இயற்கைக்கு இயற்கை வைத்தியம்!

Loading...

ஹார்ட்டிகல்ச்சர்

மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்கும் நோய்கள் வருகின்றன. சில பிரச்னைகளுக்கு மாத்திரைகள் எடுக்கிறோம். சிலதுக்கு ஊசிகளாகப் போட்டுக் கொள்கிறோம். சிலருக்கு அலோபதிதான் சரியாக வருகிறது. வேறு சிலருக்கு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களே உதவுகின்றன. நமக்கு எப்படி நோய்களும் நோய் தீர்க்கும் வழிமுறைகளும் ஏராளமாக இருக்கின்றனவோ, அதே போன்று செடிகளுக்கும் நோய்களும், நோய் தீர்ப்பு முறைகளும் உள்ளன.

நமக்கு உடல்நலம் சரியில்லாத போது எடுத்த உடனேயே மருத்துவரைப் பார்க்காமல் கை வைத்தியம் செய்வோம் இல்லையா? அதே போல செடிகளுக்கு பிரச்னை வரும்போது வீட்டிலுள்ள பொருட்களை வைத்து என்ன செய்யலாம் வீட்டிலுள்ள இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் சிறிது எடுத்து அப்படியே பச்சையாக அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சிறிது வேப்பெண்ணெய் கலந்து, அதன் காட்டத்துக்குத் தகுந்த அளவு தண்ணீர் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை நோய் இருக்கிறதோ இல்லையோ செடிகளுக்கு அடித்து வந்தால் நோய் தாக்குதல் குறையும்.

அடுத்து வேம்பு சம்பந்தப்பட்ட பொருட்கள். வேப்பிலைகளை எடுத்து சாறாக்கி, அதை மண் பானையில் வைத்திருந்து புளிக்கச் செய்து, அதை செடிகளுக்குத் தெளிக்கலாம். வேப்பிலைகளை பச்சையாகவே அரைத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்தும் செடிகளுக்கு மருந்தாக இடலாம். இவற்றை எல்லாம் பூச்சி விரட்டிகளாக நீங்கள் பயன்படுத்தலாம். பூச்சிகளோ, எறும்புகளோ வரவில்லை என்றாலே பாதி நோய்கள் உங்கள் செடிகளைத் தாக்காது. ஏற்கனவே சொன்னது போல இவற்றை நோய் வருவதற்கு முன்பே கொடுக்கலாம்.

வீட்டில் புளித்த மோர் இருக்கும். அதை மத்து கொண்டு நன்கு கடைந்துவிடுங்கள். அத்துடன் மஞ்சள் தூளும், வேப்பெண்ணெயும் கலந்து கொள்ளவும். இது 25 மி.லி. அளவு இருந்தால், மீதி 75 மி.லி. அளவு தண்ணீர் கலந்து செடிகளுக்குத் தெளிக்கவும். இது பூச்சிகளை விரட்டுவதைவிட, நோய்களுக்குக் காரணமான பூஞ்சான்களைக் கட்டுப்படுத்தும். இந்தக் கலவையிலேயே அரப்பு, தேங்காய் பால்கூட கலந்து கொள்ளலாம்.

கடைகளில் வேப்பெண்ணெய் கிடைக்கும். அதை 10 மி.லி. அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம். நோய் தாக்குதல் அதிகமாக இருந்தால் 25 மி.லி. அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அடுத்து நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது எறும்புகளைத் தடுக்கும் வழிமுறைகள். அதற்குத் தோட்டம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். தொட்டிகளைச் சுற்றி லேசாக எறும்புப் பொடி தூவலாம். மஞ்சள் தூள் போடலாம் அல்லது வேப்பங்கொட்டையை லேசாகத் தட்டியும் போடலாம். எறும்புகள் வராமல் தடுக்கும் சாக்பீஸால்கூட தொட்டிகளின் விளிம்பிலோ, தொட்டிகளைச் சுற்றியோ கோடு இழுத்து விடலாம். இது நோய் தடுப்பு முறை அல்லது பூச்சிக்கட்டுப்பாட்டு முறை.

அடுத்து ஸ்டிக்கி டிராப்ஸ். இது மஞ்சள், நீலம் என பல கலர்களில் இருக்கிறது. இது ஒரு சதுரவடிவ ஷீட் போன்று இருக்கும். எண்ணெய் தடவியது போல ஒட்டும் தன்மையுடன் இருக்கும். இதை நீங்கள் செடிகள் வைத்துள்ள இடங்களில் தொங்க விட்டால், செடிகளைத் தாக்கும் பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும்.

