்கொண்டு நிற்க வேண்டும். இன்னொரு காலுக்கும் அதே போல் செய்யவும்.

நாற்காலி பயிற்சி: ஒரு நாற்காலியில் உட்காரவேண்டும். கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்து உட்காரவேண்டும். இவ்வாறு 10 முறை செய்யவேண்டும்.

கால் வீசுதல்: ஒரு ஸ்டூலில் ஏறி நின்று அருகில் உள்ள மேஜை அல்லது ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு ஒரு காலை ஸ்டூலில் இருந்து எடுத்து முன்னும் பின்னுமாக வேகமாக ஆட்ட வேண்டும். இதுபோன்று 10 முறை செய்ய வேண்டும். இன்னொரு காலுக்கும் இதே போல் பயிற்சி செய்யவேண்டும்.

நடத்தல்: தினமும் 30 நிமிஷங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை சற்று வேகமாக நடக்கவேண்டும். நடக்கும் தூரத்தைப் படிப்படியாக அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்.

மாடிப்படி பயிற்சி: பாதத்தின் முன்பகுதியை மட்டும் ஊன்றியபடி மாடிப்படிகளில் வேகமாக ஏறவேண்டும். நுனி விரல்கள் பயிற்சி: ஒரு நாற்காலியின் பின்புறமாக நின்று பிடித்துக்கொள்ளவேண்டும். நின்ற இடத்திலேயே கால் விரல்களை உயர்த்தி, தாழ்த்தவேண்டும்.

முழங்கால் வளைத்தல்: ஒரு நாற்காலியைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். முதுகை வளைக்காமல் (நேராக வைத்துக்கொண்டு) முழங்காலை 10 முறை மடக்க வேண்டும். கால்களை நீட்டி தரையில் உட்காரவேண்டும். பின்னர் உள்ளங்கைகளைத் தரையில் பதித்து, சிறிது பின்னால் சாய்ந்தபடி உட்காரவேண்டும். காலை உயர்த்தி முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் அசைக்க வேண்டும். கால் பிடிப்பு நீங்கும் வரை இவ்வாறு செய்யவேண்டும்.

Originally posted 2017-02-03 13:16:55. Republished by Blog Post Promoter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *