உடலில் நீர் கோர்ப்பது ஏன்?

Loading...

மகளிர் மட்டும்

மாதவிலக்குக்கு ஒரு வாரம் முன்பு உங்கள் எடையை சரி பாருங்கள். வழக்கத்தைவிட ஒன்றிரண்டு கிலோ அதிகரித்திருப்பதை உணர்வீர்கள். `எடை அதிகரிக்கிற மாதிரி ஒண்ணும் பண்ணலையே… வழக்கமான சாப்பாடு… வழக்கமான வேலைகள்தானே தொடருது… அப்புறம் எப்படி எடை கூடும்’ எனக் குழம்புவீர்கள். அது மட்டுமா? மாதவிலக்கு வருவதற்கு சில நாட்கள் முன்பிருந்தே உங்கள் உடலும் கனத்த மாதிரித் தெரியும். உடலே ஏதோ வீங்கினாற் போலத் தோன்றும்.

இதற்கெல்லாம் காரணம் உடலில் சேர்கிற நீர்க் கோர்ப்பு என்கிறார் மருத்துவர் நிவேதிதா. ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம்
என்கிற பிரச்னையின் அறிகுறிகளில் ஒன்றான இந்த நீர்க்கோர்ப்பு பற்றியும், காரணங்கள் மற்றும் தீர்வுகளையும் முன் வைக்கிறார் அவர்.

உடல் முழுக்க உப்பினாற் போன்றும், கனமானது போன்றும் உணரவைக்கிற இந்த நீர்க்கோர்ப்புப் பிரச்னைக்கு இதுதான் காரணம் எனத் துல்லியமாகச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால், ஹார்மோன் மாற்றங்களுக்கு இதன் பின்னணியில் முக்கிய பங்கு உண்டு. பரம்பரையாகவும் இந்தப் பிரச்னை தொடரலாம். உணவில் சிலவகை வைட்டமின்கள் குறைவதும், உப்பு அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதும்கூட காரணங்கள். வாழ்க்கை முறையில் சின்னச் சின்ன மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் இந்த அவதியில் இருந்து விடுபடலாம்.

தினமும் சிறிது நேரத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் பிரச்னைகளின் தாக்கம் குறைகிறது, உடலில் நீர்க்கோர்ப்பது உள்பட.

உணவில் உப்பின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உங்களுக்கே தெரியாமல் உப்பின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் அதையும் தவிர்க்கவும். சமைத்த உணவுகளில் கூடுதல் உப்பு சேர்ப்பதையும், மறைமுகமாக உப்பு அதிகமுள்ள சோயா சாஸ், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கவும்.

காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும். காபி மற்றும் ஆல்கஹால் வேண்டாம். இந்த முறைகளைக் கடைப்பிடித்தும் உங்கள் பிரச்னையின் தீவிரம் குறையவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்கலாம். வாட்டர் பில்ஸ் என்றழைக்கப்படுகிற சில மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அவற்றை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஒருவரது உடல்நலத்தைப் பரிசோதித்த பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அலட்சியம் செய்தால் பக்க விளைவுகள் வரலாம். கருத்தரித்தலை தவிர்க்க கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வோருக்கும் பி.எம்.எஸ். எனப்படுகிற ப்ரீ மென்ஸ்டுரல் சிண்ட்ரோம் பிரச்னைகள் குறைவதாகவும் அதன் விளைவாக உடலில் நீர்க்கோர்க்கும் அவதியும் தவிர்க்கப்படுவதாகவும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கால்சியம், மெக்னீசியம், தையாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற பி வைட்டமின்கள், வைட்டமின் ஈ போன்றவற்றின் குறைபாட்டால்தான் பிரச்னை என உறுதி செய்யப்பட்டால் மருத்துவ ஆலோசனையின் பேரில் அவற்றை சப்ளிமென்ட்டுகளாகவோ, இயற்கையான உணவுகளின் மூலமோ எடுத்துக் கொள்வதும் பலன் தரும்.

மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பு என்றில்லாமல் மாதம் முழுக்கவே உடலில் நீர்கோர்ப்பு பிரச்னை தொடர்ந்தால், உங்கள் மருத்துவர் அதன் அறிகுறிகள் பற்றி தினமும் குறிப்பு எழுதச் சொல்வார். அவற்றை வைத்து அது மாதவிலக்கு தொடர்பான சிக்கலா அல்லது குடல் தொடர்பான பிரச்னையின் அறிகுறியா எனப் பார்த்து அதற்கேற்ற சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close