நல்ல பூச்சிகள் இருந்தாலும் தெரியும். கெட்ட பூச்சிகளும் தெரியும். இந்த ஷீட்டில் ஒட்டும் பூச்சிகளின் அளவை வைத்து அவை அதிகமாக உள்ளனவா, குறைவாக உள்ளனவா என்று நீங்கள் கண்டுபிடிக்கலாம். ஒட்டிக் கொள்கிற கெட்ட பூச்சிகள் அப்படியே அழிந்து போய்விடும். என்னென்ன பூச்சிகள் இருக்கின்றன எனக் கண்டுபிடிக்கவும் அவற்றின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ளவும் பயன்படும். இது அதிக செலவில்லாத முறை. ஆனால், பெரியளவிலான பாதிப்பைத் தடுக்கக்கூடியது.

இது போக நொச்சி, எருக்கு, ஊமத்தை, துத்தி போன்றவற்றின் இலைகளை அரைத்துக்கூட பூச்சி விரட்டிகள் தயாரிக்கலாம். அடுத்தது கோமியம். சாணத்தை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் உபயோகிக்கிறீர்களோ, அவ்வளவு வீரியம். அதே மாதிரி கோமியத்தை எவ்வளவுக்கு எவ்வளவு வைத்திருந்து உபயோகிக்கிறோமோ அவ்வளவு வீரியம். எனவே, கோமியம் கிடைத்தால் தேக்கி வைத்து, அதில் சிறிது மஞ்சள் கலந்து உபயோகித்தால், அதுவே மிகச் சிறந்த பூச்சிக்கட்டுப்பாட்டு முறையாகும். நாட்டு மாட்டின் கோமியம் என்றால் பலன் பலமடங்கு இருக்கும்.

ஒரு சின்ன அளவு பெருங்காயத்தை எடுத்து தொட்டியில் புதைத்துவிட்டால் பூக்கள் நன்கு வரும். வெள்ளரி, தடியங்காய், பூசணிக்காய் செடிகளில் இதை வைத்தால் பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும். சங்க இலக்கியப் பாடல்கள் தொடங்கி, நமக்கு பல்வேறு சித்த, ஆயுர்வேதக் குறிப்புகள், இயற்கை முறை குறிப்புகள் என ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தினாலே செடிகளின் வளம் காக்கலாம்.

வேப்பங்கொட்டை விழும் காலத்தில அதை சேகரித்து சுண்டக் காயவைத்துப் பத்திரப்படுத்துங்கள். ஒரு கை அளவு எடுத்து நன்கு இடித்து, அதை ஓர் இரவு முழுக்க ஊற வைத்து, 4 மி.லி. அளவை 100 மி.லி. தண்ணீரில் கலந்து உபயோகித்தால் பூச்சிகள் வராமல் தடுக்க முடியும். ஆனால், இதை 15 நாட்களுக்கு ஒரு முறை உபயோகிக்க வேண்டும். மாதத்தில் முதல் வாரம் செடிகளுக்கு உரம் போட்டால், அடுத்த வாரம் பூச்சி விரட்டி அல்லது பூஞ்சான் கொல்லிகளை உபயோகிக்கலாம்.

எந்தத் தெளிப்பான் உபயோகிப்பதானாலும், அத்துடன் ஒரு சின்ன துண்டு (1 சிட்டிகை) காதி சோப்பு அல்லது வீரியம் இல்லாத சோப்பு எடுத்து அதையும் இதனுடன் கலக்கி அடிக்கவேண்டும். அப்போதுதான் அது ஒட்டும். தெளிப்பான்களை எப்போதும் காலையில் அல்லது மாலையில்தான் உபயோகிக்க வேண்டும். அதற்கு முன் செடிகளுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தெளித்து அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் கழித்து தெளிப்பான்களை உபயோகித்தால் செடிகள் அதை நன்கு கிரகித்துக் கொள்ளும்.

சரி… சில நேரங்களில் தவறுதலாக செடிகளுக்கு அதிக மருந்து அடித்து விட்டீர்கள். என்ன செய்வது? சிலர் ஆர்வக் கோளாறில் மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை மருந்து அடிப்பார்கள். தண்ணீர் ஊற்றினாலும்கூட செடிகள் காய்ந்து போன மாதிரி தொய்ந்து போகும். அதுதான் மருந்துப் பொருட்கள் அதிகமானதன் அறிகுறியும்கூட. இதை சரி செய்ய இன்ஸ்டன்ட் மருந்து இளநீர். 10 மி.லி. இளநீரை 100 மி.லி. தண்ணீரில் கலந்து அந்தச் செடிகளுக்கு அடித்துவிட்டால், அவை சரியாகி விடும்.

