கருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள்

Loading...

கருப்பையினுள்ளே குழந்தைகள் இறந்து போக பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.

கருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள்
கருப்பையில் இருக்கும் போதே குழந்தை இறந்துவிடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வாரங்களுக்கு பின்பு கருப்பையிலே இறந்து விட்டால் அது intra uterine death(IUD) எனப்படுகிறது.

அதாவது 28 வாரங்கள் (7 மாதம் ) ஆன குழந்தைகள் இறந்தால் அது குழந்தையின் இறப்பு எனப்படுகிறது. அதற்கு முந்தி இறந்தால் அது கருக்கலைவதை(miscarriage or abortion ) எனப்படுகிறது.

என்ன காரணத்தினால் இந்தக் குழந்தைகள் இறக்கலாம்?

உள்ளே இருக்கும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பதார்த்தங்கள் அனைத்தும் தொப்புள் கொடியின்(umbilical cord) ஊடாகவே குழந்தைக்கு கிடைக்கிறது. சிலவேளை இந்த தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொள்வதால் அதனூடாக ரத்த ஓட்டம் நடைபெறாமல் குழந்தை இறக்கலாம்.

இந்த தொப்புள் கொடி சூழ் வித்தகம் (placenta) மூலமே தாயில் இருந்து ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும். இந்த சூல்வித்தகம் கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயில் இருந்து குழந்தைக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொடுக்கும். இந்த சூழ் வித்தகம் குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரியும். சில வேளை இது குழந்தை பெற முன்பே பிரிந்து விட்டால் குழந்தை இறந்து விடலாம்.

போதிய வளர்ச்சியில்லாத குழந்தைகள் கருப்பையின் உள்ளேயே இறந்து விடலாம்.

குழந்தையின் உடலிலே பிறப்புக் குறைபாடுகள் ஏதாவது இருப்பதால் குழந்தை இறக்கலாம்.

இப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தக் காரணமும் இல்லாமலும் குழந்தை சடுதியாக கருப்பையின் உள்ளேயே இறந்து விடலாம்.

எப்படியான தாய்மாரின் குழந்தை இப்படி இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்?

35-வயதிற்கு மேற்பட்ட தாய்மார்

நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தாய்மார்

உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார் (pregnancy induced hypertension)

போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்ட தாய்மார்

மது மற்றும் புகைப் பிடிக்கும் தாய்மார்

இப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாத தாய்மாரின் குழந்தைகளும் சடுதியாக இறந்து விடலாம்.

இதைத் தடுப்பதற்கான வழிகள்?

முற்று முழுவதாக இதைத் தடுக்க முடியாவிட்டாலும் மேலே நான் சொன்ன பிரச்சினைகள் உள்ள தாய்மார்கள் தொடர்ச்சியாக வைத்தியரைச் சந்தித்து தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மற்றைய விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.

மேலும் நீரழிவு நோயினால் மற்றும் உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மாரின் குழந்தைகள் கொடுக்கப்பட்ட தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னே பிறக்க வைப்பது (மருத்துவ முறை மூலம்) உகந்தது. ஏனென்றால் இந்தக் காலத்திற்குப் பிறகு இந்தத் தாய்மார்களில் குழந்தைகள் சடுதியாக இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

கருப்பையினுள்ளே போதிய வளர்ச்சியைப் அடையாத குழந்தைகளை கூட குறிப்பிட்ட காலத்திற்கு முன்னமே பிறக்க செய்ய வேண்டி ஏற்படலாம்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close