சேலையை விரும்புது இளைய தலைமுறை!

Loading...

ஆடி மாதம் ஆகாத மாதம்’ என்று ஒதுக்கிய காலம் போய், ‘தள்ளுபடி ஸ்பெஷல்’ கொண்டாட்ட மாதமாக மாறியிருக்கிறது ஆடி. டெக்ஸ்டைல் தொழிலதிபர்களில் குறிப்பிடத்தக்கவரான ‘சுந்தரி சில்க்ஸ்’ மன்மோகன் ராமிடம் ஆடிக் கொண்டாட்டம் பற்றி பேச ஆரம்பித்தோம்…

”ஜவுளித் தொழிலில் எட்டாவது தலைமுறையைச் சேர்ந்தவன் நான். அதனால், சிறுவயதில் இருந்தே நேரடியாகப் பார்த்து வளர்ந்த அனுபவமும், மக்கள் என்ன விரும்புவார்கள் என்கிற கணிப்பும் எனக்கு உண்டு. இந்தப் பாரம்பரியமும் அனுபவமும்தான் எங்களுடைய பெரிய பலம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆடி தள்ளுபடியை பிரபலப்படுத்தியதே எங்க தாத்தாதான்!” என்று உற்சாகத்துடன் தொடங்குகிறார் மன்மோகன் ராம்.

”எங்க தாத்தா கோதண்டராமன் மயிலாப்பூர்ல ஜவுளிக்கடை வச்சிருந்தார். ஆடி மாசத்துல கல்யாணம் மாதிரியான விசேஷங்கள் எதுவும் வராதுங்கறதால வியாபாரம் டல்லா இருந்திருக்கு. இந்த நிலைமையை சமாளிக்கறதுக்காகத்தான் ‘தள்ளுபடி’ன்னு ஒரு விஷயத்தை தாத்தா ஆரம்பிச்சிருக்கிறார். இந்த ஐடியாவுக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சதால, தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் ஆடி மாதம் தள்ளுபடி கொடுக்க ஆரம்பிச்சிருக்கார். வியாபாரமே இல்லாத மாதமா இருந்த ஆடி மாதம், ஒரு கட்டத்துல நல்லா வியாபாரம் நடக்கிற அளவுக்கு மாறியிருக்கு. இதைப் பார்த்துட்டு மற்ற கடைக்காரர்களும் ஆடி தள்ளுபடின்னு ஆரம்பிச்சிருக்காங்க.

அதுதான் இப்போ நகைக்கடைகள் வரை ஆடி தள்ளுபடின்னு பிரபலமாகிருச்சு. ஆனா, தள்ளுபடி விற்பனைங்கற விஷயத்தை சிலர் தப்பா பயன்படுத்துறது வருத்தமா இருக்கு. நிஜ விலையில இருந்து தள்ளுபடி இருக்கும்னு நம்பித்தான் மக்கள் வர்றாங்க. அவங்கள ஏமாத்துற மாதிரியோ, மனசை கஷ்டப்படுத்துற மாதிரியோ எதுவும் பண்ணக் கூடாது. அந்த விஷயத்துல நாங்க தெளிவாவும் உறுதியாவும் இருக்கோம். ஒரு சேலையோட நிஜ விலை என்னவோ, அதுக்கு 10 சதவிகிதம் வரை வழக்கமா தள்ளுபடி கொடுப்போம். இப்போ ஆடி மாதம்கறதால 50 சதவிகிதம் வரை கூட தள்ளுபடி வைச்சிருக்கோம்.

ஆனா, அது உண்மையான தள்ளுபடியா இருக்கும். இந்த நேர்மையான வியாபாரத்தைத்தான் நாங்க பெருமையா நினைக்கிறோம்” என்றவரிடம், ’36 வயதினிலே’ படப்பிடிப்பு அனுபவங்களைக் கேட்டோம்.”சினிமா படப்பிடிப்புகளுக்கு நம் கடையில் இருந்து உடைகள் அனுப்புறது வழக்கமா நடக்கிறதுதான். ’36 வயதினிலே’ படம் ஆரம்பிச்சப்ப எங்ககிட்ட பேசினாங்க. உடைகள் தேர்வோடு, எங்களோட கடையிலயே சில காட்சிகளும் எடுத்தாங்க. ஜோதிகா, தயாரிப்பாளர் சூர்யா, இயக்குநர், காஸ்ட்யூம் டிசைனர்னு அந்த படப்பிடிப்புக் குழுவோட உழைப்பும், அவங்க பழகுன விதமும் மறக்க முடியாதது.