அடுத்தது பட்டைக் கஷாயம். இது கொஞ்சம் விலை அதிகமானது. ஆனாலும் மிக நல்ல பலனைத் தரக்கூடியது. கறி மசாலா பொருட்களுடன் வருமே அதே பட்டைதான். அதை 10 கிராம் அளவு எடுத்து 100 மி.லி. தண்ணீரில் போட்டு 50 மி.லி.யாக வற்றும் வரை விட்டு கஷாயம் போலக் காய்ச்சி, அந்த 50 மி.லி. கஷாயத்தை மறுபடி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து நீர்க்கச் செய்து செடிகளுக்கு முறையாக தெளித்து வந்தால் நோய் தாக்குதல் குறையும்.

கரித்துண்டுகளை செடிகளின் மேல் பகுதியில் போட்டு வைத்தால், பூஞ்சான்கள் படர்வதைத் தடுக்கும். அதனால்தான் நாங்கள் ஹைட்ரோஃபோனிக்ஸில் பயோசார் (BioChar) என சொல்லக்கூடிய கரியை உபயோகிக்கிறோம்.இப்படி எண்ணற்ற முறைகளில் உங்கள் செடிகளுக்கு மருந்துகள் தயாரிக்க முடியும். இதில் ஆர்வமுள்ளோர் எங்களைப் போன்ற தோட்டக்கலை ஆலோசகர்களிடம் தெரிந்து கொண்டோ, புத்தகங்களைப் படித்தோ அவற்றைப் பின்பற்றலாம்.

உங்கள் சுற்றுச்சூழலில் கிடைக்கக்கூடியவற்றை வைத்தே செடிகளைக் காக்கும் மருந்துகளைத் தயாரிக்க முடியும். இயற்கையின் படைப்பே அப்படித்தான். அதற்குத் தேவையானது அங்கேயே இருக்கும். அதைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இயற்கை ஒவ்வொரு பொருளையும் உருவாக்கவும், காப்பாற்றவும், அதன் நீண்ட ஆயுளுக்கும் நம்மைச் சுற்றியே வழிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அதை சரியான இடத்தில் கண்டுபிடித்து சரியான நேரத்தில் உபயோகிக்க வேண்டியது மட்டும்தான் நம் வேலை!

இதோடு நுண்ணுயிர்கள்…

Pseudomonas மற்றும் Trichoderma Virde இந்த இரண்டையும் நீங்கள் தொட்டிகளில் கலந்து விட்டால் இதுவே தீமை விளைவிக்கக்கூடிய பூஞ்சான்களை அழிக்கவல்லது.நூற்புழு என ஒன்றைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். அதை அழிப்பதற்கும் ஒருவகையான நுண்ணுயிர் இருக்கிறது. நூற்புழுக்களைத் தடுக்க இன்னொரு வழியும் உண்டு. உங்கள் தோட்டத்தில் ஒரு வரிசையில் தக்காளி விதைத்திருக்கிறீர்கள் என்றால் அடுத்த வரிசையில் சாமந்தி விதையுங்கள். சாமந்தியின் வேரில் இருந்து வெளியேறும் திரவத்துக்கு இந்த நூற்புழுக்களை அழிக்கும் சக்தி உண்டு.

இப்படி எந்த வழிக்குமே கட்டுப்படவில்லை என்ற பட்சத்தில் ரசாயனப் பூச்சிக் கொல்லிகளுக்குப் போகலாம். முடிந்தவரை மேற்சொன்ன நடவடிக்கைகளை முறையான இடைவெளிகளில் செய்து வந்தாலே நோய் தாக்குதலைத் தவிர்க்கலாம். உங்கள் கட்டுப்பாட்டை மீறும் போதுதான் ரசாயன பூச்சிக் கொல்லிகள் மற்றும் மருந்துகளை உபயோகிப்பது பற்றி யோசிக்க வேண்டும். ரசாயன உரங்களையோ மருந்துகளையோ அவர்கள் குறிப்பிட்டுள்ள அளவு மற்றும் கால இடைவெளிகளில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். அதற்கு முன் நீங்கள் உங்கள் செடிகளைத் தாக்கியுள்ள பிரச்னைகளைப் பற்றி நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்கள் பிரச்னைகளுக்கேற்ப தீர்வுகளைச் சொல்வார்கள்.

இயற்கை முறையிலேயே சிகிச்சை அளிக்கலாமா?

ரசாயன மருந்துகளை உபயோகிக்க வேண்டுமா? இது பற்றியெல்லாம் தெள்ளத் தெளிவாகச் சொல்வார்கள். செடிகளை நடுவது பெரிய விஷயமல்ல. பராமரிப்பும் நோய் தடுப்பும்தான் முக்கியம். இந்த இரண்டையும் சரியாகச் செய்தாலே உங்கள் தோட்டம் ஆரோக்கியமாக இருக்கும்.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close