மனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்

Loading...

கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான்.

மனிதனின் ஒரு கால் மட்டும் உயரம் குறைந்து இருப்பதற்கு காரணம்
மனிதனின் இரண்டு கால்களும் ஒரே உயரத்தில் ஒன்று போலவே தோற்றமளிப்பதுதான் இயல்பானது. ஆனால், சிலருக்கு இரண்டு கால்களில் ஒன்று மட்டும் உயரம் குறைந்தோ அல்லது வளைந்தோ இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. வளரும் பருவத்தில் குழந்தைகளின் தொடை எலும்பின் மேல் பகுதி அல்லது கீழ்ப்பகுதியில் அடிபட்டு குருத்துகளில் முறிவு ஏற்பட்டிருக்கலாம்.

அடிபட்டவுடன் சில சமயம் இதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். முறையான வைத்தியம் கிடைக்காமல் இந்த பகுதிகள் சரியாக பொருத்தப்படவில்லை என்றால் வளரும் குருத்துகள் தாறுமாறாக கூடிவிடும். இதனால் அந்த காலின் வளர்ச்சி சீராக அமையாமல் குட்டையாகவோ, முறுக்கியபடியோ வளருவதற்கு வாய்ப்பு உண்டாகும்.

ஒரு கால் உயரம் குறைவாக அமைவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. குழந்தைகளுக்கு, அதுவும் மூன்று மாதங்களுக்குள் இருப்பவர்களுக்கு இடுப்பு மூட்டில் சீழ்பிடித்து, சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் தொடை எலும்பின் மேல்பாகமும் அதை சார்ந்த குருத்துப் பகுதிகளும் அழிந்தே போய்விடும்.

இது போன்ற வேதனைகள் கால் மூட்டு சார்ந்த குருத்து, கணுக்கால் மூட்டு சார்ந்த குருத்தெலும்பு பகுதிகளில் உண்டாகி, அந்த கால் உயரம் குறைவாகவும், சிறுத்தும் போவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

‘செப்டிக் ஆர்த்ரைட்டிஸ்’ எனும் கொடிய சீழ்பிடிப்பு நோயினால் தன் தனித்தன்மையை, வடிவத்தை இழந்த தொடை எலும்புகளும் உண்டு. ஆனால், வளர்ந்து வரும் நமது நாட்டில் இது போன்ற நோய்கள் தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.

குழந்தைகள் தவழும் பருவத்திலோ, தளிர்நடை வயதிலோ, தொடைப் பகுதியில் அல்லது காலில் வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல் வந்தால் பெற்றோர்கள் அதை அலட்சியப்படுத்திட வேண்டாம். உடனே குடும்ப டாக்டரையோ, குழந்தை வைத்தியரையோ அணுகி ஆலோசனை கேட்பது அவசியம்.

கால்கள் பெரும்பாலும் உயரம் குறைந்து மெலிந்து போவதற்கு மிக முக்கிய காரணம் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோதான். இப்போதெல்லாம் நாடு முழுவதும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் போலியோ தடுப்பு மருந்து எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. இதனால் வருங்காலத்தில் இந்த கொடிய நோய், பெரியம்மை போல மருத்துவ வரலாற்றில் மட்டும் இடம் பெறும் நோயாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close