தள்ளிப் போடாதே!

Loading...

பூஜை, புனஸ்காரங்களில் ஆரம்பித்து, வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் நல்ல நாள் பார்ப்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு நாளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது பெண்களின் தலை எழுத்து. அந்த நல்லநாள் மாதவிடாய் வரும் நாளாக இருக்கக் கூடாது என்பதே அவர்களது பெருங்கவலை. மாதவிடாயைத் தள்ளிப் போட மாத்திரைகள் எடுத்துக் கொள்வது பரவலான பழக்கமாக இருக்கிறது. அதன் பின் விளைவுகளோ, பயங்கரங்களோ தெரியாமல் அடிக்கடி அவற்றை எடுத்துக் கொள்கிறவர்கள், இனியாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

திருமணமாகாத பெண்களும், திருமணமான பெண்களும் மாதவிலக்கைத் தள்ளிப் போடும் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இரண்டு பிரிவினருக்குமே இது ஆபத்துகளை கொடுக்கக்கூடியது.இந்த மாத்திரைகள் செயற்கை ஹார்மோன்களால் ஆனவை. ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களான இவற்றால் மாதவிலக்கைத் தள்ளிப் போடச் செய்யவும் முடியும். வரவைக்கவும் முடியும்.

திருமணமாகாத பெண்கள் இவற்றை எடுத்துக் கொள்வதால், அந்த செயற்கை ஹார்மோன்கள், உடலின் இயற்கையான ஹார்மோன்களை பாதிக்கும். அதனால் இளம் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படும். மாதவிலக்கு சுழற்சி முறை தவறிப் போகும். திருமணத்துக்கு முன் அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்கிற பெண்கள், பிற்காலத்தில் PCOD எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையால் பாதிக்கப்படும் அபாயமும் அதிகம்.

திருமணமான பெண்களுக்கும் இந்த மாத்திரைகள் பிரச்னைகளையே தருகின்றன. மாத்திரைகளை எடுத்தபோதும், சிலருக்கு கருமுட்டை வெளிவரலாம். கர்ப்பம் தரிக்கலாம். மாத்திரைகள் எடுக்காமல் இருந்தாலாவது மாதவிலக்கு தள்ளிப் போனதை வைத்து, பரிசோதனை செய்து கர்ப்பம் உண்டானதைக் கண்டுபிடித்திருப்பார்கள். மாத்திரை எடுத்துக் கொண்ட நம்பிக்கையில் அலட்சியமாகவிடுவதால், கருக்குழாயில் கரு உண்டாகியிருக்க வாய்ப்புகள் உண்டு. கருக்குழாய் கர்ப்பத்தை வளர விட முடியாது. ஒரு சிலருக்கு அதையும் மீறி சாதாரண கரு உருவாகி இருந்து, அது பெண் குழந்தையாக இருந்தால், அந்தப் பெண் குழந்தையின் கர்ப்பப்பை மற்றும் சினைப்பை வளர்ச்சி பாதிக்கப்படலாம்.

தொடர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வோருக்கு சினைப்பையில் கட்டிகள் வரலாம். ஹார்மோன் சமநிலையின்மையால் லூட்டின் சிஸ்ட் என்கிற கட்டி வந்து, அதீத வயிற்று வலியைத் தரலாம். மார்பகங்கள் கனத்தும், கை, கால்களில் வலியும் வீக்கமும் காணப்படும். சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை உணர்வார்கள்.தெரிந்தோ, தெரியாமலோ இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டுவிட்டீர்கள்… கருவும் தங்கிவிட்டது. அந்தக் கர்ப்பத்தைத் தொடரலாமா, கூடாதா என்கிற கேள்வி எழலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கர்ப்பத்தை சோதித்துப் பார்த்து, எந்தப் பிரச்னைகளும் இல்லை என்றால் தொடரலாம்.மற்றபடி மாதவிடாய் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. எப்போதுமே இயற்கையுடன் போராடினால் பாதிப்பு நமக்குத்தான்.”

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *