மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கும் கட்டுக்கொடி

Loading...

மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு, சிறுநீரில் ரத்தம் கலந்து போகுதல், சீதபேதி, வெள்ளைப்போக்கு பிரச்னைகளுக்கு கட்டுக்கொடி, துத்தி செடியை பயன்படுத்தி தீர்வு காணலாம். கிராமங்களில் எளிதில் கிடைக்க கூடியது கட்டுக்கொடி. இதன் கொடி பார்ப்பதற்கு கயிறு மாதிரி இருக்கும். நீண்டு வளர்ந்து இருக்கும். இதன் இலை நாக்கு வடிவத்தில் காணப்படும். பனை மரம், ஈச்ச மரத்தின் மீது கட்டுக்கொடி படர்ந்து காணப்படும்.

இது, ரத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.கட்டுக்கொடியை பயன்படுத்தி மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கட்டுகொடி இலைகள் 10 எடுத்துக் கொள்ளவும். இதை துண்டுகளாக்கி தண்ணீரில் போடவும். இலைகளை கைகளால் நன்றாக பிசையவும். இலைசாறு தண்ணீரில் கலந்து விடும். பின்னர், இலை சக்கையை மட்டும் எடுத்துவிட்டு தண்ணீரை அரை மணிநேரம் வைத்திருந்தால் ஜெல்லி போன்று மாறும்.

ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுக்குள் வரும். சீத கழிச்சலுக்கு இது மருந்தாகிறது. அதிக உதிரப்போக்கை கட்டுக்குள் கொண்டுவரும் அற்புதமான மருந்தாக கட்டுக்கொடி விளங்குகிறது. மரத்தின் பட்டையை பயன்படுத்தி மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒதிய மரப்பட்டையை பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை 2 கிராம் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர், ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு காலை, மாலை வேளையில் குடித்துவர மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.துத்தி செடியை பயன்படுத்தி ரத்தபோக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். சாலை ஓரங்களில் கிடைக்க கூடியது துத்தி செடி.

இதனுடைய பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். மாலை நேரத்தில் பூக்கும் தன்மை உடையது. துத்தி செடியின் காய்கள் சக்கரம் போன்று காணப்படும். இலைகள் இதய வடிவில் இருக்கும். துத்தி இலையை பசையாக அரைத்து எடுக்கவும். பெரிய நெல்லிக்காய் அளவுக்கு பசையை எடுத்து அரை டம்ளர் காய்ச்சிய பால் அல்லது மோரில் போட்டு கலக்கவும். இதை குடித்துவர வலியுடன் கூடிய அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். துத்தி இலைகள் ரத்தத்தை கட்டுப்படுத்தும். துத்தி செடியின் வேர்கள் சிறுநீரக பழுதை சரிசெய்யும் தன்மை கொண்டது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close