’36 வயதினிலே’ படத்துல ஜோதிகா கட்டிட்டு வர்ற சேலையைப் பார்த்து, ‘இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்குமோ’ன்னு கேட்கிறாங்க. ஆனா, அந்த சேலைகள் எல்லாமே அதிகபட்சமா 800 ரூபாய், 1,000 ரூபாய் விலைதான். ஜோதிகா ஜனாதிபதியைப் பார்க்கப் போற காட்சியில கட்டிட்டு வர்ற சேலை மட்டும்தான் 10 ஆயிரம் ரூபாய். அந்த அளவுக்கு சாதாரண மக்களும் வாங்கக் கூடிய அளவுதான் எங்ககிட்ட விலை இருக்கும்.

எங்க கடைகள்ல விற்கிற துணிகள் பெரும்பாலும் எங்களுடைய சொந்தத் தறிகள்ல தயாராவதுதான். நியாயமான விலையா இருக்கிறதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். லேட்டஸ்ட் ஃபேஷனை அப்டேட் பண்ணிட்டே இருக்கிறதுலயும் கவனமா இருக்கோம். அப்பா ஒரு டிசைனர்ங்கறதால என்னைவிட ரொம்ப மெனக்கெடுவார்” என்கிறார். தொடர்ச்சியான விளம்பரங்களால் வேட்டி லேட்டஸ்ட் ட்ெரண்டாக மாறி வருவது பற்றி…”இது உண்மையிலயே தமிழர்களுக்கும் பாரம்பரியத்தை விரும்பறவங்களுக்கும் சந்தோஷப்பட வைக்கிற ஒரு விஷயம்.

வேட்டி மாதிரி குர்தாவும் நம்மோட பாரம்பரிய உடைதான். குர்தாவும் பிரபலமாகணும்கிறது என்னோட விருப்பம். சேலையும் அதே மாதிரி ஒரு ஃபேஷனா உருவாகிட்டிருக்கு.வழக்கமா இல்லத்தரசிகள் மட்டும்தான் சேலையை விரும்புவாங்க. ஆனா, இப்ப சேலையும் ட்ரெண்ட் ஆகியிருக்கு. பல தனியார் நிறுவனங்கள்ல சேலையை யூனிஃபார்மா மாத்தியிருக்காங்க. ஒரு விழாவுக்குப் போகணும்னா சேலையைத்தான் கல்லூரி மாணவி கள்கூட விரும்பறாங்க. விசேஷத்துக்கு சேலை கட்டினால்தான் ஸ்பெஷலா இருக்கும்கிற எண்ணம் இப்போ உருவாகியிருக்கு.

இளைய தலைமுறைகிட்ட சேலையை ட்ரெண்டாக்கற வகைல நிறைய டிசைன்களையும் நிறங்களையும் மாத்திட்டிருக்கோம். உண்மையில் சேலைதான் பெண்களுக்கு அழகையும் மரியாதையையும் கொடுக்குது. இது வியாபாரம்தான் என்றாலும், ஒருவகைல நம்ம பாரம்பரியத்துக்கு மக்களைத் திருப்பற வேலையை நாங்க செஞ்சிகிட்டிருக்கோம். சுந்தரி சில்க்ஸ் பெண்களுக்கான ஸ்பெஷல்னாலும் ஆண்கள், குழந்தைகளுக்கான உடைகளும் நிறையவே இருக்கு. தீபாவளிக்கு நிறைய புதுப்புது டிசைன்களை இப்போதே தயார் பண்ண ஆரம்பிச்சிட்டோம்!” என்கிறார் அதே உற்சாகத்துடன்!

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close