எனக்கு மாதவிடாய் நின்று ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும், சில நேரங்களில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது?

Loading...

டாக்டர் எனக்கொரு டவுட்டு

எனக்கு மாதவிடாய் நின்று ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனாலும், சில நேரங்களில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது? இது எதனால்? இது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியா?

ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ சீனிவாசன்…

“பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் நின்றபிறகு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறையும். இதனால் பிறப்புறுப்பின் சருமப் பகுதி வறண்டு, அரிப்பு, எரிச்சல் ஏற்படுவதால் தொற்றுப்புண்கள் ஏற்படவோ, தானாகவே கிழிவதற்கோ வாய்ப்புண்டு. அந்த நேரங்களில் ரத்தக்கசிவு ஏற்படும். மாதவிடாய் நின்றவுடனேயே மருத்துவரிடம் சென்று மார்பகப் பரிசோதனை, கர்ப்பப்பை பரிசோதனைகளோடு கர்ப்பப்பை-வாய் பரிசோதனையையும் அவசியம் செய்து கொள்ள வேண்டும். அதிக வலி இல்லாமல் செய்யப்படும் இந்த பரிசோதனைக்கு அனஸ்தீசியா தேவையில்லை. இந்த பரிசோதனை முடிவு ‘நெகட்டிவ்’ என்று இருந்தால், 3 வருடங்களுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நிம்மதி அடையலாம்.

சில பெண்களுக்கு பிரசவத்தின்போது ரத்தப்போக்கு அதிகம் இருந்தாலோ, வேறு ஏதேனும் பிரச்னை இருந்தாலோ பிரசவத்துக்குப் பின் அவர்களுக்கு கர்ப்பப்பையை அகற்றிவிடுவோம். அந்த நேரத்தில் கர்ப்பப்பை வாயை அகற்றாமல் அறுவை சிகிச்சை செய்திருந்தால், கர்ப்பப்பையில் புண் வர வாய்ப்புண்டு. அந்த புண் இருப்பது வெளியே தெரியாது. ஆனால், ரத்தக் கசிவு மட்டும் இருக்கும். பிறப்புறுப்பில் உள்ள புண்ணால் வரும் ரத்தக் கசிவும் கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறியே.

இதுதவிர, மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்களுக்கு இரவு நேரங்களில் அதிக உடல்சூடும், வியர்வை மிகுந்தும் இருக்கும். இந்தப் பிரச்னைகளுக்காக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கும், மார்பகப் புற்றுநோய்க்காக மருந்து உட்கொள்பவர்
களுக்கும் இதுபோன்ற ரத்தக்கசிவு ஏற்படும்.

இவர்கள் நெருக்கமானவர்களின் அனுபவங்களைக் கேட்டு, தானாகவே மருந்து எடுத்துக் கொள்வது தவறு. மாதவிடாய் நின்ற பெண்கள் மருத்துவரை அணுகி அவர்கள் அறிவுரைப்படி மருந்து எடுத்துக் கொள்வதே நல்லது. ரத்தக்கசிவு சிறிதளவே இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகவேண்டும். நெருங்கிய உறவினர்கள் யாருக்கேனும் மார்பகப்புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பின், நீங்களும் அவசியம் புற்றுநோய்களுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.”

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close